Thursday, June 29, 2023

873. ஜாமீனில் எடுக்க ஒரு ஆள்

"மாதவா! நம்மகிட்ட காசு பணம் கிடையாது. நமக்கு ஆதரவாகவும் யாரும் கிடையாது. நம்ம குடும்பத்தில நீயும் நானும் மட்டும்தான். அதனால நம்ம சொந்தக்காரங்ககிட்ட விரோதம் பாராட்டாம கொஞ்சம் நெருக்கமா இருக்கப் பழகிக்க. நாளைக்கு நமக்கு ஏதாவது பிரச்னை வந்தா உதவி செய்யறதுக்கு யாராவது இருக்கணும் இல்லை?" என்றாள் பார்வதி தன் மகனிடம்.

"நம்ம சொந்தக்காரங்க எல்லாரும் அயோக்கியப் பசங்க. உன் வழியிலேயும் சரி, அப்பா வழியிலேயும் சரி ஒத்தர் கூட நல்லவங்க இல்லை. நம்மகிட்ட எதையாவது பிடுங்கலாமான்னுதான் பாப்பாங்க. அவங்களைப் பக்கத்திலேயே வர விடக் கூடாதுன்னுதான் அவங்களோட சண்டை போட்டு விலக்கி வச்சிருக்கேன்!" என்றான் மாதவன்.

'பிடுங்கறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்கு?' என்று நினைத்துக் கொண்டாள் பார்வதி.

மாதவனுக்குத் திருமணம் ஆனதும், மருமகள் சாந்தியின் பெற்றோர், பிற உறவினர்களிடமாவது மாதவன் நெருக்கமாக இருப்பான் என்று பார்வதிக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் மாதவன் அவர்களிடமும் சண்டை போட்டு விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அதன் விளைவாக, சாந்தி தன் பெற்றோர் வீட்டுக்குப் போவதுமில்லை, அவர்கள் அவளைப் பார்க்க வருவதுமில்லை.

'என்ன இவன் இப்படி இருக்கான்? உலகத்தையே தனக்கு விரோதியா ஆக்கிப்பான் போலருக்கே!' என்று நினைத்து வருந்தினாள் பார்வதி.

"அத்தை அவரைக் கைது செஞ்சுட்டாங்களாம்!" என்றாள் சாந்தி அழுது கொண்டே.

"எதுக்கு?" என்றாள் பார்வதி திடுக்கிட்டு.

"இவர் கம்பெனியில ஏதோ மோசடி நடந்திருக்கு. யாரோ இவரை மாட்டி விட்டிருக்காங்க. கம்பெனியில இவர் மேல புகார் கொடுத்து போலீஸ்ல இவரைக் கைது செஞ்சிருக்காங்க! இப்பதான் ஸ்டேஷன்லேந்து ஃபோன் வந்தது."

"அடக் கடவுளே! இவனை ஜாமீன்ல எடுக்கக் கூட ஆள் இல்லையே! எல்லாரோடயும் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். யாரு இவனுக்கு உதவ வருவாங்க? இப்படியா ஒத்தன் பைத்தியக்காரனா இருப்பான்?" என்று புலம்பினாள் பார்வதி.

"பைத்தியத்துக்குக் கூடத் தனக்கு எது நல்லதுன்னு தெரியும் அத்தை!" என்ற சாந்தி, "நான் எங்கப்பா வீட்டுக்குப் போய் கேட்டுப் பாக்கறேன். அவர் இரக்கப்பட்டு உதவினாதான் உண்டு"  என்று சொல்லி விட்டுத் தன் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

பொருள்: 
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாக்கிக் கொள்பவன்  பித்தரிலும் அறிவற்றவன்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...