கையில் வேலை உயர்த்திப் பிடித்தபடி, வேலை யார் மீதோ எறிவது போன்ற தோற்றத்தில் நின்றிருந்த ஒரு வீரனின் சிலை அது. வேலின் நுனியில் ரத்தக்கறை படிந்திருந்தது. ஒரு கையால் வீரன் தன் மார்பை அழுத்திக் கொண்டிருந்தான். அவன் மார்பிலிருந்து பெருகிய ரத்தம் மார்பில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. மார்பைப் பிடித்திருந்த கையிலும் ரத்தம் படிந்திருந்தது.
"மிக அற்புதமான சிற்பம். சிற்பியன் திறமை வியப்புக்குரியது. தன் மார்பில் காயம் பட்ட நிலையிலும், எதிரியின் மீது ஈட்டியை வீசித் தாக்குதல் நடத்தும் வீரனைக் கற்பனை செய்து, அற்புதமாக இந்தச் சிலையை வடித்திருக்கிறார் சிற்பி. ஆனால் இந்தக் கலைப் படைப்பை அரண்மனை முகப்பில் வைத்திருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?" என்றார் பொற்பாதர், தன்னை அழைத்து வந்த அரசு அதிகாரியிடம்.
"பொற்பாதரே! தாங்கள் சிற்பியின் கலைத்திறனைப் பாராட்டியது சரிதான். ஆனால், இது அந்தச் சிற்பியின் கற்பனைப் படைப்பல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர்க்களத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் சிற்பி சிலையாக வடித்திருக்கிறார்!" என்றார் அரசு அதிகாரி.
"அப்படியா? போர்க்களத்தில் ஒரு வீரரின் செயலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அதை ஒரு சிலையாக வடிக்கச் செய்து, அதை அரண்மனை முகப்பில் வைக்கச் செய்த உங்கள் மன்னரின் செயல் பாராட்டத்தக்கதுதான்!" என்றார் பொற்பாதர்
பொற்பாதர் ஒப்புக்காகப் பாராட்டுகிறார் என்று புரிந்து கொண்ட அரசு அதிகாரி, "யாத்திரிகரே! வீரர் கையில் வைத்திருக்கும் வேல் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?"
"ஏன், வீரர் கையில் வேல் இருக்குமே!"
"அதில் ரத்தக் கறை படிந்திருப்பது ஏன்?"
"அந்த ஐயம் எனக்கும் ஏற்பட்டது. அவர் மார்பிலும் ரத்தம். அப்படியானால்..."
"நீங்கள் நினைப்பது சரிதான், பொற்பாதரே! அந்த வீரர் தன் மார்பில் பாய்ந்திருந்த வேலைப் பிடுங்கித்தான் தனக்கு எதிரே நிற்கும் யானை மீது எறிந்தார். அந்தக் காட்சியைத்தான் சிலையாக வடித்திருக்கிறார் சிற்பி!"
"என்ன ஒரு வீரம்!" என்று வியந்த பொற்பாதர், "அப்படியானால், துவக்கத்தில் அவர் கையில் இருந்த வேல்...?" என்றார்.
"அதை அவர் முன்பே ஒரு யானையின் மீது எறிந்து விட்டார். அதற்குள் ஒரு எதிரி வீரன் எரிந்த வேல் அவர் மார்பில் பாய்ந்து விட்டது. இன்னொரு யானை அவரைத் தாக்க வர, தன் மார்பிலிருந்த வேலைப் பிடுங்கி அந்த யானை மேல் எறிந்தார். அவருடைய வீரச் செயலை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதால்தான், அதைச் சிலையாக வடிக்கச் செய்து, அரண்மனை முகப்பில் வைத்திருக்கிறார் எங்கள் அரசர். இந்த மொத்தக் காட்சியும் இந்த நகரத்தில் உள்ள கலைக்கூடத்தில் ஓவியமாகவும் தீட்டப்பட்டிருக்கிறது. உங்களை அங்கே அழைத்துச் செல்லும்போது, அதைக் காட்டுகிறேன்!" என்றார் அரசு அதிகாரி, பெருமிதத்துடன்.
பொற்பாதர் அந்த வீரனின் சிலையை ஒரு புது மரியாதையுடன் பார்த்தார்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
No comments:
Post a Comment