"நஷ்டம் வரும்னு ஏன் நினைக்கறே? அவன் தொழில் நல்லா நடக்கும். கவலைப்படாதே!" என்றார் அவருடைய நண்பர் காந்திராமன்.
"நான் பயந்தபடியே நடந்துடுச்சு. என் பெரிய பையன் சொத்துக்களை அடமானம் வச்சு, தொழில் செய்யக் கடன் வாங்கி இருக்கான்" என்றார் செல்வரத்தினம், கவலையுடன்.
"தொழில் செய்யறவங்க கடன் வாங்கறது நடக்கறதுதானே! சொத்துக்களை அடமானம் வச்சதுக்காக, நீ கவலைப்பட வேண்டியதில்லை. அது சரி. உன் ரெண்டாவது பையன் எப்படி இருக்கான்?"என்றார் காந்திராமன்.
"இருக்கான்" என்ற காந்திராமன், "அவன்தான் வேலைக்குப் போறானே! சமாளிச்சுப்பான்" என்றார் செல்வரத்தினம்.
தன் இரண்டாவது மகனைப் பற்றிப் பேசும்போதும், செல்வரத்தினம் ஏன் சுரத்தில்லாமல் பேசுகிறார் என்ற வியப்பு காந்திராமனுக்கு ஏற்பட்டது.
"போச்சு. எல்லாமே போச்சு. எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து! இப்படி அழிச்சுட்டானே!" என்றார் செல்வரத்தினம்.
"என்ன ஆச்சு? உன் பெரிய பையனுக்குத் தொழில்ல நஷ்டமா? அடமானம் வச்ச சொத்து போயிடும் போல இருக்கா?" என்றார் காந்திராமன்.
"அவன் தொழில் நல்லாத்தான் நடந்துக்கிட்டிருக்கு. சொத்து அடமானத்திலதான் இருக்கு. ஆனா, அதுக்கு ஒண்ணும் ஆபத்து இல்ல. ரெண்டாவது மகனுக்கு நான் கொடுத்த சொத்துக்கள்தான் போயிடுச்சு."
"ஏன்? அவன் வேலைக்குத்தானே போய்க்கிட்டிருக்கான்?"
"வேலைக்குத்தான் போய்க்கிட்டிருந்தான். ஆனா, அவன்கிட்ட குடிப்பழக்கமும், சூதாடற பழக்கமும் இருந்தது. அப்பவே கவலைப்பட்டேன். போதாததுக்கு ஒரு விலைமாதுவோட சகவாசம் வேற ஏற்பட்டுடுச்சு. அதுக்கப்பறம்தான் நிலைமை மோசமாப் போச்சு. அவளுக்குக் கொடுத்த பணம், சூதாட்டத்தில இழந்த பணம், குடிக்கான செலவுன்னு பல வழிகள்ள பணம் போய், வருமானம் போதாம, கடன் வாங்கி, கடனை அடைக்க சொத்தையெல்லாம் வித்து, இந்தப் பழக்கங்களினால வேலையும் போய், இப்ப குடிக்கவோ, சூதாடவோ காசு இல்லை. காசு இல்லேன்னதும், அவளும் இவனை விரட்டி விட்டுட்டா. இப்ப, பைத்தியம் பிடிச்சவன் மாதிரி வீட்டில உட்காந்திருக்கான். அவனோட சாப்பாட்டுச் செலவுக்கே நான்தான் பணம் கொடுக்கணும் போல இருக்கு. மூதேவியைத் தேடிப் போனான். மூதேவி இருக்கற இடத்தில, லட்சுமி எப்படி இருப்பா? அதான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டா!"
குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் செல்வரத்தினம்.
ஆதரவுடன், அவர் தோளை அணைத்துக் கொண்டார் காந்திராமன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 92
வரைவின் மகளிர் (விலைமாதர்கள்)
குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
No comments:
Post a Comment