Thursday, June 29, 2023

875. துருவங்கள் இணைந்தால்...

கோபி இண்டஸ்டிரீஸ் அதிபர் ஜெயகோபி தன் அலுவலகத்துக்கு வந்த கோபால் என்டர்பிரைஸ் அதிபர் ராஜகோபாலையும் அந்த நிறுவனத்தின் நிர்வாகி அசோக்கையும் வரவேற்றார்.

"நீங்க என்னை சந்திக்கணும்னு சொன்னதும் எனக்கு வியப்பா இருந்தது. சொல்லுங்க என்ன விஷயம்?" என்றார் ஜெயகோபி.

"நாம ரெண்டு பேரும் தொழில்ல போட்டியாளர்கள். கடந்த ரெண்டு மூணு வருஷமா நாம கடுமையா மோதிக்கிட்டிருக்கோம். நமக்குள்ள கிட்டத்தட்ட ஒரு விரோத பாவமே வளர்ந்துடுச்சு. அப்படி இருக்கக் கூடாது, அதை மாத்தணும்னு நினைச்சுத்தான் உங்களை சந்திக்க விரும்பினேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. அதுக்கு நன்றி!" என்றார் ராஜகோபால். 

ஜெயகோபி மௌனமாக இருந்தார்.

"நான் யோசிச்சுப் பார்த்தேன். உலகத்தில போட்டிங்கறது இயல்பானது. போட்டியாளரை நாம ஏன் விரோதியா நினைக்கணும்?" என்று தொடர்ந்தார் ராஜகோபால்.

"நண்பரா நினைச்சு விட்டுக் கொடுத்துடலாமா? நீங்க விட்டுக் கொடுக்கப் போறீங்களா, இல்லை நான் விட்டுக் கொடுக்கணும்னு கேக்கறதுக்காக வந்திருக்கீங்களா?" என்றார் ஜெயகோபி. கேலிச் சிரிப்புடன்.

"விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனா ஒரு உடன்பாட்டுக்கு வரலாமே?"

"என்ன உடன்பாடு?"

"உங்களுக்குன்னு சில முக்கிய வாடிக்கையாளர்கள் இருப்பாங்க. அவங்களை நாங்க அணுக மாட்டோம். அது மாதிரி எங்களோட முக்கிய வாடிக்கையாளர்களையும் நீங்க அணுகாம இருக்கணும். மற்ற வாடிக்கையாளர்ளைப் பொருத்தவரை நாம ரெண்டு பேருமே போட்டி போடலாம்."

"இது அவ்வளவு எளிமையா இருக்கும்னு நினைக்கிறீங்களா?" என்றார் ஜெயகோபி.

"அப்படி நினைக்கலை. பேசித் தீர்க்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. நானும் என்னோட மானேஜர் அசோக்கும் சேர்ந்து பேசி ஒரு மெமோ தயாரிச்சிருக்கோம். அதில நாம எந்த விதங்கள்ள ஒத்துழைக்கலாம், எந்த வகையில போட்டி போடலாம், நாம சேர்ந்து செயல்பட்டா நம்ம சப்ளையர்கள்கிட்டேந்து என்னென்ன சலுகைகளை வாங்க முடியும், ஒத்தருக்கொத்தர் தகவல் பரிமாற்றத்தால என்னென்ன நன்மைகள் கிடைக்கும்னெல்லாம் பட்டியல் போட்டிருக்கோம், பாருங்க!" என்று ஜெயகோபியிடம் ஒரு கோப்பைக் கொடுத்தார் ராஜகோபால்.

கோப்பைப் பிரித்துப் பார்த்த ஜெயகோபி சில விநாடிகள் அதைப் புரட்டிப் பார்த்து விட்டு, "இன்டரஸ்டிங். செயல்படுத்தக் கூடிய விஷயங்களாத்தான் தோணுது. நான் இதைப் படிச்சுப் பாக்கறேன். அப்புறம் நாம மறுபடி சந்திச்சுப் பேசலாம்" என்றார் புன்னகையுடன். 

முதல்முறையாக ஜெயகோபியின் முகத்தில் நட்பின் சாயல் தெரிந்ததை ராஜகோபால் கவனித்தார்.

"அப்ப ரெண்டு நாள் கழிச்சு நான் உங்ளை வந்து பாக்கட்டுமா?" என்றார் ராஜகோபால்.

"எதுக்கு? இப்ப நீங்க என் அலுவலகத்துக்கு வந்திருக்கீங்க. அடுத்த முறை நான் உங்க அலுவலகத்துக்கு வரதுதானே மரியாதையா இருக்கும்?  நமக்குள்ள ஏற்படப் போற உடன்பாடு உங்க அலுவலகத்திலேயே இறுதியானதா இருக்கட்டுமே!" என்றபடி புன்னகையுடன் கைநீட்டினார் ஜெயகோபி.

நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் ஜெயகோபியின் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு விடைபெற்றார் ராஜகோபால்.

ருவரும் காரில் வரும்போது, "எதிர் துருவமா இருந்த கோபி இண்டஸ்ட்ரீஸோட இணைஞ்சு செயல்படலாம்னு திடீர்னு எப்படி சார்  உங்களுக்குத் தோணிச்சு?" என்றார் அசோக்.

"நாம ரெண்டு எதிரிகளோட போராட வேண்டி இருந்தது. கோபி இண்டஸ்ட்ரீஸ் ஒரு எதிரின்னா, லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மற்றொரு எதிரி. ரெண்டு எதிரிகளைச் சமாளிக்கறது கஷ்டமா இருந்ததால ஒரு எதிரியோட சமரசம் பண்ணிக்கலாம்னு நினைச்சு கோபி இண்டஸ்ட்ரீஸை அணுகினேன். அவர் நம்ம சமரசத்தை ஒத்துப்பாரு போலத்தான் இருக்கு."

"ஆனா நீங்க ரெண்டு பேரும் லக்ஷ்மி என்டர்பிரைசஸைப் பத்திப் பேசவே இல்லையே!"

"பேசலை. ஆனா நம்மோட சேர்ந்து செயல்பட்டா  அவங்களுக்கும் லக்ஷ்மி என்டர்பிரைசஸ் மட்டும்தான் எதிரியா இருப்பாங்க, ரெண்டு எதிரிகளோட மோத வேண்டி இருக்காதுன்னு ஜெயகோபி புரிஞ்சுக்கிட்டிருப்பாரே!" என்றார் ராஜகோபால். 

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 875:
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

பொருள்: 
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையோ இரண்டு, தானோ ஒருவன் இந்நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...