"ஆர்டரை கன்ஃபர்ம் பண்ணிட்டாங்களா சார்?" என்றான் பொது மேலாளர் குமார்.
"அதுக்குத்தான் நம்மை வரச் சொல்லி இருக்காங்க. அவங்க எம்.டி அருணாசலத்தோட நமக்கு ரெண்டு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. அப்ப ஆர்டரை நேரிலேயே கொடுக்கறதாச் சொல்லி இருக்காங்க!" என்றான் சிவசங்கர்.
"ரொம்ப அதிர்ச்சியாவும், ஏமாற்றமாவும் இருக்கு. ஆர்டர் இல்லைன்னு சொல்றதுக்காகவா நேர்ல வரச் சொன்னாங்க?" என்றான் சிவசங்கர், ஏமாற்றத்துடனும், ஆத்திரத்துடனும்.
"உங்ககிட்ட ஃபோன்ல பேசறப்ப, ஆர்டர் கொடுக்கறதா உறுதியாச் சொன்னாங்களா சார்?" என்றான் குமார்.
"ஆமாம். ஃபோன்ல பேசறப்ப அருணாசலம் அவ்வளவு உறுதியாச் சொன்னாரே! அதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியல. நம்ம போட்டியாளர்களான ரத்னா என்டர்பிரைசஸ் ஏதோ இன்ஃப்ளூயன்ஸை யூஸ் பண்ணி, நமக்குக் கிடைக்க வேண்டிய ஆர்டரைக் கெடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன்."
"சார்! எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றான் குமார், சற்றுத் தயக்கத்துடன்
"சொல்லுங்க!"
"நம்மகிட்ட பெருமாள்னு ஒத்தர் வேலை பாத்தார் இல்ல?"
"ஆமாம். ஒரு வயசான ஆளு. யூஸ்லெஸ் ஃபெலோ! அவனைப் பத்தி என்ன இப்ப?"
வயதில் பெரிய ஒரு நபரை 'அவன்' 'இவன்' என்று மரியாதை இல்லாமல் பேசுகிறாரே என்று யோசித்தபடியே, "நான் இங்கே வேலைக்குச் சேரறதுக்குக் கொஞ்ச நாள் முன்னாடியே அவர் இங்கேந்து போயிட்டார். கடைசி மாசச் சம்பளம் வாங்கிட்டுப் போக, ஒருநாள் நம்ம ஆஃபீசுக்கு வந்திருந்தாரு. அப்பதான் அவர் இங்கே வேலை செஞ்சவர்னு யாரோ எங்கிட்ட சொன்னாங்க. அவர் இப்ப அருணா அண்ட் கருணாவில வேலை செய்யறாருன்னு நினைக்கறேன். அவரை அங்கே பாத்தேன். எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். அஞ்சாறு வருஷம் முன்னால ஒரு தடவைதான் அவரைப் பாத்திருக்கேங்கறதால, அவர் யாருன்னு உடனே ஞாபகம் வரலை. இப்பதான் ஞாபகம் வருது" என்றான் குமார்.
"அவன் அங்கே வேலை செஞ்சா என்ன? அதுக்கும், நமக்கு ஆர்டர் கிடைக்காம போனதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் சிவசங்கர், எரிச்சலுடன்.
"இல்லை, சார். நாம அருணாசலத்தைப் பாக்கறதுக்காக அவர் அறைக்கு வெளியில காத்துக்கிட்டு இருந்தப்ப, பெருமாள் அருணாசலத்தோட அறைக்குப் போயிட்டு வந்தாரு. பத்து நிமிஷம் உள்ளே இருந்துட்டு வந்திருப்பாருன்னு நினைக்கறேன். வரும்போது, ஒரு மாதிரி சிரிச்சக்கிட்டே வந்தாரு. உங்க பக்கம் கூடத் திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. அப்ப அதை நான் பெரிசா நினைக்கல. ஆனா இப்ப நினைச்சுப் பாக்கறப்ப, அவர் உங்களைப் பத்தி அருணாசலத்துக்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பாரோன்னு தோணிச்சு. நம்ம கம்பெனியில அவர் வேலை செய்யறப்ப, ஏதாவது பிரச்னை இருந்ததா, சார்?"
சிவசங்கருக்கு ஒரு கணம் உடலில் ஒரு பதட்டம் ஏற்பட்டது.
பெருமாள் தன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, அவர் வயதுக்குக் கூட மதிப்பளிக்காமல் அவரை ஒருமையில் பேசியதும், காரணமில்லாமல் அவர் மேல் ஏற்பட்ட வெறுப்பால் அவரை அதிகம் கடிந்து பேசியதும், மற்ற ஊழியர்கள் முன்னால் அவரை அவமானப்படுத்தியதும், அதனால் அவர் மனம் வெறுத்து வேலையை விட்டு விலகியதும் சிவசங்கரின் மனதில் வந்து போயின.
அதனால் என்ன? 'அருணா அண்ட் கருணா'வில் பெருமாள் ஒரு சாதாரண ஊழியராகத்தானே இருப்பார்? அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு, தனக்கு ஆர்டர் கொடுக்கும் முடிவை அருணாசலம் மாற்றிக் கொண்டிருப்பாரா என்ன?
ஒருவேளை, பெருமாள் அருணாசலத்தின் நம்பிக்கையும், மதிப்பையும் பெற்றவராக இருந்து, பெருமாள் அருணாசலத்திடம் தன்னைப் பற்றித் தவறாக ஏதாவது கூறி, அதை அருணாசலம் நம்பி, தன்னுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருப்பாரோ?
நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அகந்தையில் பெருமாளை ஒரு ஊழியர்தானே என்று நினைத்து மரியாதை இல்லாமல் பேசியது, அவமானப்படுத்தியது இவற்றின் விளைவாகத்தான் இந்தப் பெரிய ஆர்டரை இழந்து விட்டோமோ?
பெருமாளைத் தான் நடத்திய விதம் பற்றிய குற்ற உணர்ச்சி முதல் முறையாக சிவசங்கரின் மனதில் ஏற்பட்டது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 90
பெரியாரைப் பிழையாமை
குறள் 892:
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
No comments:
Post a Comment