Wednesday, August 3, 2022

805. வேலை வேண்டுமா?

"மிஸ்டர் தினேஷ்! நான் ஹியூமன் காபிடல் டேப்பர்ஸ்லேந்து வர்மா பேசறேன். உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல ஓபனிங் இருக்கு. ரெப்யூடட் கம்பெனி. சம்பளத்தில உங்களுக்குப் பெரிய ஜம்ப் கிடைக்கும். "

"நான் உங்ககிட ரிஜிஸ்டர் பண்ணிக்கவே இல்லையே! .எப்படி எனக்கு கால் பண்றீங்க?" என்றான் தினேஷ் சற்று எரிச்சலுடன்.

"சாரி சார்! எங்ககிட்ட பதிவு பண்ணிக்காதவங்களை நாங்க கூப்பிட மாட்டோம், உங்க ரெஸ்யூமே எங்க வெப்சைட்ல அப்லோட் ஆகி இருக்கு. அதனாலதான் உங்களைக் கூப்பிட்டேன்."

"சாரி. யாரோ எனக்குத் தெரியாம அப்லோட் பண்ணி இருக்காங்க. அதை நான் எடுத்துடறேன். நீங்க தயவு செஞ்சு அதை எந்த கம்பெனிக்கும் அனுப்பாதீங்க."

"சாரி சார். ஏற்கெனவே சில கம்பெனிகளுக்கு அனுப்பிட்டோம். இனிமே வேணும்னா அனுப்பாம இருக்கோம்" என்று சொல்லி ஃபோனை வைத்தார் வர்மா.

'எனக்குத் தெரியாமல் யார் என் ரெஸ்யூமேயை  அப்லோட் செய்திருப்பார்கள்?' என்று யோசித்தான் தினேஷ்.

அடுத்த இரண்டு நாட்களில் இரண்டு மூன்று நிறுவனங்களிலிருந்து தினேஷுக்குத் தொலேபேசி அழைப்புகள் வந்தன. அவனுக்கு வேலை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் நேரில் அவர்கள் அலுவலகத்துக்கு வந்தால் மற்ற விவரங்களைப் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.

தினேஷ் தனக்கு வேலை மாறும் உத்தேசம் இல்லை என்று சொல்லி அவற்றை மறுத்து விட்டான்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு அலுவலக வேலை  தொடர்பாகப் பொது மேலாளரைப் பார்க்கச் சென்றான். பேசி விட்டு அவன் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன தினேஷ், வேற வேலை தேடறீங்களா?" என்றார் பொது மேலாளர்.

தினேஷ் அதிர்ச்சியுடன், "இல்லை சார்! ஏன் கேக்கறீங்க?" என்றான்.

"உங்க ரெஸ்யூமே  பல நிறுவனங்களுக்குப் போயிருக்கு போல இருக்கே!"

"இல்லை சார்! யாரோ ஒரு ஹெட் ஹன்ஃட்டர்கிட்ட என் ரெஸ்யூமே எப்படியோ போயிருக்கு. அவங்க அதை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. யாருக்கும் அனுப்பாதீங்கன்னு நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன். ரெண்டு மூணு கம்பெனிகள்ளேந்து எனக்கு கால் வந்தது. அவங்ககிட்டேயும் நான் வேற வேலைக்கு முயற்சி பண்ணலேன்னு சொல்லிட்டேன். நீங்க தப்பா எதுவும் நினைக்காதீங்க சார்!" என்றான் தினேஷ் பதட்டத்துடன்.

"இட் இஸ் ஓகே!" என்றார் பொது மேலாளர்.

"'யாரோ என் ரெஸ்யூமேயை ஒரு ஹெட் ஹன்ட்டரோட சைட்ல அப்லோட் பண்ணிட்டாங்க. அதனால பெரிய பிரச்னை ஆயிடுச்சு!" என்றான் தினேஷ் தன் நண்பன் முரளியிடம்.

"என்ன பிரச்னை?"

"அவங்க என் ரெஸ்யூமேயை சில கம்பெனிகளுக்கு அனுப்பி இருக்காங்க. அங்கேந்தெல்லாம் எனக்கு ஃபோன் வந்தது. என் கம்பெனி ஜெனரல் மானேஜருக்கு வேற இது தெரிஞ்சு போயிடுச்சு. அவரு என்னைக் கேட்டாரு. நான் வேற வேலைக்கு முயற்சி செய்யலேன்னு அவர்கிட்ட அழுத்தமா சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி இருக்கேன்!" என்றான் சதீஷ்.

"ஏன், வேற நல்ல வேலை கிடைச்சா போக வேண்டியதுதானே?"

"என்னடா முட்டாள்தனமா பேசறே? இந்த ஃபீல்டிலேயே நம்பர் ஒன் கம்பெனி எங்களோடதுதான். இதை விட்டு யாராவது போவாங்களா? மத்த கம்பெனிகள்ளேந்து பல பேர் இங்கே ஒரு சின்ன வேலையாவது கிடைக்குமான்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்காங்க!"

"பின்னே, வேலை ரொம்ப போர் அடிக்குது, பிரஷர் அதிகமா இருக்கு, வேற வேலை கிடைச்சா போயிடலாம் போல இருக்குன்னு எங்கிட்ட சொன்னியே?"

"எப்ப சொன்னேன்? எப்பவாவது ஒரு அலுப்பில அப்படிச் சொல்லி இருப்பேன். ஆமாம், ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் தினேஷ் சட்டென்று ஏதோ புரிந்தவனாக.

"சாரி. நான்தான் உன் ரெஸ்யூமேயை அப்லோட் பண்ணினேன். உனக்கு வேற வேலை கிடைச்சா சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சு அப்படிப் பண்ணினேன். நான் அதிகம் படிக்காதவன். உன் வேலையோட முக்கியத்துவம், விவரங்கள் எல்லாம் தெரியாம அப்படி செஞ்சுட்டேன். உனக்கு பிரச்னையாகும்னு தெரியாது. என்னை மன்னிச்சுடு!" என்றான் முரளி.

"ஒரு பிரச்னையும் இல்ல. நீ எனக்கு நல்லது நினைச்சுதானே செஞ்சிருக்க? எதுக்கு மன்னிப்பெல்லாம்? ஆமாம். என் ரெஸ்யூமே உனக்கு எப்படிக் கிடைச்சது?"

"உன் வீட்டுக்கு வரப்ப உன் ரூம்ல மேஜை மேல ரெண்டு காப்பி இருந்தது. சும்மா படிச்சுப் பாக்கலாம்னுதான் ஒரு காப்பியை எடுத்து வச்சுக்கிட்டேன்."

"ஹார்ட் காப்பி இருக்கட்டுமேன்னு பிரின்ட் அவுட் எடுத்து வச்சேன். ரெண்டு எடுத்தேன். அப்புறம் பாத்தா ஒண்ணுதான் இருந்தது. நீதான் அதை எடுத்துக்கிட்டுப் போனியா?" என்றான் தினேஷ் சிரித்துக் கொண்டே.

"என்னடா சிரிக்கறே? என் மேல ரொம்ப கோபப்படுவேன்னு நினைச்சேன்.

"உன் மேல நான் எப்படிடா கோபப்பட முடியும்? ஒரு நண்பனா நீ எங்கிட்ட உரிமை எடுத்துக்க முடியாதா என்ன?" என்றான் தினேஷ் முரளியின் முதுகில் தட்டியபடி.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 81
பழைமை (நீண்டகால நட்பு) 

குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

பொருள்: 
வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றோ மிகுந்த உரிமை என்றோ உணர வேண்டும்.
       அறத்துப்பால்                                                                       காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...