"இப்ப எதுக்கு சார்? அப்புறம் பாத்துக்கலாம். உங்களோட ஆர்டரை நிறைவேத்தறப்ப, அவங்களோட தொடர்பு கொள்ள வேண்டி இருக்குமே!" என்றார் மருதாசலம்.
"அதுக்குத்தான் நீங்க அவங்களை இப்பவே தெரிஞ்சுக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்!" என்ற செந்தில்குமார், பியூனை அழைத்து, சில அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி, அவர்களை அழைத்து வரச் சொன்னார்.
சில நிமிடங்களில், செந்தில்குமார் அழைத்த ஐந்து மூத்த அரிகாரிகளும் அவர் அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டனர்.
அதிகாரிகளின் பதவிகளையும், பெயர்களையும் சொல்லி, இருவருக்கும் அவர்களை அறிமுகப்படுத்திய செந்தில்குமார், தன் அதிகாரிகளைப் பார்த்து, "இவர் தனம் இண்டஸ்டிரீஸ் எம். டி. மருதாசலம், அவர் ஜெனரல் மானேஜர்... பேர் என்ன சொன்னீங்க ...ஆங், தண்டபாணி! இவங்க நம்ம புராஜக்ட்ல சப்-கான்டிராக்டரா இருக்கப் போறாங்க. அவங்க உங்களோட இன்டராக்ட் பண்ண வேண்டியிருக்கும். அதனாலதான், உங்களை அவங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு நினைச்சேன்!" என்றார்.
செய்ய வேண்டிய புராஜக்ட் பற்றி அனைவரும் சிறிது நேரம் விவாதித்தனர். பிறகு, மருதாசலமும், தண்டபாணியும் விடைபெற்றுக் கிளம்பினர்.
காரில் வரும்போது, மருதாசலம் சற்று நேரம் ஏதோ யோசனை செய்தபடி வந்தார். பிறகு, சட்டென்று தண்டபாணியிடம் திரும்பி, "தண்டபாணி! இந்த கான்டிராக்டை நாம எடுத்துக்க வேண்டாம்னு பாக்கறேன்!" என்றார்.
"ஏன் சார்? இது லாபகரமான புராஜக்ட். கடும் போட்டிக்கு நடுவில நமக்கு இந்த கான்டிராக்ட் கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் ஒர்க் ஆர்டர் கொடுக்கறதா சொல்லி இருக்காங்க. இப்ப போய்...?" என்றார் தண்டபாணி.
"நல்லவேளை, அவங்க இன்னும் ஒர்க் ஆர்டர் கொடுக்கல. நம்மைக் கூப்பிட்டு, நமக்கு இந்த கான்டிராக்டைக் கொடுக்கறதா வாய் மூலமாத்தான் சொல்லி இருக்காங்க. நாம ஆஃபீசுக்குப் போனதுமே, இந்த கான்டிராக்ட் நமக்கு வேண்டாம்னு மெயில் அனுப்பிடலாம்!"
"அது சரி, சார்! ஆனா, ஏன் இந்த கான்டிராக்ட்டை வேண்டாம்னு சொல்றீங்க? செந்தில்குமாரோ, மற்ற அதிகாரிகளோ தப்பா ஏதாவது பேசினீங்களா என்ன? நான் கவனிக்கலையே!" என்றார் தண்டபாணி, குழப்பத்துடன்.
"அவங்க பேச்செல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா, செந்தில்குமாருக்கு அவரோட அதிகாரிகள் மேல மதிப்பு இல்லை. அவங்களுக்கும் அவர் மேல ஒரு வெறுப்பு இருக்கு. அதனால, நாம கான்டிராக்ட்டை எடுத்து செய்யறப்ப, நிறைய பிரச்னைகள் வரும். அதிகாரிகள் பொறுப்பு எடுத்துக்க மாட்டாங்க. செந்தில்குமாரும், அவங்களை எதையும் முடிவு செய்ய விட மாட்டாரு. அதனால, நமக்குதான் பாதிப்பு வரும்!"
"எப்படி சார் சொல்றீங்க? அவங்க பேசினதிலேந்து அப்படியெல்லாம் இருக்கறதா எனக்குத் தெரியலியே!"
"பேச்சில என்ன இருக்கு தண்டபாணி? அவங்க பேசும்போது, அவங்க முகத்தைப் பாத்துத் தெரிஞ்சுக்கிட்டதுதான் இது. ஒத்தரோட விருப்பு வெறுப்புகளை அவர் முகம் வெளிப்படத்தற அளவுக்கு, அவரோட வெளிப்படையான பேச்சு கூட வெளிப்படுத்த முடியாது!" என்றார் மருதாசலம், சிரித்தபடி.
"எனக்கு பயமா இருக்கு சார்! ஒருவேளை, நான் வேற வேலைக்குப் போகணும்னு நினைச்சா, அதைக் கூட என் முகத்தைப் பாத்துக் கண்டுபிடிச்சுடுவீங்க போலருக்கே!" என்றார் தண்டபாணி.
"இத்தனை நாளா உங்க முகத்தைப் பாத்துக்கிட்டிருக்கேன். என்னால அதைக் கண்டுபிடிக்க முடியாதா? ஏற்கெனவே கண்டுபிடிச்சுட்டேன்!" என்றார் மருதாசலம், தண்டபாணியின் முகத்தைப் பார்த்தபடி.
"என்ன சார் சொல்றீங்க?" என்றார் தண்டபாணி, சற்று அதிர்ச்சியுடன்.
"நான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினா கூட, நீங்க என்னை விட்டுப் போக மாட்டீங்கங்கறதை நான் எப்பவோ கண்டுபிடிச்சுட்டேனே!" என்று சிரித்துக் கொண்டே கூறி, தண்டபாணியின் தோளை அன்புடன் பற்றிக் கொண்டார் மருதாசலம்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 707:
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
பொருள்:
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
No comments:
Post a Comment