"கேளுப்பா!" என்றார் கிளை மேலாளர் கண்ணன்.
"நானும் மாதவனும் ஒரே படிப்புதான் படிச்சிருக்கோம். ஒரே நேரத்திலதான் இந்த நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தோம். ரெண்டு பேருமே ஒரே வேலைதான் செய்யறோம். ஒரே சம்பளம்!"
"இன்னும் சில ஒற்றுமைகளை விட்டுட்டியே?"
"எதை சார்?"
"ரெண்டு பேருக்குமே ரெண்டு கை, ரெண்டு கால், ரெண்டு கண், ஒரு வாய், ஒரு மூக்குதான் இருக்கு!"
"சார்!"
"விளையாட்டுக்குச் சொன்னேன். சொல்லு."
"நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்டதான் நேரடியா வேலை செய்யறோம். நீங்க அவன்கிட்ட நிறைய விஷயங்களை சொல்றீங்க. ஆனா, எங்கிட்ட அப்படி சொல்றதில்ல."
கண்ணன் கேசவனை உற்றுப் பார்த்தார்.
"சார்! நான் கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க. நீங்க எங்ககிட்ட இயல்பாப் பேசறீங்க. எதுவா இருந்தாலும் தயக்கம் இல்லாம கேக்கலாம்னு சொல்லி இருக்கீங்க. அதனாலதான் கேட்டேன்!" என்றான் கேசவன், தவறாகக் கேட்டு விட்டோமோ என்ற அச்சத்துடன்.
"நீ கேட்டது தப்புன்னு நான் சொல்லலியே! உன் கேள்விக்கு எப்படி பதில் சொல்றதுன்னு யோசிச்சேன், அவ்வளவுதான். சரி. நான் உங்ககிட்ட சொல்லாத விஷயங்களை மாதவன்கிட்ட சொன்னேன்னு எப்படிச் சொல்ற?"
"எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி வேலைதான் நீங்க கொடுக்கறீங்க. ஆனா, மாதவன் கூடுதலா சில வேலைகளைச் செய்யறான். நீங்க சொல்லித்தானே அவன் அப்படிச் செஞ்சிருப்பான். எங்கிட்ட சொல்லி இருந்தா, நானும் அதையெல்லாம் செஞ்சிருப்பேனே!"
"ஒரு நிமிஷம் இரு!" என்ற கண்ணன், மணியை அடித்து பியூனை அழைத்து மாதவனை அழைத்து வரச் சொன்னார்.
மாதவன் வந்ததும், "மாதவன்! போன வருஷத்து ஆடிட் ரிபோர்ட்டை எனக்கு அனுப்பி இருக்கியே! நான் அதைக் கேக்கலையே?" என்றார்.
"இல்லை சார். ரெண்டு மூணு நாள்ள ஆடிட்டர்கள் வருவாங்க, எல்லா ரிகார்டுகளையும் எடுத்து வைன்னு சொன்னீங்க. அவங்க வரும்போது, போன வருஷம் ஆடிட்ல குறிப்பிட்டுச் சொன்ன குறைகளைச் சரி பண்ணிட்டோமான்னு நீங்க பார்க்க விரும்புவீங்கன்னு நினைச்சேன். அதெல்லாம் வேண்டாமா சார்?" என்றான் மாதவன், சற்றுக் குழப்பத்துடன்.
"வேணும். நான் கேக்கறதுக்கு முன்னால, நீயே அதையெல்லாம் எடுத்து வச்சுட்டியேன்னுதான் கேட்டேன். குட் ஜாப். சரி. நீ போகலாம்!" என்றார் கண்ணன்.
மாதவன் சென்றதும், "கேசவன்! இப்ப புரிஞ்சுதா? அவன்கிட்ட நான் அதிகமா சொல்றேன், உங்கிட்ட சொல்லலைங்கறது இல்லை. நான் சொன்னதுக்கு மேலேயும், என் மனசில என்ன இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு மாதவன் வேலை செய்யறான். நீ அப்படிச் செய்யாததை நான் ஒரு குறையா நினைக்கலை. ஆனா, நீயும் முயற்சி செஞ்சா, மத்தவங்க சொல்றதுக்கு மேல அவங்க மனசில என்ன இருக்கும்னு யோசிச்சுச் செயல்படலாம். இது உனக்கு வாழ்க்கையில பலவிதங்களிலும் உதவியா இருக்கும்!" என்றார் கண்ணன்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 71
குறிப்பறிதல்
குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
பொருள்:
ஒருவர் மனதில் கருதியதை அவர் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும், அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
No comments:
Post a Comment