Wednesday, August 30, 2023

935. வங்கிக் கடன்

"முன்னெல்லாம் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரம் ரொம்ப கஷ்டம். புரோக்கர்கிட்ட ஆர்டர் கொடுக்கணும். அவர் வாங்கினாரா, என்ன விலைக்கு வாங்கினார்னு அன்னிக்கு சாயந்திரம்தான் தெரியும். நாம வாங்கின பங்கோட சர்ட்டிஃபிகேட் நம்ம கைக்கு வர மூணு நாள் ஆகும். அப்புறம், அந்தப் பங்கோட விலை ஏறுதான்னு தினம் பேப்பரைப் பார்த்துக்கிட்டே இருக்கணும். விலை ஏறி இருக்குன்னு பார்த்துட்டு விக்கச் சொன்னா, அன்னிக்கு விலை குறைஞ்சிருக்கும்! இது மாதிரி பல பிரச்னைகள் இருந்த அந்தக் காலத்திலேந்தே நான் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தில ஈடுபட்டிருக்கேனாக்கும்!" என்றார் மகேசன், பெருமையுடன்.

"லாபம் சம்பாதிச்சிருக்கியா?" என்றார் அவர் நண்பர் உமாபதி.

"லாபமும் வரும், நஷ்டமும் வரும். கணக்குப் பாக்கல. கூட்டிக் கழிச்சுப் பர்த்தா, நஷ்டம்தான் வந்திருக்கும்னு வச்சுக்கயேன்!"

"உனக்கு வேற தொழில் இருக்கு. அதில நல்ல வருமானம் வருது. சொத்து பத்தெல்லாம் இருக்கு. உனக்கு ஏம்ப்பா இந்த சூதாட்டம்?"

"அப்படி யோசிச்சு இதை விட்டுடலாம்னு நினைச்சப்பதான், ஆன்லைன் டிரேடிங் வந்தது. இருந்த இடத்திலேயே ஒரு கம்ப்யூட்டரையும், இன்டர்னெட் கனெக்‌ஷனையும் வச்சுக்கிட்டு, அப்பப்ப மாறுகிற விலை நிலவரத்தை வச்சு, எந்தப் பங்கையும் வாங்கலாம், விக்கலாம். இவ்வளவு வசதி இருக்கும்போது, இதை விட மனசு வரல. இவ்வளவு வருஷ அனுபவத்தில, நான் நிறையக் கத்துக்கிட்டிருக்கேனே! டெக்னிகல் அனாலிசிஸ் மாதிரி பல உத்திகளை வேற கத்துக்கிட்டிருக்கேன். முடிவெடுக்க உதவற சில சாஃப்ட்வேர் எல்லாம் வச்சிருக்கேன். அதனால, லாபகரமா செயல்பட முடியுங்கற உறுதியான நம்பிக்கையில, இப்ப ஆன்லைன் டிரேடிங் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"ஆன்லைன் டிரேடிங் வந்து பல வருஷமாச்சேப்பா! அதில லாபம் வருதா?" என்றார் உமாபதி.

"உமாபதி! நான் இன்னும் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஒரு நாள் லாபம் வந்தா, அடுத்த நாள் பெரிய நஷ்டம் வந்துடுது. அதைச் சரி செய்யறதுக்குள்ள பல நாள் ஆயிடுது. ஆனா, நிச்சயம் பெரிய லாபம் சம்பாதிப்பேன்."

"அது சரி. இத்தனை நாளா இல்லாம, வியாபாரத்துக்காக பாங்க்ல கடன் வாங்கி இருக்கியே, எதுக்கு?" என்றார் உமாபதி.

"அதுவா? வியாபாரத்திலே இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து ஸ்டாக் மார்க்கெட்ல போட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குள்ள திரும்ப எடுத்துடலாம்னு பார்த்தேன். ஆனா, நான் வாங்கின பங்குகளோட விலை குறைஞ்சுட்டதாலே, அதையெல்லாம் விக்க முடியல. ஆனா, வியாபாரம் நடக்கணுமே! அதுக்காகத்தான் பாங்க்ல கடன் வாங்கினேன். பங்குகள் விலை ஏறினதும், அதையெல்லாம் வித்துட்டு, பாங்க் கடனை அடைச்சுடுவேன்!" என்றார் மகேசன்.

"மகேசா! நீ தப்புப் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். கடன் வாங்கக் கூடாதுன்னு இவ்வளவு வருஷம் உறுதியா இருந்த உன்னை, உன் ஸ்டாக்  ஸ்டாக் மார்க்கெட் ஈடுபாடு கடன் வாங்க வச்சுடுச்சு. இப்படியே போனா, கடன் அதிகமாகி, நல்லா நடந்துக்கிட்டிருக்கிற உன் வியாபாரத்துக்கும் பாதிப்பு வரும். நீ உன் ஸ்டாக் மார்க்கெட் வியாபாரத்தை நிறுத்தறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது!" என்றார் உமாபதி.

ஆனால், மகேசன் தன் அறிவுரையைக் கேட்பார் என்ற நம்பிக்கை உமாபதிக்கு இல்லை.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

பொருள்: 
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் பெருமையாகக் கருதிக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகி விடுவார்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...