அவனுடன் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இளம் அதிகாரிகள் அந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
பயிற்சி முடியும் தறுவாயில், பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் அவர்களிடம் பேசினார்.
"ஒரு மாசமா எல்லாரும் பயிற்சியில கலந்துக்கிட்டீங்க. இங்கேயே தங்கி மெஸ்ஸில சாப்பிட்டீங்க. இந்த சாப்பாடு உங்களுக்கு அலுத்துப் போயிருக்கும். அதனால, உங்க எல்லாருக்கும் நாளைக்கு ஹோட்டல் ரத்னாவில டின்னர் ஏற்பாடு செஞ்சிருக்கோம். இந்தப் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில மது அருந்த அனுமதி இல்ல. ஆனா, நாளைக்கு நடக்கப் போற பார்ட்டியில டிரிங்கஸ் உண்டு!" என்று கூறி, அவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
பலரும் 'ஓ' என்று கூவி, அவர் கூறியதை வரவேற்றனர்.
"என்னப்பா! எல்லாரும் பெக் மேல பெக்னு வெளுத்துக் கட்டிக்கிட்டிருக்காங்க. நீ மட்டும் கூல் டிரிங்க்கை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்க! பழக்கம் இல்லையா?" என்றார் பயிற்சிக் கல்லூரி முதல்வர், பணிதரனிடம் வந்து.
"இல்லை சார்!" என்றான் பரணிதரன், பணிவுடன்.
"பல பேர் இந்தப் பழக்கம் இல்லாதவங்களாத்தான் இருப்பாங்க. இங்கேதான் ஆரம்பிப்பாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல ஹோட்டல்ல உயர்தமான சரக்கு கிடைக்கறப்ப, சும்மா விடுவாங்களா? இதையே இந்த ஹோட்டல்ல தனியா வந்து பணம் கொடுத்து சாப்பிட முடியுமா? பரவாயில்ல, கொஞ்சம் குடி" என்று ஒரு கோப்பையை அவனிடம் நீட்டினார் அவர்.
"மன்னிச்சுக்கங்க சார்! எனக்கு வேண்டாம்" என்றான் பரணிதரன், சங்கடத்துடன்.
"என்னப்பா நீ? நாளைக்கே நீ பெரிய அதிகாரியா ஆனப்பறம், நிறைய மீட்டிங் எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டி இருக்கும். மது இல்லாத மீட்டிங்கே கிடையாது. மரியாதைக்காகவாவது கொஞ்சம் குடிக்க வேண்டி இருக்கும். அதனால, பழகிக்க. அளவோட குடிச்சா ஒண்ணும் ஆகாது."
"இல்லை சார். என்னோட கிராமத்தில யாரும் குடிக்கறதில்லேன்னு உறுதியா இருக்காங்க. கிராமத்திலேந்து நகரங்களுக்கு வேலைக்காகப் போனப்பறமும், நாங்க அப்படித்தான் இருக்கணும்னு எங்க ஊர்ப் பெரியவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி நகரங்களுக்குப் போய் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டவங்க, எங்க ஊர்ப் பெரியவங்க முகத்தில முழிக்க பயந்துகிட்டு கிராமத்துக்கே வரதில்லை."
"என்னப்பா நீ சொல்றது? நீயும் அது மாதிரி கிராமத்துக்குப் போகாம இருந்துட்டுப் போ. அப்படியே போனாலும், எனக்குக் குடிப்பழக்கம் இல்லேன்னு சொல்லிடு. அவங்களுக்குத் தெரியவா போகுது? உன் கிராமத்தில இருக்கற பெரியவங்களுக்காக நீ ஏன் பயப்படணும்?"
"மன்னிச்சுடுங்க சார்! எங்க ஊர்ப் பெரியவங்களை நான் ரொம்ப மதிக்கிறேன். நான் குடிக்காம இருந்தாதான், அவங்களுக்கு என் மேல ஒரு மதிப்பு இருக்கும். அந்த மதிப்பை நான் இழக்க விரும்பல!" என்றான் பரணிதரன், பணிவும் உறுதியும் கலந்த குரலில்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 93
கள்ளுண்ணாமை
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
No comments:
Post a Comment