Friday, June 30, 2023

876. விரோதியா, இல்லையா?

"இத்தனை வருஷமா இந்த அலுவலகத்தில வேலை செய்யற. குமார் உனக்கு எதிரா வேலை செய்யறாங்கறதை இன்னுமா நீ புரிஞ்சுக்கல?" என்றான் ரகுவின் சக ஊழியன் சந்திரன்.

"தெரியல. இந்த வருஷம் எனக்குப் பதவி உயர்வு கிடைக்காம போனபோது அவன்தான் அதுக்குக் காரணமா இருப்பானோன்னு நினைச்சேன். ஜி. எம்முக்கு பி ஏவா இருக்கறதால என்னைப் பத்தி அவர்கிட்ட தப்பா ஏதாவது சொல்லி இருப்பானோன்னு எனக்கு ஒரு  சந்தேகம் இருந்தது" என்றான் ரகு.

"அதில என்ன சந்தேகம்? அவன்தான் அப்படி செஞ்சிருப்பான். உனக்குப் பதவி உயர்வு கிடைக்காதது எங்க எல்லாருக்குமே அதிர்ச்சியாத்தான் இருந்தது."

"ஆனா அவனுக்கு என் மேல விரோதம் இருக்க எந்தக் காரணமும் இல்லையேன்னு நினைச்சு நான் அந்த சந்தேகத்தைப் பெரிசா நினைக்கல."

"இனிமேயாவது எச்சரிக்கையா இருந்துக்க!"

"குமார்கிட்ட எச்சரிக்கையா இருன்னு சொன்னேனே! அப்படியும் அவன்கிட்ட நெருங்கிப் பழகற போல இருக்கே!" என்றான் சந்திரன்.

"ஹோட்டலுக்குப் போறேன், வரியான்னு கூப்பிட்டான். போயிட்டு வந்தேன்" என்றான் ரகு.

"அவன்கிட்ட நெருக்கமா இருக்கலாம்னு முயற்சி செய்யறியா? கவுத்துடுவான்!"

"நெருக்கமா இருக்க முயற்சி செய்யல. ஆனா விலகி இருக்கவும் விரும்பல!"

"அப்படீன்னா? அவன் உனக்கு எதிரா செயல்படறாங்கறதை நீ நம்பலையா?"

"அது எனக்குத் தெரியாது. இப்ப நம்ம கம்பெனி நிலைமை ரொம்ப மோசமா இருக்கறது உனக்குத் தெரியும். சில பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. அடுத்தாப்பல யாரைத் தூக்கப் போறாங்களோன்னு எல்லாருமே பயந்துக்கிட்டிருக்கோம். இந்தச் சூழ்நிலையில குமார் எனக்கு எதிரா இருக்கானா இல்லையான்னு ஆராய்ச்சி பண்றதில எந்தப் பயனும் இல்லை. அதே சமயம் அவனை விட்டு விலகி இருக்கவும் நான் விரும்பல. இவன் ஏன் தங்கிட்டேந்து விலகிப் போறான்னு அவன் நினைக்கக் கூடாது, இல்ல? அதனால ஒரு மாதிரி பாலன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்!" என்றான் ரகு.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 876:
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

பொருள்: 
ஒருவனது பகையை முன்பே அறிந்திருந்தாலும், அறியாமல் இருந்தாலும், ஒரு  நெருக்கடி வரும்போது, அவனை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமலும், அவனை விலக்காமலும் அப்படியே விட்டு விட வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...