Wednesday, August 23, 2023

928. குடிக்காதவன்!

"இந்த பார்ட்டியில மது இருக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேனே!" என்றான் சத்யா.

"ஏண்டா, பார்ட்டின்னா டிரிங்க்ஸ் இல்லாமயா? ஏன், நீ குடிக்க மாட்டியா என்ன?" என்றான் சந்திரன்.

"உனக்குத் தெரியாதா? நம்ம சத்யா மகாத்மா காந்தியோட 'சத்திய சோதனை' புத்தகத்தை முப்பது தடவைக்கு மேல படிச்சிருக்கான். தண்ணியைத் தவிர அவன் வேற எதையும் குடிக்க மாட்டான். நான் தண்ணின்னு சொன்னது கிணத்தில இருக்குமே, அந்தத் தண்ணியை!" என்றான் மனோகர்.

"கிண்டல் எல்லாம் வேண்டாண்டா. நான் குடிக்கறதில்ல. அவ்வளவுதான்!" என்றான் சத்யா.

னோகர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவனுடைய கைபேசி ஒலித்தது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால், அவன் அப்போது ஃபோனை எடுக்கவில்லை.

வீட்டுக்குச் சென்றதும் ஃபோனை எடுத்துப் பார்த்தபோது, சத்யாவிடமிருந்து ஃபோன் வந்திருந்தது தெரிந்தது.

உடனே சத்யாவுக்கு ஃபோன் செய்தான்.

மறுமுனையில் ஃபோன் எடுக்கப்பட்டதும், "என்னடா? ஃபோன் பண்ணி இருந்தியே!" என்றான்.

"ஏன் மிஸ்டர், ஃபோன்ல யார் பேசறாங்கன்னு தெரியாம, எடுத்தவுடனேயே வாடா போடான்னா பேசுவீங்க?" என்றார் மறுமுனையில் பேசியவர்.

"சாரி சார். என் நண்பன் சத்யாகிட்டேந்து ஃபோன் வந்திருந்தது. அவன் நம்பருக்குத்தான் ஃபோன் பண்ணினேன். அவன்தான் பேசறான்னு நினைச்சுப் பேசிட்டேன். நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?" என்றான் மனோகர், பதட்டத்துடன்.

"நான் டிராஃபிக் போலீஸ். உங்க நண்பர் சத்யா பைக் ஓட்டிக்கிட்டிருந்தப்ப அவரை சோதிச்சதில, அவர் குடிச்சிருக்கார்னு தெரிஞ்சது. ஃபைன் கட்ட அவர்கிட்ட பணம் இல்ல. கையில ஏ.டி.எம் கார்டும் இல்லையாம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினாரு. நீங்க எடுக்கல. அவரோட ஃபோனை நான் வாங்கி வச்சுக்கிட்டேன். அதனாலதான், ஃபோன் வந்ததும், நான் எடுத்துப் பேசினேன். அவர் ஆயிரம் ரூபா அபராதம் கட்டணும். பணத்தை எடுத்துக்கிட்டு ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு வரீங்களா?"

"இருக்காதே! சத்யா குடிக்க மாட்டானே!" என்று சொல்ல வாயெடுத்த மனோகர், உண்மையை உணர்ந்தவனாக, "சரி சார். வரேன்" என்றான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை

குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள்: 
கள்ளுண்பவன், தான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளித்து வைக்கப்பட்ட குற்றம் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...