Friday, August 25, 2023

930. உணவகத்தில் ஒரு சம்பவம்

செல்வம் தன் பெற்றோருடன் அந்த உணவகத்தில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்திலிருந்த அறையிலிருந்து உரத்த குரல்கள் கேட்டன.

அந்த உணவகம் நான்கைந்து அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததால், என்ன நிகழ்ந்தது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், இரண்டு மூன்று பேர் இரைந்து பேசிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்டது.

"அடுத்த ரூம்ல ஏதோ தகறாரு போல இருக்கு" என்றார் செல்வத்தின் தந்தை சம்பந்தம்.

"அதைப் பத்தி நமக்கு என்ன? நாம வந்தமா, சாப்பிட்டமா, போகணுமான்னு இருக்கணும்" என்றாள் செல்வத்தின் தாய் சுந்தரி.

அப்போது அந்த உணவக ஊழியர் ஒருவர் செல்வத்திடம் வந்து, "சார், நீங்க பக்கத்துத் தெருவில இருக்கற பாங்க்லதானே வேலை செய்யறீங்க?" என்றார், தயக்கத்துடன்.

"ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான் செல்வம்.

"எனக்கு அங்கேதான் அக்கவுன்ட் இருக்கு. பாங்க்குக்கு வரப்ப உங்களைப் பாத்திருக்கேன்" என்ற அந்த ஊழியர், மீண்டும் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! உங்க பாங்க்ல வேலை செய்யற ஒத்தர் பக்கத்து ரூம்ல குடிச்சுட்டு கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காரு. முதலாளி போலீசைக் கூப்பிடப் போறேன்னு சொல்றாரு. நீங்க அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைச்சுக்கிட்டுப் போயிட்டீங்கன்னா, பிரச்னை இல்லாம இருக்கும். உங்களை நான் பாங்க்ல பாத்த மாதிரிதான் அவரையும் பாத்திருக்கேன். எனக்கு அவரைப் பழக்கம் இல்லாட்டாலும், தெரிஞ்சவர்ங்கறதால உதவி செய்யலாம்னுட்டுதான் உங்ககிட்ட கேக்கறேன்" என்றார்.

"அப்படியா?" என்ற செல்வம், பக்கத்து அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பி வந்து, "அப்பா! அவன் என்னோட வேலை செய்யற ராஜவேலுதான். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஆட்டோவில வீட்டுக்குப் போயிடுங்க. நான் அவனை வீட்டில கொண்டு விட்டுட்டு வரேன்" என்று தன் பெற்றோர்களிடம் சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குச் சென்றான்.

ரவு செல்வம் வீட்டுக்கு வந்ததும், "என்ன செல்வம், என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம்.

"என்னோட வேலை செய்யற ராஜவேலு அதிகமாக் குடிச்சுட்டு, ஒரு ஹோட்டல் ஊழியரோட தகராறு பண்ணி இருக்கான். சமாதானப்படுத்த வந்த ஒத்தரை அடிக்கப் போயிருக்கான். ஹோட்டல் முதலாளி போலீசுக்கு ஃபோன் செய்யறதா இருந்தாரு. நான் அவரை சமாதானப்படுத்திட்டு, ராஜவேலுவை அவன் வீட்டில கொண்டு விட்டுட்டு வந்துட்டேன்" என்றான் செல்வம்.

"நல்ல காரியம் செஞ்சே!" என்றபடி, மகனை உற்றுப் பார்த்தார் சம்பந்தம்.

"என்னப்பா பாக்கறீங்க?

"நல்லவேளை, உன் நண்பன் ராஜவேலு இடத்தில நீ இல்லாமல் போனியேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்!"

தனக்கும் குடிப்பழக்கம் இருப்பதால், ராஜவேலுவுக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்பதைத் தந்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்த செல்வம், தலைகுனிந்து கொண்டான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள்: 
ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது, மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...