Thursday, June 29, 2023

874. பகைவர் ஜாக்கிரதை!

சொந்த ஊருக்குக் கிளம்பும்போது அப்பா சொன்னார்.

"ஊருக்கு உன்னைத் தனியா அனுப்பறதுக்கு எனக்கு மனசே இல்லை. கோவிலுக்கு நம்ம வேண்டுதலை நிறைவேற்றியே ஆகணும். என்னால பயணம் செய்ய முடியாது. அதனாலதான் உங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேண்டி இருக்கு" என்றார் என்னையும் என் மனைவியையும் பார்த்து.

"தனியாப் போனா என்னப்பா? நாங்க என்ன சின்னக் குழந்தைங்களா?" என்றேன் நான்.

"உனக்குத் தெரியாது. அருணாசலத்துக்கும் நமக்கும் வெட்டு, குத்து அளவுக்குப் பகை. என்னை அவன் வெட்டி இருக்கான். அவனை நான் வெட்டி இருக்கேன். நீதான் என் உடம்பில தழும்பெல்லாம் பாத்திருக்கியே! நம்ம நிலத்தில கொஞ்சத்தை இப்பவும் அவன் ஆக்கிரமிச்சிருக்கான். போதும் போதாததுக்கு அவன் கோவில் டிரஸ்டி வேற!"

"அப்பா அவரு சிவன் கோவில் டிரஸ்டி. நாங்க வேண்டுதலை நிறைவேற்றப் போறது பெருமாள் கோவில்ல. அதனால ஒண்ணும் பிரச்னை வராது."

"அவன் வம்படி பிடிச்சவன். பெருமாள் கோவில்ல கூட வந்து தகராறு பண்ணுவான். ஜாக்கிரதையா இருந்துக்க!" என்று எச்சரித்தார் அப்பா.

நாங்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்றபோது அங்கே அருணாசலம் நின்றிருந்தார். அப்பா சொன்னபடியே தகராறு செய்ய வந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தது போல் இருந்தது. ஆனால் நான் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

பூஜை முடிந்ததும் தீபாராதனைத் தட்டுடன் வெளியே வந்த அர்ச்சகர் தயக்கத்துடன் அருணாசலம் பக்கம் சென்றார். 'பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பது நான், முதல் மரியாதை அருணாசலத்துக்கா?' என்று நான் அர்ச்சகரைக் கேட்க நினைத்தேன். அதற்குள் அருணாசலம் என்னைக் கைகாட்ட, அர்ச்சகர் என்னிடம் வந்தார்.

பூஜை முடிந்து நாங்கள் கிளம்பிய சமயம் அருணாசலம் என்னிடம் வந்து, "தம்பி! நாளைக்குத்தானே ஊருக்குப் போறீங்க? நாளைக்கு சிவன் கோவில்ல பூஜை ஏற்பாடு செஞ்சிருக்கேன். நீங்க நிச்சயம் கலந்துக்கணும். பூஜை முடிஞ்சதும் என் வீட்டில விருந்து. அதிலேயும் நீங்க கலந்துக்கணும்!" என்றார்.

"எதுக்குங்க? வேண்டாம்!" என்றான் நான் சங்கடத்துடன்.

"நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற பகை வேற. அது இன்னும் அப்படியேதான் இருக்கு. உங்க நிலத்தை நான் அபகரிச்சதா உங்க அப்பா சொல்லுவாரு. ஆனா என்னோட நிலம் இன்னும் நிறைய உங்ககிட்ட இருக்குன்னு நான் சொல்லுவேன். இது என் அப்பா, உன் தாத்தா அவங்க காலத்திலேந்தே இருக்கற பிரச்னை. ஆனா நீ இப்ப நம்ம ஊருக்கு ஒரு விருந்தாளியா வந்திருக்க. ஊருக்கு வர விருந்தாளிகளை உபசரிக்கிறது எங்க குடும்ப்ப் பழக்கம். நீங்க வரப் போறீங்கன்னு தெரிஞ்சுதான் சைவச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். வழக்கமா அசைவச் சாப்பாடுதான் இருக்கும். இந்த வருஷம் அசைவச் சாப்பாடு  கிடைக்காதேன்னு ஊர்ல பல பேரு வருத்தப்படறாங்க! அதனால கண்டிப்பா வந்துடுங்க!" என்ற அருணாசலம், என் மனைவியைப் பார்த்து, "நாளைக்குப் பூஜைக்கும் விருந்துக்கும் உன் புருஷனை அழைச்சுக்கிட்டு வர வேண்டியது உன் பொறுப்பும்மா!" என்றார் சிரித்தபடியே.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பொருள்: 
பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பண்புள்ளவனின் பெருந்தன்மையில் இந்த உலகம் அடங்கும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...