"வேலை செஞ்சேன், சம்பளம் கொடுத்தாரு. அதோட சரியாப் போச்சு. இப்ப, என்னோட முன்னேற்றத்துக்காக, அவர் போட்டி கம்பெனியோட சேர்ந்து வேலை செய்யறேன். அதில என்ன தப்பு இருக்கு?" என்றான் மோகன்.
"தப்புதாண்டா! அவர் ரொம்ப நல்ல மனுஷன்னு நீயே சொல்லி இருக்கே. எனக்கு உடம்பு சரியில்லாம போனபோது, அவர் தானாவே உனக்கு லீவு கொடுத்து, எனக்கு மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்தாரு. என்னை ஆஸ்பத்திரியில வந்து பார்த்து, நலம் விசாரிச்சாரு. அவ்வளவு உயர்ந்த மனுஷன் அவரு! இப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்குக் கெடுதல் செய்ய நினைச்சா, அது உனக்கு நல்லதில்லடா!"
"என்னம்மா, பத்தாம் பசலித்தனமாப் பேசிக்கிட்டிருக்க? வாழ்க்கையில முன்னேறணும்னா, வர வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கணும். அவரோட போட்டி கம்பெனிக்காரங்க எங்கிட்ட வந்து உதவி கேட்டாங்க. நான் செய்யறேன். நான் வாங்கிக்கிட்டிருந்த சம்பளத்தைப் போல ரெண்டு மடங்கு வருமானம் இப்ப கிடைக்குது. எனக்கு ஏதாவது பிரச்னைன்னா, இந்த கம்பெனிக்காரங்க எனக்கு உதவுவாங்க. இந்த கம்பெனி வளர்ச்சி அடையறப்ப, சக்ரபாணிக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்! அதுக்கு நான் என்ன செய்ய முடியும்" என்று சொல்லி விவாதத்தை முடித்து விட்டான் மோகன்.
"வாங்கம்மா! என்ன விஷயம்? மோகன் நல்லா இருக்கானா?" என்றார் சக்ரபாணி, தன்னைப் பார்க்க வந்த காவேரியைப் பார்த்து.
"ஐயா! நீங்க ரொம்ப உயர்ந்த மனுஷர். மோகன் உங்களுக்கு எதிரா வேலை செய்யறான். ஆனா, நீங்க அவன் நல்லா இருக்கானான்னு கேக்கறீங்க!" என்றாள் காவேரி.
"மோகன் செய்யற விஷயங்கள் பத்தி எனக்குக் காதில விழுந்துக்கிட்டுத்தான் இருக்கு" என்றார் சக்ரபாணி, சுருக்கமாக.
"ஐயா! உங்களை மாதிரி ஒரு உயர்ந்த மனுஷருக்குக் கேடு நினைச்சா, அதனால அவனுக்கு என்ன கெடுதல் வந்து சேருமோன்னு எனக்கு பயமா இருக்கு. வெளியில போன பையன் வீட்டுக்கு நல்லபடியா வந்து சேரணுமேன்னு தினமும் கவலைப்பட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்கேன். என்னிக்காவது அவன் வீட்டுக்குத் திரும்பி வர தாமதமானா, ஆக்சிடென்ட் ஏதாவது ஆகி இருக்குமோன்னு ஒரே படபடப்பா இருக்கு. அவன் வீட்டுக்குத் திரும்பினப்பறம்தான் பதட்டம் அடங்குது. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அதனாலதான், உங்களைப் பார்த்து என் மனசில இருக்கறதை சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்!" என்றாள் காவேரி. பேச்சின் முடிவில் அவளுக்கு அழுகை வந்து விட்டது.
"கவலைப்படாதீங்கம்மா. மோகன் நல்லா இருக்கணும்னுதான் நான் எப்பவும் நினைக்கறேன். உங்களுக்கும் இவ்வளவு நல்ல மனசு இருக்கு. அதனால, உங்க மனசுக்குக் கஷ்டம் வர மாதிரி எதுவும் நடக்காது, மோகனுக்கு எதுவும் ஆகாது. கவலைப்படாம போயிட்டு வாங்க. இருங்க. உங்களைக் காரில கொண்டு விடச் சொல்றேன்!" என்ற சக்ரபாணி, "டிரைவர்!" என்று தனது டிரைவரை அழைத்தார்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
No comments:
Post a Comment