Saturday, August 26, 2023

933. மூணு சீட்டு மகேஷ்

"மூணு சீட்டில மகேஷை அடிச்சுக்கறதுக்கு ஆளே கிடையாதுன்னு என் நண்பர்கள் சொல்லுவாங்க!" என்றான் மகேஷ், பெருமையுடன்.

"விளையாடறது சீட்டாட்டம். இதில பெருமை வேறயா?" என்றாள் அவன் மனைவி மங்கை.

இருவருக்கும் சமீபத்தில்தான் திருமணமாகி இருந்தது.

"பெருமை இல்லாம? சீட்டாட்டத்தில இதுவரைக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன்!" என்றான் மகேஷ்.

"அடேயப்பா! அவ்வளவா? சரி. இது மட்டும் எப்படியோ! இனிமே, நீங்க சீட்டாடக் கூடாது" என்றாள் மங்கை.

மகேஷுக்கு இது பிடிக்கவில்லை. ஆயினும், மனைவியின் மனம் நோகக் கூடாது என்பதால் பேசாமல் இருந்தான்.

லுவலகத்தில் சில நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் சீட்டாட்டம் நடப்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அன்று மாலை அலுவலகம் முடிந்ததும், சிலர் அந்த இடத்துக்குக் கிளம்பினர். ஒரு நண்பன் மகேஷையும் அழைத்தான். மகேஷ் தயக்கத்துடன் அவர்களுடன் சென்றான்.

சில நண்பர்கள் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால், மகேஷ் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தான்.

"என்ன மகேஷ்? உனக்கு சீட்டாடத் தெரியாதா?" என்றான் ஒரு நண்பன்.

"தெரியாதா? நான் ஆடினேன்னா, உங்க எல்லாருக்கும் நஷ்டம்தான் வரும்!" என்றான் மகேஷ்.

"அப்படிப்பட்ட கில்லாடி ஆட்டக்காரனா இருந்தா, ஆட வேண்டியதுதானே?" என்றான் இன்னொரு நண்பன்.

"வேண்டாம். என் மனைவிக்குப் பிடிக்காது."

"எங்க வீட்டில எல்லாம் என்ன எங்களுக்கு ஆரத்தி எடுத்தா சீட்டாட அனுப்பறாங்க? எந்த ஒரு ஆணும் சில காரியங்களை மனைவிக்குத் தெரியாமதான் செய்யணும். அதில சீட்டாடறதும் ஒண்ணு. நீதான் பிரமாதமா ஆடுவேங்கற. நிறைய சம்பாதிச்சு உன் மனைவி கையில கொடுத்தா, கோவிச்சுக்கவா போறாங்க?" என்றான் ஒரு நண்பன்.

மகேஷ் தயக்கத்துடன் ஆட்டத்தில் இறங்கினான். அன்று அவனுக்கு முன்னூறு ரூபாய் லாபம் கிடைத்தது.

"சும்மா ஜம்பம் அடிச்சுக்கறேன்னு நினைச்சோம். உண்மையாகவே நீ நல்லாத்தான் ஆடற!" என்றனர் அவன் நண்பர்கள்.

அதற்குப் பிறகு, வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது சீட்டாடி விட்டு, வீட்டுக்கு தாமதமாகச் செல்ல ஆரம்பித்தான் மகேஷ். ஆஃபீசில் வேலை அதிகம் என்று மங்கையிடம் கூறினான்.

"ஏன் இந்த மாசம் இவ்வளவு குறைச்சலாப் பணம் கொடுக்கறீங்க?" என்றாள் மங்கை.

"கொஞ்சம் கடன் வாங்கி இருக்கேன். அதை அடைக்கிற வரை இவ்வளவுதான் கொடுக்க முடியும்" என்றான் மகேஷ்.

"கடனா? எதுக்கு?" என்றாள் மங்கை, அதிர்ச்சியுடன்.

மகேஷ் பதில் பேசாமல் இருந்தான்.

"சொல்லுங்க!" என்றாள் மங்கை.

"மங்கை! சாயந்தர நேரங்கள்ள உனக்குத் தெரியாம சீட்டாடிட்டு வரேன்."

"ஆஃபீஸ்ல வேலைன்னு நீங்க சொன்னபோது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ஏதோ தில்லுமுல்லு பண்றீங்கன்னு நினைச்சேன். சரி, நீங்கதான் சீட்டாட்டத்தில புலியாச்சே! சீட்டாட்டத்தில நீங்க நிறைய சம்பாதிச்சிருக்கணுமே!"

"கடந்த காலத்தில சீட்டாட்டத்தில நான் சம்பாதிச்சிருக்கேங்கறதால, எனக்குத் திறமை இருக்குங்கற நம்பிக்கையிலதான் விளையாட ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில லாபம் வந்தது. அப்புறம் நஷ்டம் வர ஆரம்பிச்சுது. மறுபடி லாபம் வரும்னு நினைச்சுக் கடன் வாங்கி ஆடினேன். ஆனா, நஷ்டம் அதிகமாகிக்கிட்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில போதும்னு நிறுத்திட்டேன். ஆனா, வாங்கின கடனை அடைக்கணும்."

"அந்த மட்டும் நிறுத்தினீங்களே! அதுவே பெரிய விஷயம்தான். ஆமாம், எவ்வளவு கடன் வாங்கி இருக்கீங்க?"

மகேஷ் தயங்கியபடியே, "ஒரு லட்சத்துக்கு மேல போயிடுச்சு. வட்டி வேற கட்டணும். ஐ ஆம் சாரி" என்றான்.

"சீட்டாட்டத்தில ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சதாப் பெருமையா சொல்லிக்கிட்டிருந்தீங்க. இப்ப அந்த ஐம்பதாயிரம் ரூபாய் போனதோட இல்லாம, அதுக்கும் மேல ஒரு லட்ச ரூபாய் நஷ்டம் ஆகி இருக்கு. இனிமேலாவது 'என்னை எல்லாரும் மூணு சீட்டு மகேஷ்னு சொல்லுவாங்க, நான் சீட்டாடியே ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சிருக்கேன்' அப்படின்னெல்லாம் பெருமை பேசாம இருங்க!" என்றாள் மங்கை, கடுமையான குரலில்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது

குறள் 933:
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்: 
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால், உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் போய் விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...