Sunday, July 16, 2023

893. போட்டி போட முடியுமா?

"தொழிலதிபர் நிர்மல் குமார் இறங்காத துறையே இல்லைங்கற மாதிரி எல்லாத் துறைகளிலேயும் கால் பதிச்சிருக்காரு. அவ புதுசா ஒரு தொழில்ல இறங்கினா, அந்தத் தொழில்ல ஏற்கெனவே இருக்கறவங்க அத்தனை பேரும் பயந்து நடுங்குவாங்க. ஏன்னா, யாராலேயும் அவரோட போட்டி போட்டு நிலைச்சு நிக்க முடியாது."

இதுதான் நிர்மல் குமார் பற்றிப் பொதுவாக அனைவருமே பேசிக் கொள்வது.

நிர்மல் குமார் அடியெடுத்து வைக்காத தொழில்துறைகளில் இருந்தவர்கள் 'நல்ல வேளை அவர் நம்ம தொழிலுக்கு வரலை!' என்று சற்று நிம்மதியுடன் இருந்தாலும், எப்போது அவர் தங்கள் தொழிலுக்குள் நுழைவாரோ என்ற அச்சத்துடனும் இருந்தனர்.

"இந்தத் தொழில்ல நான்தான் ஜாம்பவான். என்னை எந்தக் கொம்பனாலும் ஜெயிக்க முடியாது!" என்று பலரிடமும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பரார் தணிகாசலம்.

"நீங்க செய்யறது ஒரு சின்னத் தொழில். இதுக்கு மார்க்கெட்டே ரொம்பக் கொஞ்சம். உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு பேர்தான் இந்தத் தொழில்ல இருக்கீங்க. அந்த ஒண்ணு ரெண்டு பேரில, நீங்க முதல் ஆளா இருக்கலாம். அவ்வளவுதான். இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, யாரும் புதுசா உள்ளே வரப் போறதில்ல. அதனால, என்னை யாரும் ஜெயிக்க முடியாதுன்னு நீங்க சொல்லிக்கிட்டிருக்கலாம்!" என்று கேலி செய்தார் அவருடைய நண்பர் முத்துசாமி.

"நான் சும்மா சொல்லல, முத்துசாமி. நிர்மல் குமார் எல்லாத் தொழில்லேயும் இறங்கறாரே, என்னோட தொழில்ல இறங்கச் சொல்லுங்க பாக்கலாம்!"

"நிர்மல் குமார் பெரிய தொழில்கள்ளதான் இறங்குவாரு. உங்க தொழிலக்கு அவர் ஏன் வரப் போறாரு?"

"நிர்மல் குமார் பத்தி ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்கங்க. வலுவான போட்டி இருக்கற இடத்தில, நிர்மல் குமார் இறங்க மாட்டாரு. எங்கே போட்டி இல்லையோ, அல்லது, எங்கே ஒரு தொழில்ல ஈடுபட்டு இருக்கறவங்க பலவீனமா இருக்காங்களோ, அங்கேதான் நிர்மல் குமார் நுழைவார். ஒரு உதரரணம் சொல்லணும்னா, ஒரு அரசன் தன்னை விட பலமான அரசர்கள் பக்கமே போக மாட்டான், ஆனா, தன்னை விடச் சின்ன அரசர்களோட போர் செஞ்சு ஜெயிச்சுத் தன்னை ஒரு பெரிய வீரன் மாதிரி காட்டிப்பான். அப்படிப்பட்டவர்தான் நிர்மல் குமார்!" என்றார் தணிகாசலம், இகழ்ச்சி ததும்பும் குரலில்.

சற்றும் எதிர்பாராத விதமாக, அடுத்த சில மாதங்களிலேயே, நிர்மல் குமார் தணிகாசலம் ஈடுபட்டிருக்கும் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு, இரண்டே ஆண்டுகளில், தணிகாசலம் தன் தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

"எதுக்குங்க இந்தச் சின்னத் தொழில்ல போய் முதலீடு செஞ்சிருக்கீங்க? நமக்கு முக்கியமான வேற தொழில்கள் நிறைய இருக்கே!" என்றார் தொழில் ஆலோசகர் சந்தோஷ்.

"செஞ்சிருக்க மாட்டேன். இந்தத் தொழில்ல ஈடுபட்டிருந்த தணிகாசலம்னு ஒரு ஆள், நான் பலவீனமான தொழிலதிபர்களோடதான் போட்டி போடுவேன், அவனை மாதிரி ஆட்களோடல்லாம் போட்டி போடவே பயப்படுவேன்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டிருந்திருக்கான். நம்ம ஆள் ஒத்தரு தற்செயலா அப்ப அங்கே இருந்ததால, அது அவர் காதில விழுந்திருக்கு. அவர் எங்கிட்ட வந்து இதைச் சொன்னதும், எனக்கு ரொம்பக் கோபம் வந்துடுச்சு. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறிக்கிட்டிருக்கேன்! என்னால எதுவும் முடியாதுன்னு ஒத்தன் பேசினா, கேட்டுக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான், என்னோட மானேஜர்கள்ள ஒத்தரை அந்தத் தொழில்ல இறக்கினேன். இப்ப அந்தத் தணிகாசலம் காணாமலே போயிட்டான்!"

சொல்லி முடித்தபோது, நிர்மல் குமாரின் முகத்தில் கோபம் மறைந்து, சிரிப்புப் படர்ந்திருந்தது.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை

குறள் 893:
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

பொருள்: 
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால், பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை, யார் பேச்சையும் கேட்காமல் இழித்துப் பேசலாம்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...