ஒரு கட்டத்தில், கமுதி நாட்டு மன்னன் வீரகேசரியும், மகர நாட்டு மன்னன் இளமாறனும் நேருக்கு நேர் போர் செய்தனர்.
முதலில் குதிரை மீது இருந்தபடி வாட்போரில் ஈடுபட்டவர்கள், பிறகு குதிரையிலிருந்து இறங்கி தரையில் நின்று போரிட்டனர்.
இருவரின் வாட்களும் முறிந்ததும், இருவரும் அருகிலிருந்த தங்கள் நாட்டு வீரரிடமிருந்து வேலை வாங்கிக் கொண்டனர்.
வேல்கள் மோதிக் கொண்டன. சில நிமிடங்களில், இளமாறன் சற்றுப் பின் வாங்கினான்.
வீரகேசரி தன் கையிலிருந்த வேலை இளமாறன் மீது வீசுவதற்காக ஓங்கினான்.
வேல் தன் மீது பாயப் போவது உறுதி என்பதை உணர்ந்த இளமாறன் தன் கண்களை மூடிக் கொண்டான்.
சில விநாடிகள் கழித்து, வேல் தன் மீது விழாததால் வியப்படைந்தவனாகக் கண்களைத் திறந்து பார்த்தான் இளமாறன்.
எதிரே, கையில் வேலைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டே நின்றான் வீரகேசரி.
"இளமாறா! நீ ஒரு கோழை. நான் வேல் வீசப் போவது தெரிந்ததும், அச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாய். சுத்தமான வீரனாக இருந்தால், வேல் தன்னை நோக்கி வரும்போது கண்ணை இமைக்கக் கூட மாட்டான். உன்னைப் போன்ற கோழையைப் போர்க்களத்தில் கொன்று, என் வீரத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. நீ போய் உன் கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொள். உன் படைவீரர்கள் மட்டும் போரிடட்டும்!" என்றான் வீரகேசரி, இளமாறனைப் பார்த்து இகழ்ச்சியுடன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
No comments:
Post a Comment