கட்சியின் மூத்த தலைவரும், மூன்று முறை முதல்வராக இருந்தவருமான கண்ணப்பன், ஒரு இளம் தலைவராக உருவாகிக் கட்சியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தவரான மூர்த்தி ஆகிய இருவருமே முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர்களாகக் கருதப்பட்டனர். இருவருக்குமே கட்சிக்குள்ளும், மக்களிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது.
கட்சித் தலைமை இருவருக்குமிடையே சமரசம் செய்ய முயன்றது.
"மூர்த்தி இளைஞர். எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. இனி நான் தேர்தலிலேயே போட்டியிடப் போவதில்லை. நான் சிறப்பாக ஆட்சி செய்து, நம் கட்சி அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறச் செய்வேன். அப்போது மூர்த்தி முதல்வராகலாமே!" என்றார் கண்ணப்பன்.
"கண்ணப்பன் மூன்று முறை முதல்வராக இருந்து விட்டார். அவருக்கே மீண்டும் வாய்ப்புக் கொடுப்பது என் போன்ற இளம் தலைவர்களுக்குச் செய்யப்படும் அநீதி!" என்றார் மூர்த்தி.
கட்சித் தலைமை ஒரு சமரச முடிவை எடுத்தது. அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகளுக்குக் கண்ணப்பன் முதலமைச்சராக இருப்பது என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மூர்த்தி முதலமைச்சராக இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மூர்த்திக்கு இதில் திருப்தி இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். கண்ணப்பன் முதலமைச்சராகப் பதவி ஏற்க, மூர்த்தி துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, கண்ணப்பன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவே, தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
"ஏண்ணே, இப்படி செஞ்சீங்க? இன்னும் ரெண்டு வருஷம் முதல்வரா நீடிச்சிருக்கலாம் இல்ல?" என்றார் கண்ணப்பனின் ஆதரவாளர் துரைக்கண்ணு.
"கட்சித்தலைமையோட இந்த சமரச ஏற்பாட்டை மூர்த்தி வெளிப்படையா ஏத்துக்கிட்டாலும், அவருக்கு இது ரொம்ப ஏமாற்றமாத்தான் இருந்தது. அவரோட வாய்ப்பை நான் தட்டிப் பறிச்சுட்ட மாதிரிதான் அவர் நடந்துக்கிட்டாரு. வெளிப்பார்வைக்குத் தெரியாட்டாலும், அவர் என்னை ஒரு விரோதியா நினைக்கறதை என்னால உணர முடிஞ்சது. உயர்மட்டத்தில இருக்கற ரெண்டு பேருக்குள்ள இப்படிப்பட்ட விரோத பாவம் இருக்கறது நல்லது இல்ல. மூர்த்தியோட மனோபாவத்தை இயல்பானதா நினைச்சு, நான் ரெண்டரை வருஷத்தை சமாளிச்சு ஓட்டி இருக்கலாம். ஆனா, இது மாதிரி கோபம், ஆத்திரம், ஏமாற்றம், அதனால ஏற்படற விரோத பாவம் எல்லாம் சின்னதாத் தெரிஞ்சாலும், அதெல்லாம் எப்ப வேணும்னா திடீர்னு வெடிக்கலாம். அப்படி நடந்தா, அது நம்ம கட்சியையும், ஆட்சியையும் பாதிக்கும். அது நடக்கக் கூடாதுன்னுதான் நான் விலகிட்டேன். ஏற்கெனவே மூணு தடவை முதல்வரா இருந்தாச்சு. இப்ப நாலாவது முறையாவும் ஆறு மாசம் இருந்தாச்சு. இது போதாதா?" என்றார் கண்ணப்பன், சிரித்தபடி.
"ஐயா! எல்லாரும் கட்சி நலம்னு வாய் கிழியப் பேசுவாங்க. ஆனா, நீங்க கட்சி நலனுக்காக உங்க முதல்வர் பதவியையே விட்டுட்டு வந்திருக்கீங்களே! நீங்க கட்சிக்குப் பெரிய சொத்து ஐயா!" என்றார் துரைக்கண்ணு, உணர்ச்சிப் பெருக்குடன்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை
குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
No comments:
Post a Comment