தாங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரு புதுமையான பொருளைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க நிதி உதவி கேட்டு திலீப்பும், வருணும் அங்கே வந்திருந்தார்கள்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் தயாரிப்பு பற்றி ஆங்கிலத்தில்தான் விளக்க வேண்டும். திலீப்புக்கு நன்கு ஆங்கிலம் தெரியும் என்பதால், அவர்கள் உருவாக்கிய தயாரிப்பு பற்றி திலீப் விளக்குவான் என்று முடிவு செய்யப்பட்டது.
தீலீப் மற்றவர்கள் முன் பேசத் தயங்குபவன் என்பதால், தைரியமாகப் பேசும்படி வருண் அவனிடம் பலமுறை கூறி இருந்தான்.
வரிசைப்படி, அவர்கள் முறை எட்டாவதாக இருந்தது.
முதல் ஐந்தாறு பேர் பேசியதைக் கேட்ட பிறகு, வருண் உற்சாகமாக, "டேய் திலீப்! நம்ம தயாரிப்பு அளவுக்கு சிறப்பா வேற எதுவுமே இல்லடா. அதனால, நம்ம பிரசன்டேஷனுக்கப்புறம், நம்மைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. நீ மட்டும் தைரியமா பேசினா போதும்!" என்றான்.
தான் எப்படிப் பேசப் போகிறோம் என்ற பயத்திலேயே இருந்த திலீப், பதில் பேசவில்லை.
அவர்கள் முறை வந்தபோது, திலீப் பேச ஆரம்பித்தான். எவ்வளவோ தயார் செய்திருந்தும், கோர்வையாகப் பேசாமல், தட்டுத் தடுமாறித் தெளிவின்றிப் பேசினான். வருண் குறுக்கிட்டு ஓரிரு விஷயங்களை விளக்க முயன்றபோது, ஒருவர்தான் பேச வேண்டும் என்று சொல்லி, அவனை அடக்கி விட்டார்கள்.
திலீப் பேசி முடித்ததும், "என்னடா, இப்படி சொதப்பிட்ட?" என்றான் வருண்.
"நான் என்ன செய்யறது? என்னால கோர்வையாப் பேச முடியல. ஒரு பாயின்ட் சொல்றப்பதான், இதுக்கு முன்னால அந்த இன்னொரு பாயின்ட்டைச் சொல்லி இருக்கணுமேன்னு தோணுது. அதை இப்ப எப்படி கொண்டு வதுன்னு தெரியல!" என்றான் திலீப்.
"ஏன் சரியாப் பேச முடியலேன்னு எங்கிட்ட நல்லா விளக்கிப் பேசற! நம்மகிட்ட நல்ல ஒரு தயாரிப்பு இருந்தும், அதைப் பத்தி சரியா விளக்க முடியாததால, நாம இந்த வாய்ப்பை இழக்கப் போறோம்!" என்றான் திலீப், ஆற்றாமையுடன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
பொருள்:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாதவர், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயனற்றவரே.
No comments:
Post a Comment