Thursday, March 16, 2023

678. கொல்கத்தாவுக்குப் போ!

"சார்! நான் ரிடயர் ஆக இன்னும் ரெண்டு வருஷம்தான் இருக்கு. இப்ப என்னை கொல்கத்தாவுக்கு மாத்தி இருக்கீங்களே!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யறது, ராமகிருஷ்ணன்? உங்களை மாதிரி சீனியர் ஒத்தரோட தேவை கொல்கத்தா பிராஞ்ச்சுக்கு வேண்டி இருக்கே!" என்றார் நிர்வாக இயக்குனர் தயாளன்.

"என் பெண் காலேஜில படிக்கறா, பையன் ஸ்கூல் முடிக்கப் போறான். என் குடும்பத்தை அங்கே அழைச்சுக்கிட்டுப் போக முடியாது!"

"வயசான காலத்தில, ரெண்டு வருஷம் பேச்சிலர் லைஃபை அனுபவிங்க! குடும்பம் இங்கேயே இருக்கட்டும். கொல்கத்தாவில உங்களுக்கு ஆஃபீஸ்லேயே தங்க ரூம் கொடுத்திருக்கோம். அலவன்ஸ் வேற வரும். அதனால, செலவு ஒரு பிரச்னையா இருக்காது!" என்றார் நிர்வாக இயக்குனர்.

"ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யறதுங்கற கேள்வி எல்லோருக்குமே வரும். ஆனா, ரிடயர் ஆனப்பறம் என்ன செய்யணுங்கறதை, நான் பல வருஷங்கள் முன்னாலேயே தீர்மானிச்சுட்டேன்!" என்றார் ராமகிருஷ்ணன்.

"என்ன செய்யணும்னு?" என்றார் அவருடைய நண்பர் ராகவன்.

"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறதுன்னு!"

"உனக்கு ஆன்மீகத்தில நிறைய ஈடுபாடு இருக்குங்கறது எனக்குத் தெரியுமே! நீ நிறைய ஆன்மீகப் புத்தகங்கள் படிச்சு, ஆன்மீக அறிவை வளர்த்துக்கிட்டேங்கறதும் எனக்குத் தெரியும். ஆனா, படிச்சதையெல்லாம் வச்சுக்கிட்டு ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஆயிட முடியுமா?" என்றார் ராகவன்.

"முடியாது. ஒரு நல்ல ஆன்மீக சொற்பொழிவாளர்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டாதான் ஒரு நல்ல சொற்பொழிவாளரா உருவாக முடியும்னு  நினைச்சேன். ஆனா, வேலையில இருந்துக்கிட்டே அது மாதிரி பயிற்சி எடுத்துக்க முடியல. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தப்பறமும், வீட்டு விஷயங்களை கவனிக்கத்தான் நேரம் சரியா இருக்கும். என்ன செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்பதான், என் கம்பெனியில எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தாங்க!"

"என்ன வாய்ப்பு அது?"

"ரிடயர் ஆறதுக்கு ரெண்டு வருஷம் இருக்கறப்ப, என்னை கொல்கத்தாவுக்கு மாத்தினாங்க. முதல்ல, அதை ஒரு பிரச்னையா நினைச்சேன். அப்புறம், அதை ஒரு வாய்ப்பாப் பயன்படுத்திக்கிட்டேன்" என்றார் ராமகிருஷணன்.

"எப்படி?"

"பல வருஷங்கள் இங்கே பிரபலமா இருந்த ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் கொல்கத்தாவில செட்டில் ஆகி இருக்கார்னு கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் எனக்குப் பயிற்சி கொடுக்க ஒத்துக்கிட்டாரு. எனக்கு எப்ப நேரம் கிடைக்குமோ அப்பல்லாம் வரலாம்னு சொன்னாரு. நான் வேலை செஞ்ச இடம் சென்னைக்குப் பக்கத்தில இருக்கற ஊரா இருந்தா, வார இறுதியில எல்லாம் வீட்டுக்கு வந்திருப்பேன். கொல்கத்தா தூரத்தில இருந்ததால, அடிக்கடி சென்னைக்கு வர முடியாது. அதனால, வார இறுதிகள்ள, நிறைய நேரத்தைப் பயிற்சிக்காகப் பயன்படுத்திக்கிட்டேன். இப்ப, ரிடயர் ஆகி ஊருக்கு வந்தாச்சு. உடனேயே, என்னோட ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளை ஆரம்பிச்சுடலம்!" என்றார் ராமகிருஷ்ணன், உற்சாகத்துடன்.

பொருட்பால்
அமைச்சியல்
அதிகாரம் 68
வினை செயல்வகை

குறள் 678:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

பொருள்:
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது, ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

      அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...