"குங்குமச் சிமிழ் பாத்திருக்கியா?" என்றார் கஜபதி.
"பாத்திருக்கேன், சார். எதுக்குக் கேக்கறீங்க?"
"சிமிழும், மூடியும் ஒட்டின மாதிரி இருக்கும். ஆனா, கொஞ்சம் அழுத்தி எடுத்தா, ரெண்டும் தனித் தனியா வந்துடும். இதோ இந்த மேஜை மேல ஒரு உப்பு ஜாடி இருக்கே, அதோட மூடி, அது மேல எப்படி சரியாப் பொருந்தி இருக்கு பாரு! ஆனா, ரெண்டையும் தனியாப் பிரிச்சுடலாமே! அது மாதிரிதான் இவங்க ரெண்டு பேரும்.
"சாமிநாதன் ம.த.க. தலைவரா இருந்தப்ப, அவர் தனக்கு அடுத்த நிலையில எந்தத் தலைவரும் இருக்கக் கூடாதுன்னு, எல்லாரையும் அடிமைகள் மாதிரியே வச்சிருந்தாரு. அவர் திடீர்னு இறந்தப்பறம், அந்தக் கட்சியோட உயர்மட்டக் குழுவில 'பொறுப்பாளர்கள்'னு ஒரு ரெட்டைப் பதவியை உருவாக்கி, இவங்க ரெண்டு பேரையும் அந்தப் பதவியில உக்காத்தி வச்சிருக்காங்க."
"அது சரிதான், சார். ஆனா, ரெண்டு வருஷமா, அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து கட்சியை நடத்திக்கிட்டிருக்காங்களே!"
"அது வெளிப் பார்வைக்குத்தான். ஒவ்வொரு முடிவையும் எடுக்கறதுக்குள்ள, ரெண்டு பேருக்குள்ள எவ்வளவு குடுமிப்பிடிச் சண்டை நடக்குதுங்கறது கட்சியில உள்ள சில மூத்த தலைவர்களுக்கு மட்டும்தான் தெரியும்!" என்ற கஜபதி, "அவங்கள்ள சில பேர் என்னை மாதிரி மூத்த பத்திரிகைக்காரங்ககிட்ட இதையெல்லாம் சொல்றதால, எங்களுக்கும் தெரியும்!" என்று சொல்லிச் சிரித்தார்.
"அப்படி ரெண்டு பேருக்குள்ளேயும் புகைச்சல் இருந்தா, இந்த ஏற்பாடு ரொம்ப நாளைக்கு நீடிக்காதே!" என்றான் தனபால்.
"சரியாச் சொன்ன!" என்று சொல்லிச் சிரித்தார் கஜபதி.
"அப்படின்னா?"
"கொஞ்ச நாள்ள உனக்கே தெரியும். உனக்கென்ன, இந்த உலகத்துக்கே தெரிய வரும்!"
சில மாதங்கள் கழித்து நடந்த ம.த.க. கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில், கட்சியின் விதிகள் திருத்தப்பட்டு, தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, இரண்டு அமைப்பாளர்களில் ஒருவரான முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு அமைப்பாளரான பாண்டியன் இதை எதிர்த்ததால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அந்தக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை
குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
No comments:
Post a Comment