Monday, July 10, 2023

890. தொடர முடியாத கூட்டணி!

"சயாமிய ரெட்டையர்னு கேள்விப்பட்டிருக்கியா?" என்றான் பழனி, தன் நண்பன் மோகனிடம்.

"ஆமாம். ஒட்டிக்கிட்டே பிறந்தவங்க. ஒட்டிக்கிட்ட உடம்புகளோட அவங்க அத்தனை வருஷம் எப்படி வாழ்ந்தாங்கன்னு நான் ஆச்சரியப்பட்டிருக்கேன்" என்றான் மோகன்

"அப்படின்னா, என்னையும் பார்த்து ஆச்சரியப்படு. நான் என் பார்ட்னர் வீரமணியோட சேர்ந்து தொழில் நடத்திக்கிட்டிருக்கேனே, அதுவும் சயாமிய ரெட்டையர் வாழ்க்கைதான். சேர்ந்து இருக்கறதும் கஷ்டமா இருக்கு. பிரிஞ்சு போகவும் முடியல!"

"ஏன் பார்ட்னரா இருக்கீங்க? ஏன் பிரிஞ்சு போக முடியல?"

"என்னோட அப்பாவும், வீரமணியோட அப்பாவும் நண்பர்கள். அவங்க சேர்ந்து இந்தத் தொழிலை ஆம்பிச்சு, அதை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. அவங்க காலத்துக்கப்பறம், நானும் வீரமணியும் பார்ட்னரா இருக்கோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலை, ஒத்தர் மேல ஒத்தருக்கு நம்பிக்கை இல்லை. அதனால, பல விஷயங்கள்ள முடிவு எடுக்கவும் முடியலை, எடுக்காம இருக்கவும் முடியல!"

"அப்ப ஏன் சேர்ந்து தொழில் பண்றீங்க?"

"எங்க பிசினஸை ரெண்டாப் பிரிக்க முடியாது. ஒரு பார்ட்னரை விலக்கணும்னா, அவரோட பங்கோட தற்போதைய மதிப்பை  இன்னொரு பார்ட்னர் அவருக்குக் கொடுக்கணும். அது பல லட்ச ரூபா வரும். அவ்வளவு பணத்தை எங்க ரெண்டு பேராலேயுமே புரட்ட முடியாது."

"சரி. என்ன செய்யப் போறீங்க? இப்படியே தொடரப் போறீங்களா?"

"இல்லை. இப்பதான் ஒரு முடிவு எடுத்திருக்கோம்."

"என்ன முடிவு?"

"எங்க பிசினஸை யாருக்காவது வித்துட்டு, நாங்க  ரெண்டு பேரும் தனித் தனியா வேற தொழில் ஆரம்பிக்கலாம்னு!"

"நல்ல முடிவுதான். இந்த முடிவையாவது ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்தீங்களே, ஆச்சரியம்தான்!"

"ஆனா, வாங்கறதுக்கு ஆள் வரணுமே! அதுவரையிலேயும் கஷ்டம்தான். ஒவ்வொரு நாளும், பாம்போட ஒரே வீட்டில குடித்தனம் நடத்தற மாதிரிதான் போய்க்கிட்டிருக்கு!"

"ரெண்டு பேர்ல யார் பாம்பு?" என்றான் மோகன்.

பழனி தன் நண்பனை முறைத்தான்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 890:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

பொருள்: 
மனப் பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...