ராஜுவின் மகனுக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆயினும், அவன் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஒரு தனியார் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது.
"என்னங்க செய்யப் போறோம்? பையன் படிப்புக்காக சென்னைக்கு மாற்றல் கேட்டு வங்கிக்கிட்டு வந்ததில, லாரி வாடகை, ரயில் டிக்கட்னு நிறையப் பணம் செலவழிஞ்சதோட இல்லாம, வீட்டுக்கான வாடகை அட்வான்ஸ், மற்ற செலவுகள்னும் கையில இருந்த எல்லாப் பணமும் செலவழிஞ்சுடுச்சு. ஃபீஸ் கொஞ்சம் குறைவா இருந்திருந்தா சமாளிச்சுக் கட்டி இருக்கலாம். இங்கே ஃபீஸ் ரொம்ப அதிகமா இருக்கே! இப்ப என்ன செய்யறது? என் நகைகளை வேணும்னா அடகு வச்சுடலாமா?" என்றாள் ராஜுவின் மனைவி கல்யாணி.
"அதெல்லாம் வேண்டாம். இங்கேதான் என் நண்பன் ராம்குமார் இருக்கானே! கடந்த கலத்தில அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கான். இப்பவும் செய்வான். அவனைக் கேட்டுப் பாக்கறேன்" என்ற ராஜு, ராம்குமாருக்கு ஃபோன் செய்தான்.
ஃபோன் பேசி முடித்ததும், "நான் சொல்லல? சாயந்திரம் அவன் வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கிட்டுப் போகச் சொல்றான்" என்றான் ராஜு, உற்சாகமாக.
அன்று இரவு வீட்டுக்குச் சோர்வுடன் வந்த கணவனைப் பார்த்து, "ஏங்க இவ்வளவு நேரம்? பணம் வாங்கிட்டு வர நேரமாயிடுச்சா?" என்றாள் கல்யாணி.
"பணம் கிடைக்கலை!" என்றான் ராஜு, ஏமாற்றத்துடன்.
"ஏன்? சாயந்திரம் வந்து வாங்கிக்கிட்டுப் போகச் சொல்லிச் சொன்னார், இல்ல?"
"சொன்னான். ஆனா, நான் போனப்ப, ராம்குமார் வீட்டில இல்ல. அவனோட மனைவிதான் இருந்தா. அவரால பணம் ஏற்பாடு பண்ண முடியலேன்னு சொல்லச் சொன்னார்னு சொல்லிட்டா. எனக்கென்னவோ, ராம்குமார் வீட்டுக்குள்ளேயே இருந்தான்னுதான் தோணிச்சு!"
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"அவங்க கல்யாணத்துக்கப்பறம், இப்பதான் முதல் தடவையா அவங்க வீட்டுக்குப் போறேன். இத்தனை நாளா, நாம வேற ஊர்லதானே இருந்தோம்? முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்கற கணவனோட நண்பனை உள்ளே வாங்கன்னு கூடக் கூப்பிடாம, வாசலிலேயே நிறுத்திப் பேசி அனுப்பிட்டா. ஏதோ காரணத்தினால, அவனால எனக்கு உதவ முடியலேன்னு நினைக்கிறேன்!" என்றான் ராஜு.
"பரவாயில்ல விடுங்க. நாளைக்குக் காலையில என் நகைகளை அடகு வச்சுப் பணம் வாங்கிட்டு வந்துடுங்க" என்றாள் கல்யாணி.
சற்று நேரம் கழித்து, ராஜுவின் கைபேசி ஒலித்தது. ராஜு அறைக்குள் இருந்தான். சமையற்கட்டிலிருந்த கல்யாணிக்கு ராஜு பேசியது கேட்கவில்லை.
ராஜு பேசி முடித்து விட்டு, சமையற்கட்டுக்கு வந்தான்.
"பணம் கிடைச்சுடுச்சு!" என்றான் ராஜு, உற்சாகத்துடன்.
"உங்க நண்பர் ஃபோன் பண்ணிப் பணம் தரேன்னு சொல்லிட்டாரா?" என்றாள் கல்யாணி, வியப்புடன்
"ஆமாம். ஆனா பேசினது ராம்குமார் இல்ல, சுதாகர்னு இன்னொரு நண்பன். நான் சென்னைக்கு வந்தப்பறம், அவனை இன்னும் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த காலேஜ் அட்மிஷன் எல்லாம் முடிஞ்சப்பறம் நிதானமா தொடர்பு கொள்ளலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள அவனே ஃபோன் பண்ணிட்டான். ராம்குமார் பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டதைப் பத்தி அவன்கிட்ட சொன்னேன். அவன் 'என்னைக் கேட்டிருந்தா நான் கொடுத்திருப்பேனே'ன்னு சொல்லிட்டுப் பணத்தை உடனே என் பாங்க் அக்கவுன்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டான்!"
"அட, அவ்வளவு நல்லவரா? அப்ப, நீங்க அவர்கிட்டேயே கேட்டிருக்கலாமே?" என்றாள் கல்யாணி.
"ராம்குமார்தான் எனக்கு ரொம்ப நெருக்கம். அதோட, அவனுக்கு மத்தவங்களுக்கு உதவற குணம் உண்டு. அதனாலதான், அவன்கிட்ட கேட்டேன்."
"நீங்க உதவி செய்வார்னு நினைச்ச ராம்குமார் உதவி செய்யல. ஆனா, இன்னொருத்தர் உதவி செஞ்சிருக்காரு. நீங்க ராம்குமாரை சரியாப் புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன்" என்றாள் கல்யாணி.
"அப்படி இல்லை. அவன் இதுக்கு முன்னால எனக்கு உதவி இருக்கானே! சுதாகர் ஒரு விஷயம் சொன்னான். கல்யாணத்துக்கப்புறம் ராம்குமார் ரொம்ப மாறிட்டானாம். தன் மனைவியைக் கேக்காம எதுவும் செய்யறதில்லையாம். எனக்கு உதவி செய்யறதைக் கூட, அவன் மனைவிதான் தடுத்திருப்பான்னு சுதாகர் சொல்றான். அதனாலதான், ராம்குமார் என்னைப் பாக்க தைரியம் இல்லாம, வீட்டில இருந்துக்கிட்டே இல்லேன்னு சொல்லி இருக்கான். ராம்குமார் முன்னே எல்லாம் அறக்கடளைகளுக்கு நிறைய நன்கொடைகள் கொடுப்பான். இப்ப அதெல்லாம் கூட நின்னு போச்சாம். அவன் மனைவிதான் காரணம்னு சுதாகர் சொல்றான். ராம்குமார் இப்படி மாறுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!" என்றான் ராஜு.
"அவரைப் பாத்து, நீங்களும் கொஞ்சமாவது மனைவி பேச்சைக் கேட்டு நடக்கக் கத்துக்கங்க!" என்றாள் கல்யாணி, சிரித்துக் கொண்டே.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 91
பெண்வழிச் சேறல் (காமத்தினால் மனைவியின் விருப்பப்படி நடத்தல்)
குறள் 908:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
No comments:
Post a Comment