"இத்தனை ஆண்டுகளாக, இளவரசரை இந்தக் காட்டுப் பகுதியில் வைத்துப் பாதுகாத்து வருகிறீர்கள். சிறிது சிறிதாக, ஒரு வலுவான படையையும் உருவாக்கி விட்டீர்கள். தலைநகரைத் தாக்கிச் செங்கோடனைச் சிறையெடுத்து, அரசாட்சியைக் கைப்பற்றுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது. இளவரசரை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கம், உங்கள் வாழ்நாளிலேயே நிறைவேறத்தான் போகிறது!" என்றான் படைத்தலைவன் காங்கேயன்.
"சிறிய தந்தையே! அரசராக இருந்த என் தந்தை, எப்படி செங்கோடனால் முறியடிக்கப்பட்டார்? இந்தக் கேள்வியை நான் எத்தனையோ முறை உங்களிடம் கேட்டும், நீங்கள் எனக்கு விடையளிக்கவில்லையே!" என்றான் இளவரசன் பரிதி.
"சொல்கிறேன், பரிதி! நீ சிறுவனாக இருந்தவரை, விவரங்களை உனக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. இன்னும் ஒரு மாதத்தில், நாம் தலைநகரைத் தாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். தாக்குதல் துவங்கிய ஓரிரு நாட்களில், செங்கோடனை வெற்றி கொண்டு, அரண்மனையைப் பிடித்து விடுவோம். அதற்குப் பிறகு, நீ மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப் போகிறாய். அதனால், இந்த விவரங்கள் உனக்குத் தெரியத்தான் வேண்டும்" என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் இளந்திரையர்.
"நான் சொல்வதைக் கேட்டு நீ அதிர்ச்சி அடையக் கூடாது. உன் தந்தை அவ்வளவு நல்ல மனிதரல்ல. அவர் மது, மாது என்ற இரு போதைகளிலேயே எப்போதும் இருந்தார். உன் தாய் அவரைத் திருத்த முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.
"உன் தந்தை பெரும்பாலும் மதுபோதையில் இருந்ததால், மற்றவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அதனால், அவருக்கு நண்பர்கள், துணைவர்கள் யாருமே இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, உன் சிறிய தந்தை செங்கோடன், உன் தந்தையை அரண்மனையிலேயே சிறை வைத்து விட்டு, ஆட்சியைப் பிடித்து விட்டான்.
"உன் தாயையும், உன்னையும், செங்கோடனிடமிருந்து காப்பாற்ற எண்ணி, என் நண்பர்கள் சிலரின் உதவியுடன், உங்கள் இருவரையும் அரண்மனையிலிருந்து வெளியே அழைத்து வந்து, இந்தக் காட்டுப் பகுதியில் தங்க வைத்தேன். உன் தந்தை சிறைப்பிடிக்கப்பட்ட துயரில், உன் தாய் விரைவிலேயே இறந்து விட்டார். உன் தந்தையும், ஒரு சில ஆண்டுகளில் சிறையிலேயே இறந்து விட்டார்.
"அரச குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் இந்தக் காட்டுவாசிகளின் உதவியோடு உன்னை வளர்த்து, உனக்காகப் போர் செய்ய ஒரு படையையும் உருவாக்கி விட்டேன். உன் தந்தையைப் பற்றிய கசப்பான உண்மைகள் உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதால்தான், இத்தனை நாட்களாக நான் இவற்றை உன்னிடம் கூறவில்லை!"
ஒரு நிமிடம் மௌனமாக இருந்த பரிதி, "செங்கோடன் என் சிறிய தந்தை என்கிறீர்கள். நீங்களும் என் சிறிய தந்தைதானே! அப்படியானால், செங்கோடன் உங்கள் சகோதரர்தானே?" என்றான்.
"இல்லை பரிதி. நான் உன் சிறிய தந்தை இல்லை. உன் தந்தையின் நண்பன். அவ்வளவுதான். நீ என்னை நெருக்கமானவனாக நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், நீ என்னைச் சிறிய தந்தை என்று அழைக்கும்படி பழக்கப்படுத்தினேன்!"
பரிதி மீண்டும் மௌனமாக இருந்தான்.
"உன் தந்தையைப் பற்றி நினைத்து வருந்தாதே, பரிதி! உன் தந்தையைப் பற்றிய விவரங்களை உன்னிடம் சொல்லி இருக்கவே மாட்டேன். ஆனால், அரசனாகப் போகும் நீ, உன் தந்தை செய்த தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவற்றை உன்னிடம் கூறினேன்!" என்றார் இளந்திரையர்
"சிறிய தந்தையே - நான் உங்களை இப்போதும் என் சிறிய தந்தையாகத்தான் கருதுகிறேன். நீங்கள் என் தந்தை பற்றிக் கூறியவற்றில் ஒரு விஷயம் தவறு என்று நினைக்கிறேன்!"
"எதைத் தவறு என்கிறாய், பரிதி?"
"என் தந்தைக்கு நல்ல குணங்கள் இல்லாததாலும், அவரிடம் இருந்த குற்றங்கள் காரணமாகவும் அவருக்கு நண்பர்களோ, துணைவர்களோ இல்லாமல் போய்விட்டார்கள் என்று கூறினீர்களே?"
"ஆமாம், உண்மைதானே அது?"
"அது எப்படி உண்மையாக இருக்க முடியும்? என் தந்தைக்கு உற்ற துணைவராக நீங்கள் இருந்திருக்கிறீர்களே!" என்றான் பரிதி.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 87
பகைமாட்சி
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து..
No comments:
Post a Comment