"எப்படி இருக்க முடியும்? படிப்பை முடிச்சு ரெண்டு வருஷம் ஆகப் போகுது. இன்னும் வேலை கிடைக்கல. ரொம்ப வெறுப்பா இருக்கு. உன்னைப் பார்த்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னுதான் வந்தேன். நீ ஃப்ரீதானே?" என்றான் கண்ணன்.
"உன்னை மாதிரி நண்பர்கள் விஷயத்தில நான் எப்பவும் ஃப்ரீதான். ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை, என் பெரியப்பாவைப் பாத்துட்டு வருவேன். இன்னிக்குப் போகலாம்னு நினைச்சேன். பரவாயில்லே. அடுத்த வாரம் போய்க்கறேன்."
"சாரி. எனக்காக நீ உன் ப்ரொக்ராமை மாத்திக்க வேண்டாம். நான் வேணும்னா அடுத்த வாரம் வரேன்."
"ஒண்ணும் பிரச்னை இல்லை. பெரியப்பாவைப் பாக்கப் போறது ஒரு மரியாதைக்காகத்தான். அடுத்த வாரம் போயிக்கறேன். நாம எங்காவது வெளியில போகலாம்" என்றான் பிரகாஷ்.
நண்பர்கள் இருவரும் ஒரு நல்ல ஓட்டலுக்குச் சென்று உணவுருந்தி விட்டு, ஒரு சினிமாவுக்குப் போய் விட்டு, மாலை மீண்டும் பிரகாஷின் அறைக்கு வந்தனர்.
சற்று நேரம் பொதுவாகப் பேசிய பின், "எல்லா வேலைக்கும் அப்ளை பண்ற இல்ல?" என்றான் பிரகாஷ்.
"நான் பார்த்தவரையில, பெரிய நிறுவனங்கள்ள போட்டி அதிகமா இருக்கு. அம்பது போஸ்டுக்கு, ஆயிரம் பேரு இன்டர்வியூவுக்கு வராங்க. அதனால, பெரிய நிறுவனங்களுக்கு அப்ளை பண்றதை நிறுத்திட்டேன். மத்த வேலைகளுக்கெல்லாம் அப்ளை பண்றேன்" என்றான் கண்ணன்.
"அது தப்புடா! தேர்ந்தெடுக்கப்படற அம்பது பேரில, நீ ஒத்தனா இருக்கலாமே! சில பெரிய நிறுவனங்கள்ள உன்னைத் தேர்ந்தெடுக்கலேங்கறதுக்காக, பெரிய நிறுவனங்களுக்கே அப்ளை பண்ணாம இருந்தா, உனக்கான வாய்ப்புகளை நீ குறைச்சுக்கற மாதிரி ஆகாதா?"
"நல்ல கம்பெனியில வேலை கிடைக்கற கொடுப்பினை எனக்கு இல்லேன்னு நினைக்கிறேன், விதி எனக்கு எதிரா இருக்கறப்ப, அதை எதிர்த்துப் போராடறதில என்ன பயன் இருக்கும்?"
அதற்கு மேல் நண்பனிடம் அது பற்றிப் பேச விரும்பாமல், பேச்சின் திசையை மாற்றினான் பிரகாஷ்.
"ஆமாம், நம்ம குருமூர்த்தி எப்படி இருக்கான்? மறுபடி, புது பிசினஸ் ஏதாவது ஆரம்பிச்சிருக்கானா?" என்றான் கண்ணன், சிரிப்புடன்.
"அவனும் உன்னை மாதிரி தன்னோட தலையெழுத்து சரியில்லைன்னுதான் நினைக்கிறான். ஆனா, ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கான்" என்றான் பிரகாஷ்.
"எனக்குத் தெரிஞ்சு, இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்சி எடுத்தான். அது சரியா வரலேன்னதும், நெட்வொர்க் மார்க்கெடிங்ல இறங்கினான். அதிலேயும் தோல்விதான். இப்ப என்ன பிசினஸ் செய்யறான்?" என்றான் கண்ணன், கேலியாக.
"கண்ணா! நீ அவனைக் கிண்டல் பண்றது சரியில்ல. உன்னை மாதிரி, அவனுக்கும் வேலை கிடைக்கல. அதனால வேலை தேடிக்கிட்டே, வேற என்ன செய்யலாம்னு யோசிச்சான். அதிக முதல் போடாம செய்யக் கூடியது என்னன்னு பாத்து, இன்ஷ்யூரன்ஸ், நெட்வொர்க்கிங் மார்க்கெடிங்னு இறங்கினான். அதில எல்லாம் அவனுக்குத் தோல்விதான். ஆனா, அவன் சும்மா இருக்க மாட்டான். வேற ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருப்பான்" என்றான் கண்ணன்.
'விதி மேல பழி போட்டுட்டு சரியான முயற்சி கூட செய்யாத நீ, தன் முயற்சிகள்ள தோல்வி அடைஞ்சாலும், புதுசா ஏதாவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கற குருமூர்த்தியைக் குற்றம் சொல்லலாமா?' என்ற கேள்வி, நண்பனின் பதிலில் பொதிந்திருந்தது கண்ணனுக்குத் தெரிந்தது.
"சரி, வரேன். நீ சொன்ன மாதிரி, இனிமே பெரிய நிறுவனங்களுக்கும் அப்ளை பண்றேன்!" என்று சொல்லி, நண்பனிடம் விடைபெற்றான் கண்ணன்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)
குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
பொருள்:
நன்மை விளைவிக்கும் விதிப்பயன் இல்லாமல் இருப்பது யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.
No comments:
Post a Comment