"நாம் இரண்டு முறை அவருடன் போரிட்டு விட்டோம். இரண்டு போர்களுமே யாருக்குமே வெற்றி இல்லாமல் முடிந்து விட்டன. ஆயினும், கதிர்வேலர் நமக்குப் பணிய மறுக்கிறார்!" என்றார் அமைச்சர்.
"முதல் போரின்போது, நம் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நாம் போரை நிறுத்த வேண்டி இருந்தது. இரண்டாவது முறை போர் நடந்தபோது, என்னைக் கவிழ்த்து விட்டு அரியணை ஏறத் தருணம் பார்த்திருந்த என் ஒன்று விட்ட சகோதரன் வேலவரையனின் சூழ்ச்சியை முறியடிப்பதற்காக நாம் போரைக் கைவிட வேண்டி இருந்தது. அடுத்த முறை போர் நடக்கும்போது, கதிர்வேலனை நாம் முழுமையாகத் தோற்கடித்து, அவனை நமக்கு அடிபணிய வைக்க வேண்டும்!"
"வேலவரையர் நம் நாட்டுக்குள் தலைமறைவாக இருந்து கொண்டு இப்போதும் நமக்குத் தொல்லை கொடுத்து வருகிறார். அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்த பிறகுதான், நாம் மீண்டும் கதிர்வேலரின் மீது போர் தொடுக்க முடியும்!"
"அது உண்மைதான். ஆயினும், ஒரு குறுநில மன்னனான கதிர்வேலன் நம்மைப் போன்ற பேரரசை எதிர்ப்பதையும், அவனை நம்மால் பணிய வைக்க முடியவில்லை என்பதையும் நினைக்கும்போது என் நெஞ்சு கொதிக்கிறது!" என்றார் அரசர்.
அப்போது வெளியே ஏதோ அரவம் கேட்டது.
ஒரு வீரன் உள்ளே வந்து அரசரை வணங்கிய பின், "அரசே! வேலவரையரைக் கைது செய்து, சில வீரர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள்!" என்றான்.
"சில வீரர்கள் என்றால் நம் வீரர்கள்தானே?"
"நம் வீரர்கள்தான். ஆனால் கைசிக நாட்டு வீரர்கள் சிலர் அவரை எல்லையிலிருந்த நம் வீரர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கைசிக நாட்டு மன்னரிடமிருந்து ஒரு ஓலையையும் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்" என்றபடி தன் கையிலிருந்த ஓலையை அரசரிடம் பணிந்து கொடுத்தான் அந்த வீரன்.
ஓலையைப் படித்துப் பார்த்த அரசர் வியப்படைந்தவராக, அதை அமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
"கீர்த்திவளவரே! உங்கள் ஆதிகத்தை ஏற்க மறுத்து உங்களுடன் போரிடுபவன்தான் நான். ஆனால், உங்களுக்கு எதிராகச் சிலர் சூழ்ச்சி செய்வதாக அறிந்ததும், அந்தச் சூழ்ச்சியை முறியடிக்க உங்களுக்கு உதவுவதுதான் முறையாக இருக்கும் என்று நினைத்தேன். உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர் வேலவரையர் என்னைச் சந்தித்து உங்கள் படையில் சிலர் அவருக்கு விசுவாசமாக இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் உங்களைத் தோற்கடிக்க எனக்கு உதவுவதாகவும், பதிலுக்கு அவர் அரியணை ஏற நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இது போன்ற வஞ்சகச் செயல்களில் ஈடுபடுவது வீரர்களுக்கு அழகல்லவே! எனவே, அவரைக் கைது செய்து எல்லையில் உள்ள உங்கள் வீரர்களிடம் ஒப்படைக்கும்படி என் வீரர்களிடம் கூறி இருக்கிறேன். அவரை விசாரித்து, உங்கள் படையில் உள்ள காளான்களைக் களை எடுங்கள். வாய்ப்பு அமையுமானால், மீண்டும் ஒரு போரில் சந்திப்போம்! - கதிர்வேலன்."
ஓலையைப் படித்து விட்டு, அரசரின் முகத்தைப் பார்த்தார் அமைச்சர்.
"கதிர்வேலன் ஒரு சிறந்த வீரன்தான். ஐயமே இல்லை!" என்றார் அரசர்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 773:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
No comments:
Post a Comment