Saturday, May 6, 2023

767. மணிமாறனின் யோசனை!

"காண்டவ நாட்டின் காலாட்படை மிகவும் பெரியது. எந்தப் போரிலுமே, அவர்கள் காலாட்படை முன்னே வந்து உக்கிரமாகப் போராடி, எதிரிப் படைகளின் காலாட்படைக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். அதற்குப் பிறகு, பின்னிருந்து வரும் யானை, குதிரைப் படைகளைச் சமாளிக்க முடியாமல் எதிரிப் படைகள் சிதறி ஓடி விடும். இந்த முறையைப் பயன்படுத்தித்தான் அவர்கள் பல போர்களை வென்றிருக்கிறார்கள். தங்கள் நாட்டின் பெரும் மக்கள் தொகையையும், மக்களின் ஏழ்மையையும் பயன்படுத்தி அவர்கள் ஒரு மாபெரும் காலாட்படையை உருவாக்கி இருக்கிறார்கள். மற்ற நாடுகளால் அவ்வளவு பெரிய காலாட்படையை உருவாக்க முடியாது!" என்றான் சீவக நாட்டின் துணைத்தளபதி மணிமாறன்..

"நீ இந்த விவரங்களைச் சேகரித்து வந்திருப்பது  நமக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்!" என்றான் படைத்தளபதி வல்லவராயன்.

"காண்டவ நாட்டுப் படை நம் எல்லையில் போருக்குத் தயாராக நிற்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் துவக்கலாம்!"

"நம் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நிற்கின்றனவே!"

"ஆனால், நம் சிறிய காலாட்படையை வைத்துக் கொண்டு அவர்களுடைய பெரிய காலாட்படையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?" என்ற மணிமாறன், சற்றுத் தயங்கி விட்டு, "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது!" என்றான்.

"சொல்!" என்றான் வல்லவராயன்.

"நாம் குதிரைப்படையை முன்னால் நிறுத்தினால் என்ன? அப்படிச் செய்தால் அவர்கள் காலாட்படைக்கு நம்மால் பெரும் சேதத்தை விளைவிக்க முடியுமே!"

"நாம் குதிரைப்படையை முன்னே நிறுத்தினால், அவர்களும் குதிரைப்படையை முன்னே நிறுத்துவார்கள்! அவர்கள் குதிரைப்படையும் நம்முடையதை விடப் பெரியதுதானே! அதனால் நம் குதிரைப்படையை அவர்களால் எளிதாக முறியடிக்க முடியும்!" என்ற வல்லவராயன், "ஆயினும் உன் யோசனை சரியானதுதான்!" என்றான், மணிமாறனை ஊக்குவிப்பது போல்.

"சாதிக்க முடியாததைச் சாதித்து விட்டீர்கள், தளபதி! அணியாக நின்ற நம் காலாட்படை வீரர்கள் விரைவாகப் பக்கவாட்டில் நகரப் பயிற்சி அளித்து, அவர்கள் அவ்வாறு நகர்ந்ததும் ஏற்பட்ட இடைவெளி வழியே நம் குதிரைப்படையை முன்னேறிச்  வைத்து, காண்டவ நாட்டின் காலாட்படையின் மீது எதிர்பாராத விதத்தில் தாக்குதல் நடத்தி, அவர்களைச் சிதறி ஓட வைத்து விட்டீர்கள்!" என்றான் மணிமாறன், உற்சாகத்துடன்.

"நீ சொன்ன யோசனைதான், மணிமாறா! ஆனால், எதிர்ப்படைகள் எதிர்பாராத விதத்தில் இதை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைத்துத் திட்டமிட்டேன். அதற்கான பயிற்சியைக் குறைந்த நேரத்திலேயே நம்மால் அளிக்க முடிந்ததால்தான் நம் படைக்கு வெற்றி கிடைத்தது!" என்றான் வல்லவராயன்.

பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி

குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

பொருள்: 
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து, அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை (தூசிப்படை) தன் மீது வராமல் தடுப்பதே படை.
அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...