"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். யாரை விட்டு சொல்லச் சொன்னா சரியா இருக்கும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றார் அவள் கணவர் பரமசிவம்.
சற்று நேரம் கழித்து, "அவன் பள்ளிக்கூட வாத்தியார் சுந்தரமூர்த்தி இப்ப இந்த ஊருக்கு வந்துட்டாராம். நானே அவரைப் போய்ப் பார்த்துட்டு வரணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அவர் சொன்னா, சேகர் கண்டிப்பாக் கேப்பான். நான் போய் அவரைப் பார்த்துட்டு, அவர்கிட்ட சேகரைப் பத்தி சொல்லிட்டு, அதுக்கு அப்புறம் சேகரை அவர்கிட்ட அழைச்சுக்கிட்டுப் போறேன்" என்றார் பரமசிவம், தன் மனைவியிடம்.
"அவரை நம்ம வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லுங்களேன். அப்ப அவர் சேகர்கிட்ட பேசலாம் இல்ல?"
"இல்லை. அவரை இதுக்காகத்தான் நாம சாப்பிடக் கூப்பிட்ட மாதிரி இருக்கும். சாப்பிடறதுக்கு அப்புறமாக் கூப்பிடலாம்" என்றார் பரமசிவம்.
"சேகர் எப்படி இருக்கான்?" என்றார் சுந்தரமூர்த்தி.
"அவனைப் பத்தித்தான் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன். இப்ப அவனுக்குக் குடிப்பழக்கம் வந்திருக்கு. நானும், அவன் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அவன் கேக்கல. உங்ககிட்ட ஒருநாள் அழைச்சுக்கிட்டு வரேன். நீங்கதான் அவனுக்கு புத்தி சொல்லணும்" என்றார் பரமசிவம்.
"சேகர் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு இந்தப் பழக்கம் வந்திருக்குன்னு கேக்க ரொம்ப வருத்தமா இருக்கு. ஆனா, நான் சொல்லி அவன் திருந்துவான்னு எனக்குத் தோணல."
"என்னங்க இப்படி சொல்றீங்க? சேகர் உங்க மேல நிறைய மதிப்பு வச்சிருக்கான். நீங்க சொன்னாக் கண்டிப்பாக் கேப்பான்."
"உங்க மேலேயும், உங்க மனைவி மேலேயும் அவனுக்கு மதிப்பு இல்லையா என்ன? நீங்க சொல்லி அவன் ஏன் கேக்கல? கேக்கணும்னுதான் நினைப்பான். ஆனா, அவனால இந்தப் பழக்கத்தை விட முடியாது. இந்தப் பழக்கத்தோட வலிமை அப்படி. நான் சொன்னாலும் அதுதான் நடக்கும். நீங்க அவனை அழைச்சுக்கிட்டு வாங்க. நான் சொல்றேன். ஆனா, அதனால பலன் கிடைக்கும்னு எதிர்பாக்காதீங்க!" என்றார் சுந்தரமூர்த்தி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
No comments:
Post a Comment