Monday, May 15, 2023

776. வீணான நாட்கள்!

நாட்டின் படைத்தளபதி மறைந்து விட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

"இப்படிப்பட்ட ஒரு வீரரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. எத்தனை போர்களைக் கண்டவர் அவர்! போருக்குப் போவது என்றாலே ஏதோ விழாவுக்குப் போவது போல் உற்சாகமாகக் கிளம்பி விடுவார்!" என்றார் மன்னர், அமைச்சரிடம்.

"ஆமாம், மன்னரே! படைத்தளபதி என்ற போதிலும், போரில் முன்னணியில் நின்று ஒரு சாதாரண வீரர் போல் போரிடுவார். அவர் உடலில் எத்தனை விழுப்புண்கள்! இப்படிப்பட்ட ஒரு வீரரைக் காண்பது அரிது!" என்று ஆமோதித்தார் அமைச்சர்.

டைத்தளபதியின் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றார் மன்னர்.

படைத்தளபதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி  விட்டு, அவர்களுக்குப் பொற்காசுகள் வழங்கிய பிறகு, அங்கிருந்து திரும்பும்போது, வீட்டுச் சுவற்றில் ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டிருப்பதைப் பார்த்து, அதன் அருகில் சென்றார் மன்னர்.

ஒரு பெரிய கட்டம் வரையப்பட்டு, அது சதுரங்கப் பலகை போல் பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டத்தில் தமிழ் வருடங்களின் பெயர்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்பட்டு, அவற்றுக்கு நேராக இருந்த கட்டங்களில் தமிழ் மாதங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

சில வருடங்களில், சில மாதங்களுக்கான கட்டங்களுக்குள் சில எண்கள் எழுதப்பட்டிருந்தன.

"இவை என்ன?" என்றார் மன்னர், தளபதியின் மகனிடம்.

"அவை என் தந்தை போரில் கலந்து கொண்ட நாட்களின் தேதிகள்!" என்றான் தளபதியின் மகன்.

"இவ்வளவு நாட்கள் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறாரா? எனக்கே வியப்பாக இருக்கிறதே!" என்றார் மன்னர், வியப்புடன்.

"தாங்கள் இவ்வளவு நாட்களா என்கிறீர்கள்! அப்பா இதைப் பார்த்து அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டே, 'இவ்வளவு நாட்கள்தானா நான் போர் செய்திருக்கிறேன்? என் வாழ்நாளின் மற்ற நாட்களையெல்லாம் வீணாக்கி இருக்கிறேனே!' என்று புலம்புவார்" என்றான் தளபதியின் மகன். 

அதைச் சொல்லும்போதே, அவன் குரல் தழுதழுத்தது. தந்தை மறைந்த சோகத்தினாலா, அல்லது தந்தையை நினைத்துப் பெருமைப்பட்டதாலா என்று தெரியவில்லை!

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு

குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

பொருள்: 
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து, அவற்றுள் தன் உடலில் விழுப்புண் படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...