அரசரின் உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சரைச் சந்திக்க வந்தார் படைத்தலைவர்.
"அணிவகுப்பு நடத்தவேண்டும் என்ற அரசரின் உத்தரவு பற்றித் தங்களிடம் பேச வேண்டும்" என்றார் படைத்தலைவர்.
"இதில் பேச என்ன இருக்கிறது? அரசர் உத்தரவிட்டபடி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றார் அமைச்சர்.
"அமைச்சர் பெருமானே! முந்தைய அரசரின் காலத்தில், நம் படை எவ்வளவு வலுவானதாகவும், திறமை வாய்ந்ததாகவும் இருந்தது என்பது தங்களுக்குத் தெரியும். இந்த அரசர் அரியணை ஏறிய பிறகு, படைகளுக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவு குறைத்து விட்டார். வீரர்களுக்கு உரிய அளவில் ஊதியம் கூட வழங்க முடியவில்லை. அதனால், பல நல்ல வீரர்கள் படையிலிருந்து விலகி வேறு வேலைகளுக்குச் சென்று விட்டனர். இப்போது படையில் இருப்பவர்களின் வீரம், வலிமை, திறமை ஆகியவை நாம் பெருமைப்படும்படி இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்க முடியவில்லை. போர் நடந்தால், எதிரிப் படைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் நம் படைக்கு இல்லை, அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை!"
"படைத்தலைவரே! படைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மன்னரிடம் நான் பலமுறை கூறி விட்டேன். என் யோசனையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை!" என்றார் அமைச்சர்.
"இந்த நிலையில், படைகளின் அணிவகுப்பு நடத்தி என்ன பயன்? அப்படி ஒரு அணிவகுப்பை நடத்துவதில் எனக்கு ஆர்வமே இல்லை. ஆர்வம் இல்லாதபோது, என்னால் அதை எப்படிச் சிறப்பாக நடத்த முடியும்? அணிவகுப்பு சிறப்பாக அமையாவிட்டால், மன்னர் என் மீது கோபம் கொள்வாரோ என்ற அச்சமும் எனக்கு இருக்கிறது!"
"படைத்தலைவரே! படை இன்று இருக்கும் நிலைக்கு நீங்கள் பொறுப்பல்ல. நம் படையின் நிலை எப்படி இருந்தாலும், அது கட்டுப்பாட்டுடன் அணிவகுத்துச் சென்றால், அது எப்படிப்பட்ட கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அரசரை விடுங்கள்! அத்தகைய அணிவகுப்பைப் பார்க்கும் மக்கள் கூட எவ்வளவு பெருமிதம் அடைவார்கள்! ஒருவேளை, அரசர் கூட அந்த அணிவகுப்பைப் பார்த்து மனம் மகிழ்ந்து, படைக்காக அதிக நிதி ஒதுக்கலாம். உங்களால் இயன்ற அளவுக்கு அணிவகுப்பைச் சிறப்பாகச் செய்யுங்கள்!" என்றார் அமைச்சர், படைத்தலைவரின் தோளில் தட்டியபடி.
"நீங்கள் கூறியதைக் கேட்ட பிறகு, அணிவகுப்பை நடத்துவதில் எனக்கும் உற்சாகம் பிறந்திருக்கிறது. நீங்களும், மன்னரும், மற்ற பார்வையாளர்களும் வியக்கும் வகையில் அணிவகுப்பைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறேன்!" என்றார் படைத்தலைவர், உற்சாகத்துடன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 768:
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
No comments:
Post a Comment