'எந்த தைரியத்தில் என் படையை எதிர்த்து நிற்கிறார்கள்? அதுவும் 'போர்க்களக் கூற்றுவன்' என்ற அச்சுறுத்தும் அடைமொழி கொண்ட என்னை எதிர்த்து!"
ஏனோ, அவருக்கு குருட்சேத்திரப் போர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் கூட கௌரவர் சேனை 11 அட்சௌகிணி என்ற எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. பாண்டவர் சேனையின் எண்ணிக்கை 7 அட்சௌகிணிதான்
ஆனால், பாண்டவர் சேனைதான் வெற்றி பெற்றது!
'சே! இந்தத் தருணத்தில் இந்த எண்ணம் ஏன் வருகிறது? இந்தச் சிறிய படையால் நம்மை எப்படி வெல்ல முடியும்?'
எதிரே நின்ற வருண நாட்டுப் படையின் தளபதி இந்திரசேனனைப் பார்த்தார் தேவரசன். இந்திரசேனனின் முகத்தில் ஒரு சிரிப்பு! போர் துவங்குவதற்கு முன் யாராவது சிரிப்பார்களா? ஒருவேளை இது என் கற்பனையா?
போர் துவங்கியது.
போர் துவங்கி மூன்று நாட்கள் ஆன நிலையில், இரு தரப்புக்குமே வெற்றி கிட்டவில்லை. ஆனால், வருண நாட்டுப் படையை விட சௌமிய நாட்டுப் படைக்கு இழப்பு அதிகமாக இருந்தது.
மூன்றாம் நாள் இறுதியில், போரை நிறுத்தி விட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் சௌமிய நாட்டு தளபதி தேவரசன்.
இரண்டு தரப்பினரும் பேசி ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்திரசேனனுடன் தனியே உரையாடிக் கொண்டிருந்தபோது, "போர் துவங்குமுன் உங்களைப் பார்த்தேன். உங்கள் முகத்தில் ஒரு சிரிப்பு தெரிந்தது. அது என் கற்பனை இல்லை என்று நினைக்கிறேன். எதனால் அந்தச் சிரிப்பு? என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவில்லையே!" என்றார் தேவரசன், சிரித்துக் கொண்டே.
"நிச்சயமாக இல்லை. உங்களுக்கு இருந்த பெருமையை மதித்துத்தான் சிரித்தேன்" என்றார் இந்திரசேனன்.
"புரியவில்லையே!"
"உங்களுக்குப் "போர்க்களக் கூற்றுவன்" என்ற பெருமை உண்டல்லவா? எமனையே எதிர்த்துப் போர் செய்யப் போகிறோம் என்ற பெருமித்ததில்தான் சிரித்தேன்!" என்றார் இந்திரசேனன்.
எமனைக் கண்டு அஞ்சும் உலக இயல்புக்கு மாறாக, எமனைக் கண்டு சிரிக்கும் தன்மையுள்ள இந்தப் படையைத் தன்னால் வெல்ல முடியாமல் போனதில் வியப்பில்லை என்று நினைத்துக் கொண்டார் தேவரசன்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 77
படைமாட்சி
குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
No comments:
Post a Comment