"கந்தர்வ நாட்டுக்கு உடனே ஒரு தூதரை அனுப்பிப் போரைத் தடுக்க முயல வேண்டும்" என்றார் அமைச்சர்.
"அவர்கள் போர் தொடுக்கப் போகிறார்கள் என்று அறிந்து நாம் தூதரை அனுப்பினால், அதை நம் பலவீனமாக அவர்கள் நினைக்க மாட்டார்களா? நாம் போருக்கு அஞ்சுகிறோம் என்று கூட அவர்கள் நினைக்கலாம்."
"அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு திறமையான தூதரால், அந்த எண்ணத்தை மாற்றி, நம் இரு நாடுகளின் நலனைக் கருதித்தான் நாம் போரைத் தடுக்க விரும்புகிறோம் என்ற எண்ணத்தை உருவாக்க முடியும். ஏன், போரைத் தவிர்ப்பது அவர்களுக்குத்தான் அதிக நன்மை பயக்கும் என்ற எண்ணத்தைக் கூட ஏற்படுத்த முடியும்!"
"நீங்கள் சொல்வது சரிதான் அமைச்சரே! அதனால், நாம் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை தூதராக அனுப்ப வேண்டும்!" என்றான் நீதிவர்மன், அமைச்சரைப் பார்த்துச் சிரித்தபடி.
"அந்தப் பொருத்தமான நபர் யார் என்பது குறித்து எனக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. தாங்கள் அதை ஏற்றுக் கொண்டால், அவரையே அனுப்பலாம்!" என்றார் அமைச்சர், புன்னகை செய்தபடி.
"நீங்களும் நானும் நினைப்பது ஒரே நபரைப் பற்றித்தான் என்று நினைக்கிறேன். அந்தப் பொருத்தமான நபர்..."
"சொல்லுங்கள், அரசே!"
"நீங்களேதான்! உங்கள் பெயரை நீங்களே சொல்லத் தயங்குவது எனக்குப் புரிகிறது!" என்றான் அரசன்.
"இல்லை, அரசே! நான் நினைத்தது இன்னொரு நபரை."
"யார் அந்த நபர்?"
"இளவரசர்தான்!"
"இளவரசனா? அவனுக்கு அனுபவம் போதாது. தூதனாகச் செல்வதற்கு அவன் எப்படிப் பொருத்தமானவனாக இருப்பான்?" என்றான் அரசன்.
"அரசே! கந்தர்வ நாட்டு மன்னிடம் இரண்டு செய்திகளைச் சொல்ல வேண்டும், முதல் செய்தி, நம் நாடு எப்போதுமே போரை விரும்பியதில்லை, நம்மை விடச் சிறிய நாடுகளுடன் கூட நாம் நட்பாகவே இருக்க விரும்பி இருக்கிறோம் என்பது. இரண்டாவது செய்தி, நம் முயற்சிகளையும் மீறிப் போர் ஏற்பட்டபோதெல்லாம் நாம்தான் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது. இந்த இரண்டு செய்திகளையும் வலாற்றுப் பின்னணியில் புலவர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதி வைத்துள்ள நூல்களை ஆதாரம் காட்டி, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தூதராகச் சென்று இதைச் செய்ய, இந்த இளம் வயதிலேயே பல நூல்களைப் பயின்று ஆய்ந்த அறிவுடன் விளங்கும் நம் இளவரசரை விடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?" என்றார் அமைச்சர்.
பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 69
தூது
குறள் 683:
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
பொருள்:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment