விழாவுக்கு வந்திருந்த பத்திரிகை நிருபர் கணேசன், தன் அருகில் அமர்ந்திருந்த தன் நண்பன் மனோவிடம், "பேராசிரியர் சுந்தரம் பெரிய அறிஞர், ஆராய்ச்சியாளர். அவரோட நூலை வெளியிடறதுக்கு இந்த ஞானசூனியத்தைக் கூப்பிட்டிருக்காங்க பாரு!" என்றான்.
"என்னப்பா இது? பத்மராஜன் எவ்வளவு புகழ் பெற்ற பேச்சாளர்! அவரைப் போய் ஞானசூனியம்னு சொல்லிட்ட?" என்றான் மனோ, சிரித்துக் கொண்டே.
"மேடையில பேசிப் பெயர் வாங்கிட்டா, பெரிய அறிவாளி ஆகிட முடியுமா? விஷயமே இல்லாம எதையாவது பேசி, பார்வையாளர்களைச் சிரிக்க வச்சே, புகழ் பெற்ற பேச்சாளர் ஆயிட்டார் பத்மராஜன். சுந்தரம் பக்கத்தில உக்காரக் கூட அவருக்கு அருகதை கிடையாது. அவரை வச்சு சுந்தரத்தோட புத்தகத்தை வெளியிட வச்சிருக்காங்களே இந்தப் புத்தக வெளியீட்டாளர்கள், அவங்களைச் சொல்லணும்!"
விழா துவங்கியது.
புத்தகத்தை வெளியிட்டு, நாவலர் பத்மராஜன் பேசினார். அவர் பேச்சை ரசித்து, அவையில் அவ்வப்போது சிரிப்பலைகளும், கைதட்டல்களும் எழுந்தன.
பத்மராஜன் பேசி முடித்ததும், "சுந்தரத்தோட புத்தகத்தைப் புரட்டிக் கூடப் பாத்திருக்க மாட்டாரு. ஆனா, ஏதோ பேசி ஒப்பேத்திட்டாரு!" என்றான் கணேசன்.
"அவர் பேச்சுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது, கவனிச்ச இல்ல?" என்றான் மனோ.
"இப்போது, நூலாசிரியர் சுந்தரம் அவர்கள் தன் புத்தகத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசுவார்!" என்று கூட்டத் தலைவர் அறிவித்தார்.
ஒலிபெருக்கியின் முன் வந்து நின்ற சுந்தரம், என்ன பேசுவதென்று தெரியாமல் சில விநாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பிறகு, "முதலில் அனைவருக்கும் நன்றி" என்றார். பிறகு, ஒரு இடத்தில் நிற்க முடியாதவர் போல் கால்களை மாற்றி மாற்றி அசைத்து விட்டு, "இந்த நூலை நான் எழுதக் காரணம்..." என்று ஆரம்பித்தார்.
அதற்குள், பார்வையாளர்களில் பலர் அவர் பேச்சில் கவனம் இழந்து தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். சுந்தரம் உடலை அசைத்துக் கொண்டே பேசிய வார்த்தைகள் அவையில் பலருக்கும் எட்டவில்லை.
"என்ன சொல்றார்னே புரியலியே!" என்றான் கணேசன், மனோவிடம்.
ஓரிரு நிமிடங்களில் தன் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் சுந்தரம்.
"சுந்தரம், பத்மராஜன் இவர்களில் யார் அறிவாளின்னு இந்த அவையில கேட்டா, அநேகமா எல்லாருமே பத்மராஜன்தான் அறிவாளின்னு சொல்லுவாங்க. ஆனா, அதுக்காக அவங்களைக் குற்றம் சொல்ல முடியாது!" என்றான் கணேசன், வருத்தத்துடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 729:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
பொருள்:
நூல்களைக் கற்றிந்த போதிலும், ஒரு நல்ல அறிஞர் அவைக்கு அஞ்சுபவராக இருந்தால், அவர் கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்றே கருதப்படுவார்.
No comments:
Post a Comment