Friday, June 30, 2023

877. உதவி கேட்ட எதிரி!

நிர்வாக இயக்குனர் சபாபதியின் அறையிலிருந்து அவருடைய நண்பர் பரமசிவம் வெளியேறியதும், நிறுவனத்தின் மேலாளர் முரளி நிர்வாக அதிகாரியின் அறைக்குச் சென்றார்.

"எப்படி இருக்கு நிலைமை?" என்றார் சபாபதி.

"நாம கொடுத்திருக்கிற செக்குளை கிளியர் பண்ண இன்னும் அஞ்சு லட்சம் ரூபா தேவைப்படும். நாம செக் கொடுத்தவங்ககிட்ட சொல்லி செக்குகளை ரெண்டு நாள் கழிச்சு பாங்க்ல போடச் சொல்லி இருக்கேன். அதுக்குள்ள ஏதாவது ஏற்பாடு செய்யணும்!" என்றார் முரளி.

"என்ன செய்யறதுன்னு தெரியல. நான் ரொம்ப டென்ஸா இருக்கேன். இந்தச் சமயம் பாத்து இந்தப் பரமசிவம் வேற வந்துட்டாரு. என் நிலைமை தெரியாம அவர் பாட்டுக்குப் பேசிக்கிட்டிருந்தாரு. அவரை அனுப்பி வைக்கறதுக்குள்ள பெரும்பாடா ஆயிடுச்சு!"

"நமக்கு பிரச்னை இருக்குன்னு சொல்லி அவரை அப்புறம் வரச் சொல்லி இருக்கலாமே சார்!"

"என்னோட கஷ்டங்களை என் நண்பர்கள்கிட்ட சொல்றதை நான் எப்பவுமே விரும்பறதில்லை. அவங்களாத் தெரிஞ்சுக்கிட்டா அது வேற விஷயம். சரி. நான் போய் யார்கிட்டேயாவது பண உதவி கிடைக்குமான்னு பாக்கறேன்!" என்று கூறியபடி எழுந்தார் சபாபதி.

"சார்! இன்னொரு விஷயம். சந்திரா இண்டஸ்டிரீஸ்லேந்து ஃபோன் பண்ணினாங்க. அவங்களுக்கு அர்ஜன்ட்டா ஒரு ஆர்டர் வந்திருக்காம். அவங்ககிட்ட சரக்கு இல்லையாம். நம்மகிட்ட கேக்கறாங்க" என்றார் முரளி தயங்கியபடி.

"தொழில்ல போட்டி போடறவங்களுக்கு உதவி செய்யலாம். ஆனா அவங்க நம்மை விரோதிகளா நினைச்சுப் பல காரியங்க செஞ்சிருக்காங்க. நம்மைப் பத்தி கமர்ஷியல் டாக்ஸ் டிபார்ட்மென்ட்டுக்குத் தப்பான தகவல் கொடுத்து அதனால அவங்க இங்கே ரெயிட் பண்ணினாங்க. நாம கணக்கெல்லாம் சரியா வச்சிருக்கறதால, அவங்களுக்கு எதுவும் கிடைக்கல. ஆனா ரெய்டுன்னாலே மார்க்கெட்ல நம்மைப் பத்தித் தப்பான ஒரு அபிப்பிராயம் உருவாயிடுதே! அப்புறம் நம்ம சீனியர் டெக்னீஷியன் ஒத்தரை அதிக சம்பளம் கொடுத்து நம்மகிட்டேந்து எடுத்துக்கிட்டாங்க. இன்னும் பல விஷயங்கள் நடந்திருக்கு. அதனால அவங்களோட எந்த சமரசமும் செஞ்சுக்கறதில்லேன்னு நாம முடிவு செஞ்சிருக்கோமே!" என்றார் சபாபதி.

"அதில்ல சார். இப்ப நமக்கு இருக்கற பொருளாதாரப் பிரச்னையில, நாம சரக்கு கொடுத்தா ஒரு லட்ச ரூபா பணம் வரும். பணத்தை நாம முன்னாலேயே வாங்கிக்கிட்டு அப்புறம் சரக்கை அனுப்பலாம். இப்ப நமக்கு அது ரொம்ப உதவியா இருக்குமே சார்!"

"ஒத்தர் நமக்கு எதிரின்னு முடிவு செஞ்சப்பறம், அவங்ககிட்ட எந்தவிதமான மென்மையான அணுகுமுறையும் வச்சுக்கக் கூடாது - அதனால நமக்குப் பயன் கிடைச்சாக் கூட- என்பதுதான் என்னோட நிலை!" என்று கூறி விட்டு வெளியேறினார் சபாபதி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 877:
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

பொருள்: 
நம் துன்பத்தைப் பற்றி அதை அறியாத நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை காட்டக் கூடாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...