ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களின் வறுமையைப் போக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் மகேஷ்குமார். அவருடைய கருத்துக்கள் உலக அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்த தே.ஜ.க. அவருடைய கருத்துக்களைப் பொருட்படுத்தவில்லை.
மகேஷ்குமார் தங்கள் அரசின் பொருளாதார ஆலோசகராக இருப்பார் என்ற ம.தே.க.வின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனால், தேர்தலில் ம.தே.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
மகேஷ்குமார், அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ம.தே.க. ஆட்சி அமைந்து சுமார் ஒரு வருடம் கழித்துப் பிரதமரைச் சந்தித்தார் மகேஷ்குமார்.
"ரெண்டு மூணு மாசமா, உங்களைப் பாக்க நேரம் கேட்டுக்கிட்டிருக்கேன். இப்பதான் என்னைப் பார்க்க நேரம் கொடுத்திருக்கீங்க!" என்றார் மகேஷ்குமார், குற்றம் சாட்டும் தொனியில்.
"சொல்லுங்க!" என்றார் பிரதமர்.
"என்னோட பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில இருக்கறவங்களை மேம்படுத்தற நோக்கத்தைக் கொண்டவைன்னு உங்களுக்குத் தெரியும். நீங்க என்னைப் பொருளாதார ஆலோசகராக நியமிச்சப்ப, என்னோட ஆலோசனைகள்படி செயல்படுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா இந்த ஒரு வருஷமா, நீங்க கார்ப்பரேட்கள், ஏகபோக நிறுவனங்கள் மாதிரி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளைத்தான் செயல்படுத்தறீங்க. அதனால, நாட்டில வறுமை அதிகமாத்தான் ஆகி இருக்கு."
"உங்களை ஆலோசகரா வச்சுக்கப் போறோம்னு நாங்க சொன்னது எங்களோட தேர்தல் வெற்றிக்காகத்தான். இதை நாங்க ஜூம்லான்னு சொல்லுவோம். அப்படிச் சொன்னதாலதான், கடுமையான போட்டியை சமாளிச்சு, எங்களால வெற்றி பெற முடிஞ்சுது. சொன்னபடியே, உங்களை ஆலோசகரா வச்சுக்கிட்டிருக்கோம். உங்க ஆலோசனைகளை நாங்க செயல்படுத்தாட்டா என்ன? உங்களுக்கு சம்பளம் வந்துக்கிட்டிருக்கு இல்ல?" என்றார் பிரதமர், சிரித்தபடி.
"அப்படின்னா, உங்க தேர்தல் வெற்றிக்காக என்னை நீங்க பயன்படுத்திக்கிட்டிருக்கீங்க. நீங்க செய்யறதெல்லாம் என்னோட ஆலோசனைப்படிதான் என்கிற தவறான எண்ணம் எல்லார் மனசிலேயும் உண்டாகி இருக்குமே! உங்க அரசியலுக்காக, என்னோட நல்ல பேரைக் கெடுத்துட்டீங்களே!" என்றார் மகேஷ்குமார், கோபத்துடன்.
"ராஜினாமான்னு ஒண்ணு இருக்கே, தெரியுமா?" என்றார் பிரதமர், சிரித்தபடி.
மகேஷ்குமார் கோபத்துடன் வெளியேறினார்.
அன்றே தன் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்குமார், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே ம.தே.க. தன்னைப் பயன்படுத்திக் கொண்டதையும், தன் யோசனைகள் எதையுமே அரசு செயல்படுத்தவில்லை என்பதையும், தான் ஏமாற்றப்பட்டிருப்பதால் தனக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டார்.
ம.தே.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் தங்கள் வாழ்க்கை இன்னும் கடினமாகி விட்டதாக சாதாரண மக்கள் வருந்திக் கொண்டிருந்த நிலையில், மகேஷ்குமாரின் ஆலோசனைகள் செயல்படுத்தப்பட்டு, வரும் காலத்தில் தங்களுக்குச் சில நன்மைகள் நடக்கும் என்று அவர்களுக்கு இருந்த மெலிதான நம்பிக்கை இழையையும், மகேஷ்குமாரின் ராஜினாமா அறுத்து விட்டது.
இன்னும் நான்கு ஆண்டுகள் இந்தக் கொடுமையான ஆட்சியில் வருந்த வேண்டி இருக்குமே என்ற கவலை மக்களைப் பீடித்தது.
ஆயினும், யாருமே எதிர்பாராத விதத்தில், ம.தே.க. கட்சியில் ஏற்பட்ட பிளவால், அவர்கள் ஆட்சி அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்தது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
No comments:
Post a Comment