Sunday, July 9, 2023

888. மூன்றாம் தலைமுறை

"உங்க தாத்தா தங்கவேலு காலத்தில ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொழில் நிறுவனம், அவருடைய பிள்ளைகள் காலத்தில பன்னிரண்டு நிறுவனங்களா விரிவடைஞ்சுது. 

"நிர்வாக வசதிக்காக, இன்னிக்கு அவரோட ஆறு பேரன்களும், ஒவ்வொத்தரும் ரெண்டு நிறுவனங்களை நிர்வகிக்கறதுன்னு முடிவு செஞ்சு, கடந்த அஞ்சு வருஷமா அது மாதிரி நிர்வகிச்சுக்கிட்டிருக்கீங்க. 

"இப்பவும், இந்தப் பன்னிரண்டு நிறுவனங்களையும் 'வேலு க்ரூப்'னுதான் எல்லாரும் சொல்றாங்க ஆனா, நீங்க ஒரு க்ரூப் மாதிரி செயல்படாம, தனித் தனியா செயல்படறீங்க. 

"மூன்றாம் தலைமுறையான உங்க நிர்வாகத்தில, முந்தின ரெண்டு தலைமுறைகள்ள இருந்த வளர்ச்சியோ, லாபமோ இல்லைங்கறது வருத்தமான விஷயம். ஒரு ஆடிட்டரா உங்க நிறுவனங்களோட செயல்பாடுகளைப் பாக்கறப்ப, பல விஷயங்கள் கவலைக்குரியதா இருக்கறதா எனக்குத் தோணுது. நீங்க ஆறு பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டா, உங்க நிறுவனங்களோட சரிவைத் தடுக்க முடியும். 

"உங்க தாத்தா தொழிலை ஆரம்பிச்சப்ப, என்னோட அப்பாதான் அவருக்கு ஆடிட்டரா இருந்தாரு. அதுக்கப்பறம், நான் ஆடிட்டரா இருக்கேன். என்னோட சின்ன வயசில என் அப்பாவோட உதவியாளனா இருந்ததிலேந்தே, உங்க தாத்தாவோட செயல்பாட்டை நான் பக்கத்தில இருந்து பாத்திருக்கேன். உங்க பெற்றோர்களோட செயல்பாட்டையும் பாத்திருக்கேன். அவங்களோட கடின உழைப்பால உருவானதுதான் இந்த க்ரூப். 

"நீங்க ஒருங்கிணைஞ்சு செயல்பட்டு, உங்க க்ரூப்பை பழைய நிலைக்குக் கொண்டு வரணுங்கறது என்னோட விருப்பம். இதைச் சொல்றதுக்குத்தான், உங்க ஆறு பேரையும் என் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டேன்!"

ஆடிட்டர் சண்முகத்தின் பேச்சுக்குப் பின், சற்று நேரம் மௌனம் நிலவியது.

"நீங்க சொல்றது சரிதான். ஆனா, சுந்தர் தன் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப் பொருளை எங்கிட்ட வாங்காம, என்னோட போட்டி நிறுவனத்திலேந்து வாங்கறானே! அப்படி இருக்கறப்ப, நாங்க எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?" என்றான் குணசேகர்.

"குணா! உன்னோட பினாமி பேரில ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, அதில என்னோட கம்பெனி தயாரிப்பை நீ உற்பத்தி செய்யறது எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா?" என்றான் சுந்தர்.

அதைத் தொடர்ந்து, மற்றவர்களும் ஒருவர் மீது ஒருவர் குறைகளைக் கூற ஆரம்பித்தனர்.

'நீங்க ஒவ்வொத்தரும் மத்தவங்களுக்கு எதிரா உள்ளடி வேலைகள் செஞ்சுக்கிட்டிருக்கறது தெரியாம, நீங்க ஒருங்கிணைந்து செயல்பட்டு உங்க க்ரூப்பை வளர்க்கணும்னு சொன்னேனே!' என்று தனக்குள் நொந்து கொண்டார் சண்முகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

பொருள்: 
உட்பகை உண்டான குடி (அல்லது அமைப்பு) அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...