மேடையில் அமர்ந்திருந்த ராஜன், நம்பியின் காதில் ஏதோ சொன்னார்.
அதற்குப் பிறகு மீண்டும் ஒலிபெருக்கிக்கு வந்த நம்பி, "நிகழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றம். ராஜன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை, அவருடைய உதவி விஞ்ஞானி செல்லப்பா வாசிப்பார்" என்று அறிவித்தார்.
அவையில் அமர்ந்திருந்த செல்லப்பா எழுந்து மேடைக்கு வர, ராஜன் தன் கையிலிருந்த கட்டுரைத் தாள்களை அவரிடம் கொடுத்து விட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கப் போனார்.
"நீங்க ஏன் கீழே போறீங்க? நீங்க மேடையிலேயே இருங்க!" என்று அவரைத் தடுக்க முயன்றார் நம்பி.
'பரவாயில்லை' என்பது போல் கையசைத்து விட்டுக் கீழே போய் உட்கார்ந்து கொண்டார் ராஜன்.
"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, செல்லப்பா. கட்டுரையை நல்லாப் படிச்சீங்க!" என்றார் ராஜன், தன் அறையில் அமர்ந்தபடி
"இவ்வளவு அருமையா ஒரு ஆராய்ச்சி பண்ணி, அதைச் சிறப்பா எழுதி இருக்கீங்க. நீங்களே படிச்சிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்குமே!" என்றார் செல்லப்பா.
"என்னோட பலவீனம் உங்களுக்குத் தெரியுமே, செல்லப்பா! என்னால ஒரு சபை முன்னால நின்னு பேச முடியாது. ஒண்ணு ரெண்டு தடவை முயற்சி செஞ்சு சரியா வரலேங்கறதால, இனிமே அந்த முயற்சியே வேண்டாம்னு விட்டுட்டேன். என்னோட பலவீனத்தை உங்ககிட்ட மட்டும்தான் சொல்லி இருக்கேன். அதை ரகசியமா வச்சுக்கறதுக்கு நன்றி!" என்றார் ராஜன்.
"மேடையிலேயாவது உக்காந்திருக்கலாமே, சார்? ஏன் கீழே இறங்கிப் போயிட்டீங்க?"
"அவையில பல பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் உக்காந்திருக்காங்க. அவங்க யாராவது என் கட்டுரையில ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சு என் முகத்தைப் பாத்தா, மேடையில உக்காந்துக்கிட்டு, அவங்க பார்வையை என்னால எப்படித் தாங்கிக்க முடியும்?" என்றார் ராஜன்.
'அறிஞர்கள் முகத்தைப் பார்த்துப் பேச இவர் இவ்வளவு பயப்படுகிறாரே! இவர் இவ்வளவு படித்திருந்து என்ன பயன்?' என்று நினைத்தபோது, நிறையப் படித்தவர், அறிவாளி, ஆராய்ச்சியாளர் என்றெல்லாம் ராஜனை எப்போதுமே பெரும் மதிப்புடனேயே பார்த்து வந்திருக்கும் செல்லப்பாவுக்கு முதல்முறையாக அவர் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டது.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 73
அவையஞ்சாமை
குறள் 726:
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
பொருள்:
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவை கண்டு பயப்படுபவர்க்கு அவர்களுடைய நூலறிவால் என்ன பயன்?
No comments:
Post a Comment