காசி கூறியதைக் கேட்டதும், மூர்த்திக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.
'நாம் செய்யப் போற வேலை எதிர்பார்த்ததை விட சுலபமாகவே முடிந்து விடும் போலிருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டான் அவன்.
தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ராமசாமியைப் பார்த்தான். அவர் முகமும் மலர்ந்திருந்தது. அங்கே அமர்ந்திருந்த கோவில் குடமுழுக்குக் குழுவின் ஒன்பது உறுப்பினர்களுமே காசியின் பேச்சைக் கேட்டு உற்சாகமடைந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான் அவன்..
கோவிலுக்குக் குடமுழுக்கு செய்யத் தீர்மானித்து, அதற்காக ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, குடமுழுக்குக்கான செலவுகளுக்காக ஊரில் அனைவரிடமும் நன்கொடை கேட்டுப் பெறத் தீர்மானித்து, முதலில் ஊர்ப் பெரியவரான காசியைப் பார்க்க வந்தனர். துவக்கத்திலேயே அவர் உதவுவதாகக் கூறியது உற்சாகம் அளிக்காதா என்ன?
சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பிறகு, மூர்த்தி ராமசாமியைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும், "ஐயா! அப்ப நாங்க கிளம்பறோம்!" என்றடியே, தன் கையிலிருந்த துணிப்பையிலிருந்து ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்து, அதைக் காசியிடம் நீட்டினான்
"கடையில புதுசா நோட்டு வாங்கி, சாமி சந்நிதியில வச்சு எடுத்துக்கிட்டு வந்திருக்கோம். முதல் ஆளா உங்க பேரை எழுதித் தொகையை எழுதிடுங்க. நீங்க எப்ப சொல்றீங்களோ அப்ப வந்து பணத்தை வாங்கிக்கறோம்!" என்றான் மூர்த்தி.
காசி அவன் நீட்டிய நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளாமலேயே, "இருக்கட்டும். அப்புறம் எழுதிக்கலாம். என் பேரைத்தான் முதல்ல எழுதணும்னு இல்ல. மத்தவங்ககிட்ட வசூலிச்சுக்கங்க. நான் அப்புறம் தரேன்!" என்றார், சற்று இறுக்கத்துடன்.
"இல்லீங்கையா! உங்க பேருதான் முதல்ல வரணும்னு விருப்பபடறோம். பேரை எழுதித் தொகையை மட்டும்..."
கையை ஆட்டி மூர்த்தியை இடைமறித்த காசி, "இருக்கட்டும் தம்பி! இந்த வருஷம் விளைச்சல் எப்படி இருக்குன்னு தெரியல. அதையெல்லாம் பாத்துட்டுதான் முடிவு செய்யணும். நீங்க போயிட்டு அப்புறம் வாங்களேன்!" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டார்.
மூர்த்தி குழப்பத்துடன் எழுந்து நிற்க அனைவரும் எழுந்து வெளியேறத் தயாராயினர்.
காசியின் வீட்டை விட்டு வெளியே வந்ததும், மூர்த்தி ராமசாமியிடம், "என்னண்ணே! முதல்ல அவ்வளவு உற்சாகமாப் பேசினவரு, ஏன் திடீர்னு வேற மாதிரி பேசினாரு?" என்றான்.
ராமசாமி அவனுக்கு பதில் சொல்லாமல், மற்ற உறுப்பினர்களைப் பார்த்து, "நீங்கள்ளாம் வீட்டுக்குப் போயிட்டு, சாயந்திரம் மூர்த்தி வீட்டுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பத்தி அப்ப பேசலாம்!" என்றார்.
அவர்கள் சென்றதும், ராமசாமி மூர்த்தியிடம், "வா! நடந்துக்கிட்டே பேசலாம்!" என்றார்.
சற்று நேரம் நடந்ததும்,"மூர்த்தி! நீயும் நானும் முன்னால உக்காந்திருந்தோம். மத்த ஏழு பேரும் நமக்குப் பின்னால உக்காந்திருந்தாங்க. பின்னால உக்காந்திருந்தவங்க என்ன செஞ்சாங்கன்னு நீ கவனிக்கல!" என்றார் ராமசாமி.
"சும்மாதானே உக்காந்துக்கிட்டிருந்தாங்க?" என்றான் மூர்த்தி.
"சும்மா உக்காந்துக்கிட்டிருந்திருந்தாங்கன்னா, எல்லாம் நல்லபடியாப் போயிருக்கும். காசி ஒரு பெரிய தொகையை எழுதி இருப்பாரு, ஏன், பணத்தைக் கூடக் கொடுத்திருப்பாரு!"
"அப்படின்னா?"
"கடைசியா உக்காந்திருந்த சுப்புவும் மணியும், தங்களுக்குள்ள ஏதோ ரகசியமாப் பேசிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு முன்னால உக்காந்திருந்த குணாவும், கருணாகரனும் அவங்களைத் திரும்பிப் பார்த்தைக் கூட நான் கவனிச்சேன். நான் திரும்பிப் பார்த்து அவங்களை அடக்கலாமான்னு நினைச்சேன். ஆனா அப்படி செஞ்சா, அவங்க செய்யறதைக் காசியோட கவனத்துக்குக் கொண்டு வர மாதிரி இருக்கும்னு நினைச்சுப் பேசாம இருந்துட்டேன். காசிகிட்ட மும்முரமாப் பேசிக்கிட்டிருந்ததால, நீ இதை கவனிக்கல. ஆனா காசி அதை கவனிச்சுட்டாரு!"
"அப்படியா? நான் கவனிக்கல. ஆனா, அது அவ்வளவு பெரிய குத்தமா என்ன?" என்றான் மூர்த்தி.
"மூர்த்தி! பெரியவங்க, அதிகாரத்தில இருக்கறவங்க, பணக்காரங்க, பெரிய மனுஷங்க இவங்ககிட்டல்லாம் பேசறப்ப ரொம்ப கவனமா இருக்கணும். இவங்கள்ளாம் ரொம்ப... இங்கிலீஷ்ல ஒரு வார்த்தை இருக்கே, அது என்ன. ம்..ம்.. ஆங்.. சென்சிடிவ். இவங்கள்ளாம் ரொம்ப சென்சிடிவானவங்க. அவங்க முன்னால மத்தவங்க அமைதியா. அடக்கமா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. இந்த ரெண்டு பேரும் இப்படி ரகசியம் பேசிச் சிரிச்சதைப் பார்த்ததும், காசிக்கு எரிச்சல் வந்திருக்கும். அதனாலதான், பணம் கொடுக்கத் தயாரா இருந்தவரு மனசை மாத்திக்கிட்டாரு. ரெண்டு மூணு நாள் கழிச்சு, நீயும் நானும் அவரைத் தனியாப் போய்ப் பார்த்து, சுப்புவும், மணியும் அப்படி நடந்துக்கிட்டதுக்கு அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டுப்போம். அப்ப சமாதானமாயிடுவாருன்னு நினைக்கிறேன். இன்னிக்கு சாயந்திரம் எல்லாரும் உன் வீட்டில கூடறப்ப, இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு அவங்க ரெண்டு பேருக்கும் புத்தி சொல்லணும்!" என்றார் ராமசாமி.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 694:
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
பொருள்:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.
No comments:
Post a Comment