Sunday, August 6, 2023

958. மார்க்கபந்துவின் சந்தேகம்

சிவகுமார் இண்டஸ்டிரீஸில் ஒரு முக்கியப் பதவியிலிருந்த கங்காதரன், வேறு வேலை தேடி ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகியபோது, "சிவகுமார் இண்டஸ்டிரீஸ் நல்லாப் போய்க்கிட்டிருக்கே! ஏன் அங்கேந்து விலக விரும்பறீங்க?" என்று கேட்டார், வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மார்க்கபந்து.

"கம்பெனி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஆனா, அங்கே சூழ்நிலை சரியில்லை" என்றார் கங்காதரன், சுருக்கமாக.

"நான் கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்திக்கத்தான் உங்களைக் கேட்டேன். சிவகுமார் ரொம்பக் கடுமையா நடந்துக்கறாரு, மனிதாபிமானம் இல்லாம இருக்காருன்னு சில பேர் சொல்லக் கேட்டிருக்கேன்"

கங்காதரன் மௌனமாக இருந்தார்.

"சரி. நான் பாக்கறேன். உங்ளை மாதிரி உயர் பதவியில இருக்கறவங்களுக்கு வேற வேலை கிடைச்சுடும். கீழ்நிலையில இருக்கறவங்களுக்குத்தான் கஷ்டம். வெளியில போகவும் முடியாது, அங்கே வேலை செய்யவும் முடியாது" என்றார் மார்க்கபந்து.

"நீங்க சொல்றது சரிதான், சார். கீழ்நிலை ஊழியர்கள் சில பேர் வேற வேலை தேடிக்காமயே, வெறுத்துப் போய், வேலையை விட்டுட்டுப் போயிட்டாங்க!" என்றார் கங்காதரன்.

கங்காதரன் சென்றதும், மார்க்கபந்துவின் உதவியாளன் முத்து, "சார் சிவகுமாரோட பையன் என் நண்பன்தான். தன் மனைவி, பிள்ளைகள்கிட்டக் கூட அவர் அன்போ, கருணையோ இல்லாம நடந்துக்கறாருன்னு அவன் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான். 'என் மேலேயோ, என் அம்மா, தங்கை மேலேயோ கொஞ்சம் கூடப் பாசம் கிடையாது அவருக்கு. தனக்கு என்ன வேணுங்கறதைமட்டும்தான் பார்ப்பாரு. எங்களையெல்லாம் விரோதிகள் மாதிரிதான் நடத்தறாரு. அவர் கம்பெனியில வேலை செய்யறவங்க அவர்கிட்ட வேலை செய்யப் பிடிக்காம வேலையை விட்டுப் போயிடறாங்க. நாங்க எங்கே போறது?'ன்னு எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் சார்!" என்றான்.

"அடப்பாவமே! அவ்வளவு மோசமான ஆளா அவரு?"

"ஆமாம், சார். இதில என்ன ஆச்சரியம்னா, சிவகுமாரோட பரம்பரை ஊருக்கே உதவின பரம்பரைன்னு இன்னிக்கும் சொல்றாங்க. எல்லார்கிட்டேயும் அன்பு காட்டி உதவி செஞ்சவங்க பரம்பரையில வந்த ஒருத்தர் எப்படி சார் இப்படி இருக்க முடியும்?"

"நீ சொல்றதைப் பார்த்தா. அவர் அந்தப் பரம்பரையில பிறந்தவரான்னே சந்தேகப்பட வேண்டி இருக்கு!" என்றார் மார்க்கபந்து.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 96
குடிமை

குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

பொருள்: 
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால், அவன் அந்தக் குடியில் பிறந்தவன்தானா என்று இந்த உலகம் சந்தேகப்படும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...