'எப்படி இதை உணராமல் போனேன்? இரண்டு நாட்களாக அமைச்சகத்தில் சில முக்கியமான பணிகளில் மூழ்கி இருந்ததால், இதை கவனிக்கத் தவறி விட்டேன் போலிருக்கிறது!' என்று நினைத்துக் கொண்டார் பூபதி.
முதலமைச்சரின் செயலரைத் தொலைபேசியில் அழைத்துத் தான் முதல்வரைச் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டார் பூபதி.
"சார்! முதல்வர் இப்ப ரொம்ப பிசியா இருக்காரு. யாருக்கும் நேரம் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு!" என்றார் முதல்வரின் செயலர்.
"பொதுவா சொல்லி இருப்பாரு. நான் அவரைச் சந்திக்க விரும்பறேன்னு சொல்லுங்க. கண்டிப்பா நேரம் ஒதுக்குவாரு!"
சற்றுத் தயங்கிய செயலர், "மன்னிக்கணும், சார்! குறிப்பா நீங்க நேரம் கேட்டா, கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காரு!" என்றார்.
அன்று மாலை கட்சி அலுவலகத்துக்குச் சென்ற பூபதி, அங்கே கட்சித் தலைவரைச் சந்தித்தார்.
"என்ன ஐயா பிரச்னை? ஏன் முதல்வர் என்னைச் சந்திக்க மாட்டேங்கறாரு?" என்றார் பூபதி.
"உங்க அமைச்சகத்தோட செயல்பாடு பற்றி முதல்வருக்கு ஏதோ புகார் வந்திருக்கு. அவர் துறைச் செயலாளரைக் கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. துறைச் செயலாளரோட ஆலோசனையை ஏத்துக்காம நீங்க முடிவெடுத்ததா, அவர் சொல்லி இருக்காரு. நீங்க எடுத்த முடிவால அரசுக்குக் கெட்ட பேர் ஏற்பட்டிருக்கு. அதனாலதான், முதல்வர் கோபமா இருக்காரு!" என்றார் கட்சித் தலைவர்.
"ஓ! அந்தப் பாலம் விஷயமா? வேலை சீக்கிரம் நடக்கணுங்கறதுக்காக, அந்தப் பாலம் தொடர்பான ஒப்பந்தத்தோட நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்தினேன். அதனால வேலை சீக்கிரம் முடிஞ்சு, அந்தப் பாலத்தைத் திறந்துட்டமே! நல்லதுதானே நடந்திருக்கு?" என்றார் பூபதி.
"நீங்க எந்த நோக்கத்தோட செஞ்சீங்களோ, தெரியாது. ஆனா ஒப்பந்தத்தோட நிபந்தனைகளை நீங்க தளர்த்தினது, அந்த ஒப்பந்ததாரருக்கு சலுகை காட்டத்தான்னு புகார் எழுந்திருக்கு. அதனால, அந்தப் பாலத்தோட வேலைகள் சரியா நடந்திருக்காதுன்னு மக்கள் மத்தியில ஒரு சந்தேகம் வந்திருக்கு..."
"இதெல்லாம் எதிர்க்கட்சிகள் கிளப்பி விடுகிற புரளி!" என்றார் பூபதி, தலைவரை இடைமறித்து.
"துறைச் செயலாளரோட ஆலோசனைக்கு எதிரா நீங்க செயல்படறதுக்கு முன்னே, முதல்வர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் இல்ல? அவர்கிட்ட நெருக்கமா இருந்தும், நீங்க இதை அவர்கிட்ட சொல்லாதது அவருக்கு உங்க மேல சந்தேகத்தை ஏற்படுத்தாதா?"
"நான் முதல்வர்கிட்ட இதை நேரடியாப் பேசி விளக்கினா, அவர் புரிஞ்சுப்பாரு."
"உங்களுக்கு முதல்வரைப் பத்தித் தெரியும். அவர் ஒத்தர் மேலே வச்சிருக்கற நம்பிக்கை குறையும்படி ஏதாவது நடந்தா, திரும்பவும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தறது கஷ்டம்."
"இன்னிக்கு ராத்திரி நான் முதல்வரை அவர் வீட்டில பார்த்துப் பேசி, அவர்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லிப் புரிய வைக்கறேன்!" என்றார் பூபதி, நம்பிக்கையுடன்.
"அதுக்கு அவசியம் இல்லேன்னு நினைக்கறேன். முதல்வர் உங்களை அமைச்சரவையிலேந்து நீக்கிட்டாரு. எல்லா டிவி சேனல்லேயும், இப்ப அந்தச் செய்திதான் ஓடிக்கிட்டிருக்கு!" என்ற தலைவர், பூபதி பார்ப்பதற்காகத் தன் அறையிலிருந்த டிவியை ரிமோட் மூலம் இயங்கச் செய்தார்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 70
மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
பொருள்:
அரசரைச் சார்ந்திருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், கடுமையான தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அரசருக்கு ஐயம் ஏற்பட்டபின், அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் இயலாத செயல்.
No comments:
Post a Comment