இந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்தான் மகேந்திரன்.
தொலைபேசியில் பேசியவர், அவன் பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு, "வர சனிக்கிழமை சாயந்திரம் 6 மணிக்கு இலவச அறிமுகக் கூட்டம் நடத்தறோம். அங்கே விவரங்கள் சொல்றோம்" என்றார்.
இலவச அறிமுகக் கூட்டத்துக்கு மகேந்தரன் சென்றபோது, கூட்டம் நடக்கவிருந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் திட்டம் பற்றி விளக்கினார்.
"உங்கள்ள சில பேர் ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் பண்ணி இருப்பீங்க. ஸ்டாக் மார்க்கெட்ல பெரும்பாலும் லாபம் கிடைக்காது. ஒரு பங்கை வாங்கிட்டு, அது விலை குறைஞ்சுட்டா, மறுபடி பழைய விலை வரதுக்குப் பல மாசங்கள், பல வருஷங்கள் கூடக் காத்துக்கிட்டிருப்பாங்க.
"சில சமயம், பழைய விலை வரவே வராது. வாங்கின பங்கை விக்க முடியாம பணம் முடங்கிப் போய், வேற பங்கை வாங்கவும் பணம் இல்லாம நொந்து போய் இருப்பதுதான் பல பேரோட கதை.
"ஆனா, கமாடிடீஸ் மார்க்கெட் அப்படி இல்லை. ஒரு டிரேடிலேயே ஆயிரம் ரெண்டாயிரம்னு லாபம் பார்க்கலாம். சில சமயம் நஷ்டம் வரும். ஆனா, ஒட்டுமொத்தமா நிறைய லாபம் வர வாய்ப்பு இருக்கு.
"அதோட, கமாடிடீஸ் மார்க்கெட் ராத்திரி பதினொன்றரை வரைக்கும் உண்டு. சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் மார்க்கெட் சூடு பிடிக்கும். அதனால, வேலைக்குப் போறவங்க கூட டிரேட் பண்ணலாம்.
"எங்க ஆஃபீஸ்ல நிறைய டர்மினல்ஸ் வச்சிருக்கோம். எங்க ஆபரேட்டர் மூலமா, ஒவ்வொரு டர்மினலிலேயும் ஏழெட்டு பேர் ஒரே நேரத்தில டிரேட் பண்ணலாம். நாங்க சில ரெகமெண்டேஷன்கள் கொடுப்போம். உங்க விருப்பப்படியும் நீங்க டிரேட் பண்ணலாம்.
"ஆரம்பத்தில, பத்தாயிரம் ரூபா முதலீடு இருந்தா போதும். நீங்க சம்பாதிக்கிற லாபத்தை, வாராவாரம் சனிக்கிழமை உங்க பாங்க் அக்கவுன்ட்டுக்கு அனுப்பிடுவோம்.
"அக்கவுன்ட் ஓபன் பண்றவங்க இங்கேயே ஃபார்ம் ஃபில் அப் பண்ணிக் கொடுத்துட்டு, ஐடி புரூஃப் மத்த விவரங்களையெல்லாம் திங்கட்கிழமை அன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல கொண்டு கொடுத்தா, உங்க அக்கவுன்ட் ஓபன் ஆயிடும். அடுத்த நாளிலேந்தே நீங்க டிரேட் பண்ணலாம்."
அவர் கூறியவற்றால் ஈர்க்கப்பட்டு, மகேந்திரன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் அலுவலகத்துக்குச் சென்று டிரேடிங்கைத் துவக்கினான். முதல்நாளே, அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது.
"ஏங்க, ஏற்கெனவே ரெண்டு லட்சம் ரூபாய்க்கு மேல நஷ்டமாயிடுச்சு. இதோட விட்டுடுங்க. வேலைக்குப் போய் சம்பாதிக்கிறீங்க. இந்த கமாடிடி டிரேடிங் எல்லாம் எதுக்கு?" என்றாள் மகேந்திரனின் மனைவி வனிதா.
"முதல் நாளே ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிச்சேன். அது மாதிரி ஒவ்வொரு நாளும் சம்பாதிக்க முடியுமே! நடுவில சில டிரேட்ஸ் நஷ்டமாயிடுச்சு. குறைஞ்ச நஷ்டத்திலேயே வெளியே வந்திருக்கணும். நஷ்டம் மாறி லாபம் வரும்னு காத்திருந்தது தப்பாப் போச்சு. இப்பதான் சில உத்திகளை எல்லாம் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். இனிமே நஷ்டத்தைக் குறைச்சு லாபம் வர மாதிரி செயல்படுவேன்!" என்றான் மகேந்திரன்.
'இவருக்கு எப்படிப் புரிய வைப்பது!' என்ற கவலையுடன் தன் கணவனைப் பார்த்தாள் வனிதா.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 94
சூது
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
No comments:
Post a Comment