Thursday, March 16, 2023

679. கேட்காமலே செய்த உதவி!

"ரெண்டு நாளா உனக்கு ஃபோன் பண்ணிக்கிட்டிருந்தேன். நீ எடுக்கல!" என்றான் ராமசாமி, குற்றம் சாட்டும் தொனியில்.

"சாரி! நீ கேட்ட உதவியை என்னால செய்ய முடியல. முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தேன். பணம் கிடைச்சப்பறம் ஃபோன் செய்யலாம்னு நினைச்சுதான் உன் ஃபோனை எடுக்கல!" என்றான் மாதவன்.

"நீ ஒரு தடவை கூட இல்லைன்னு சொல்லதில்லையே! உன்னை ரொம்ப நம்பிக்கிட்டிருந்தேன்!" என்றான் ராமசாமி, ஏமாற்றத்துடன்.

"இந்த ஒரு தடவை இல்லேன்னு சொல்லும்படி ஆயிடுச்சு. மன்னிச்சுக்க!" என்று கூறி ஃபோனை வைத்தான் மாதவன்.

"அவர் உங்க நண்பர். வியாபாரத்துக்காகத்தானே பணம் கேட்டாரு?  கொடுத்து உதவி இருக்கலாமே!" என்றாள் மாதவனின் மனைவி பாரு.

"பணம் இல்லேன்னுதானே இத்தனை நேரம் அவங்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்?"

"நீங்கதான் எங்கேயாவது புரட்டிக் கொடுப்பீங்களே, அது மாதிரி செஞ்சிருக்கலாம் இல்ல?"

"புரட்ட முடிஞ்சா, புரட்டிக் கொடுத்திருக்க மாட்டேனா? சில சமயம் இப்படித்தான் ஆகும்!" என்று பேச்சை முடித்தான் மாதவன்.

"நீங்க செஞ்ச உதவியை நான் எந்தக் காலத்திலேயும் மறக்க மாட்டேன்!" என்றான் மாணிக்கம்.

"கந்து வட்டிக்கெல்லாம் கடன் வாங்கவே கூடாது. வாங்கினா இப்படித்தான் ஆகும்!" என்றான் மாதவன்.

"நீங்க சொல்றது சரிதான். ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். வட்டியெல்லாம் ஒழுங்காத்தான் கட்டிக்கிட்டிருந்தேன். ரெண்டு மாசம் வட்டி கட்டலேன்னதும், எப்படி நெருக்கடி கொடுத்தாங்க! கதி கலங்கிப் போயிட்டேன். பெண்டாட்டி பிள்ளைங்களைக் கூடக் கடத்திடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கும், எனக்கும், வியாபாரத்தில போட்டி, விரோதம் எல்லாம் இருந்தாலும், அதையெல்லாம் பாக்காம, யார் மூலமோ விஷயத்தைக் கேள்விப்பட்டு, எப்படியோ பணத்தைப் புரட்டிக் கொடுத்து என்னைப் பெரிய ஆபத்திலேந்து காப்பாத்தி இருக்கீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க கொடுத்து உதவின பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுத்துடறேன்!" என்றான் மாணிக்கம், மாதவனின் கைகளைப் பற்றிக் கொண்டு.

"எனக்குப் பணத்தைக் கொடுக்கறதுக்காக, மறுபடி கந்து வட்டிக்குக் கடன் வாங்காதீங்க!" என்று சிரித்துக் கொண்டே கூறிய மாதவன், "ஆனா, நான் உங்ககிட்ட ஒரு உதவியை எதிர்பாக்கறேன்!" என்றான்.

"சொல்லுங்க, மாதவன்! எதுவானாலும் செய்யறேன்!"

"என் நண்பன் ஒத்தன் வியாபாரத்துக்காகப் பணம் கேட்டான். எப்பவும் அவனுக்குக் கொடுத்து உதவற நான், இந்த முறை உங்களுக்கு உதவி செய்யணுங்கறதுக்காக, அவனுக்குக் கூட உதவல!"

மாதவன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து மாணிக்கம் காத்திருந்தார்.

"நான் உங்களுக்கு உதவி செஞ்சதுக்கான காரணம், நமக்குள்ள இனிமே விரோதம் இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான். தொழில்ல நாம போட்டியாளர்களா இருப்போம். ஆனா, தனிப்பட்ட விரோதம் வேண்டாம். அதுதான் நான் உங்ககிட்ட கேட்டுக்கறது!" என்றான் மாதவன்.

"நீங்க இவ்வளவு பெரிய உதவி செஞ்சப்பறமும் நான் உங்ககிட்ட விரோதம் பாராட்டினா, நான் மனுஷனே இல்லை. நீங்க சொல்றபடி, நாம வியாபாரத்தில போட்டியாளர்களா இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருக்கலாம்!" என்றான் மாணிக்கம்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

பொருள்:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும், பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...