அவருடைய நண்பர் நமச்சிவாயம்தான் அவரை வற்புறுத்தி அந்த வாய்ப்பை ஏற்கச் செய்தார்.
"அந்தப் பட்டிமன்றத்தில பேசறவங்களிலேயே, பட்டிமன்றத் தலைவர் உட்பட, எல்லாரையும் விட பெரிய அறிஞர் நீங்கதான். மத்தவங்களுக்கு உங்க அளவுக்கு நூலறிவோ, புலமையோ இல்லை. நீங்க இவ்வளவு படிச்சுட்டுக் குடத்தில இட்ட விளக்கு மாதிரி இருக்கீங்க. உங்க பெருமையை உணர்ந்த யாரோ உங்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கங்க!" என்றார் நமச்சிவாயம்.
பட்டிமன்றத்தில் தன் அணியின் மூன்றாவது பேச்சாளராகக் களம் இறங்கினார் வாஞ்சிநாதன்.
ஒலிபெருக்கி முன் போய் நின்று அவையைப் பார்த்ததுமே, வாஞ்சிநாதனுக்குப் பதட்டம் ஏற்பட்டு விட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முந்தைய பேச்சாளர்கள் பேசியபோது, அவர்களுக்கு எப்படி பதிலளிப்பது என்றெல்லாம் மனதில் உருவாக்கி வைத்திருந்த சிந்தனைகள் திடீரென்று நினைவிலிருந்து மறைந்து விட்டன.
பேச வேண்டுமே என்பதற்காக ஏதோ சொன்னார். சொற்கள் கோர்வையாக வரவில்லை. ஓரிரு வாக்கியங்கள் பேசியதும், தன் நேரம் முடிந்திருக்குமோ என்ற நம்பிக்கையில் நடுவரைப் பார்த்தார். 'பேசுங்கள்' என்று சைகை காட்டுவது போல் தலையசைத்தார் நடுவர்.
என்ன பேசினோம் என்பதைப் பற்றித் தனக்கே ஒரு தெளிவில்லாமல் ஏதோ பேசித் தன் நேரம் முடியும் முன்பே பேச்சை முடித்துக் கொண்டார் வாஞ்சிநாதன்.
தன் இருக்கையில் போய் அமர்ந்ததும், தன் அணித்தலைவரையும் மற்ற இரு பேச்சாளரர்களையும் பார்த்தார் வாஞ்சிநாதன். அவர்கள் முகம் கடுகடுவென்று இருந்தது. எதிரணிப் பேச்சாளர்களைப் பார்த்தார். அவர்கள் அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது போல் இருந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும், அவருடைய அணிதலைவரோ, மற்ற பேச்சாளர்களோ அவரிடம் எதுவும் பேசவில்லை. நடுவர் மட்டும் அவரிடம் ஏதோ சொல்ல வந்து விட்டுப் பிறகு சொல்லாமலே இருந்து விட்டார்.
அரங்கை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தபோது, 'எல்லாரும் நல்ல பேச்சாளர்கள்தான். ஆனா, ஒரு ஆளு மட்டும் கத்துக்குட்டி போல இருக்கு!" என்று யாரோ கேலியாகப் பேசிக் கொண்டது வாஞ்சிநாதனின் காதில் விழுந்தது.
தான் இத்தனை நூல்களைப் படித்தது, இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்தது எல்லாம் இப்படி ஒரு பட்டத்தை வாங்கத்தானா என்று நினைத்தபோது, அந்த நிலையிலும் வாஞ்சிநாதனுக்குச் சிரிப்பு வந்தது.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
பொருள்:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும், அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவையாகி விடும்.
No comments:
Post a Comment