"ஶ்ரீதேவின்னா லக்ஷ்மி. மூதேவிங்கறது அவங்க அக்கா!" என்றார் ஏகாம்பரம்.
சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்தின் மகன் குமார் - நிதிஷின் அப்பா - தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இந்த உரையாடல் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தவன் போல், தொலைக்காட்சியின் ஒலியை அடக்கி விட்டுத் தன் தந்தையும், தன் மகனும் பேசுவதை கவனித்தான்.
"மூதேவி கெட்டவங்களா?"
"கெட்டவங்கன்னு இல்ல. கடவுள்னா, நமக்கு நல்லது செய்யணும் இல்ல? லக்ஷ்மி நமக்கு எல்லாம் கொடுப்பாங்கன்னு நம்பி, லக்ஷ்மியை வணங்கறோம். மூதேவி நமக்கு நல்லது செய்ய மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை."
"அதனாலதான், மூதேவியை யாரும் கும்படறதில்லையா?"
"ஆமாம்."
"உண்மையிலேயே, ஶ்ரீதேவி, மூதேவி எல்லாம் இருக்காங்களா?"
"கோவிலுக்குப் போய்க் கடவுளைக் கும்பிடறோம். கடவுள் இருக்கார்னு நினைச்சுதானே? அது மாதிரி, இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான்."
"எங்க பள்ளிக்கூடத்தில ஒரு சார், சரியாப் படிக்காதவங்களை மூதேவின்னு திட்டுவாரு. மூதேவிங்கறது ஒரு பொண்ணுதானே? ஆனா, அவர் பையங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாரு!"
"உங்க வாத்தியார் மட்டுமில்ல, பல பேர், ஆம்பிளைங்களைக் கூட மூதேவின்னு திட்டுவாங்க. மூதேவிங்கறது ஒரு ஆள் இல்ல. மூதேவியை லக்ஷ்மியோட அக்கான்னு சொன்னா கூட, அவங்களை ஒரு பெண்ணா நினைக்க வேண்டியது இல்ல. அழுக்கு, சுத்தம் இல்லாம இருக்கறது, சோம்பேறித்தனம், முயற்சி செய்யாம முடங்கிக் கிடக்கறது இதுக்கெல்லாம் சேர்த்துத்தான் மூதேவின்னு ஒரு பேர் வச்சிருக்கோம்."
"நமக்கு லக்ஷ்மிதான் வேணும், மூதேவி கூடாது, இல்ல?"
"ஆமாம். லக்ஷ்மிதானே மங்களமானவங்க. நமக்கு நல்லது செய்யறவங்க. நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கறவங்க? சரி. நமக்கு எப்படி நல்லது நடக்கும்? சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, நடக்குமா?"
நடக்காது என்று கூறுவது போல், தலையைப் பக்கவாட்டில் ஆட்டிய நிதிஷ், "ஆமாம், நான்தானே உங்கிட்ட கேள்வி கேக்கறேன்! நீ ஏன் அடிக்கடி அப்பாவைப் பாத்துப் பேசறே? அப்பாதான், டிவி பாத்துக்கிட்டிருக்காரு இல்ல?" என்றான்.
"இல்ல. உன் அப்பாவும் நம்ம பேச்சை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கான். அதனாலதான், அவனைப் பாத்தும் பேசறேன்!" என்றார் ஏகாம்பரம், மகன், பேரன் இருவரையும் பார்த்துச் சிரித்தபடியே.
"ஏம்ப்பா? உனக்கு இதெல்லாம் தெரியாதா? நீ சின்னப் பையனா இருக்கறப்ப, தாத்தா இதையெல்லாம் உனக்குச் சொல்லலியா?" என்றான் நிதிஷ், தன் தந்தையைப் பார்த்து.
இதற்கு குமார் பதில் சொல்வதற்குள், "நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனா உங்கப்பாவுக்கு அதெல்லாம் மறந்திருக்கும். அதான் திரும்பவும் கேக்கறான். கேட்டா நல்லதுதான்!" என்ற ஏகாம்பரம், "என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? லக்ஷ்மி நல்லது செய்வாங்க. ஆனா சும்மா உக்காந்துக்கிட்டிருந்தா, நல்லது நடக்காது. நாம முயற்சி செய்யணும், உழைக்கணும். முயற்சி, உற்சாகம், சுத்தம், உழைப்பு, நல்ல எண்ணங்கள் இதையெல்லாம்தான் லக்ஷ்மின்னு சொல்றோம். நம்மகிட்ட இதெல்லாம் இருந்தா, நமக்கு நல்லது நடக்கும். அழுக்கு, குப்பை, சோம்பேறித்தனம், மெத்தனம், அதிகம் தூங்கறது, நம்பிக்கை இல்லாம இருக்கறது இதையெல்லாம்தான் மூதேவின்னு சொல்றோம். இதெல்லாம் இருந்தா, நல்லது நடக்காது. அதனால, லக்ஷ்மின்னு சொல்றதும், மூதேவின்னு சொல்றதும், உடம்பு அளவிலேயும், மனசு அளவிலேயும் நாம ஆரோக்கியமா, சுறுசுறுப்பா, உற்சாகமா இருக்கறதையும், இல்லாததையும்தான். என்ன, புரிஞ்சுதா?" என்றார்.
புரிந்தது என்பது போல், நிதிஷ் தலையை ஆட்டினான். ஏகாம்பரம் திரும்பி மகனைப் பார்த்துச் சிரித்தார்.
தந்தை தன் முயற்சியால் ஓரளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதால், எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், சோம்பேறித்தனமாகத் தான் இருப்பதைத் தான் தந்தை சுட்டிக் காட்டுகிறார் என்று புரிந்து கொண்ட குமார், கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
'அதான் எத்தனையோ தடவை, என் மூஞ்சிக்கு நேரா வெளிப்படையாவே சொல்லிட்டீங்களே! இப்ப பேரனுக்கு ஏதோ கதை சொல்ற மாதிரி வேற எனக்குச் சொல்லிக் காட்டணுமாக்கும்!' என்று நினைத்துக் கொண்டான் குமார்.
'எத்தனையோ தடவை நேரடியா சொல்லியே உனக்கு உறைக்கல. இப்படி மறைமுகமா சொன்னா மட்டும் உறைக்கவா போகுது?" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ஏகாம்பரம்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கிறாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் திருமகள் வாழ்கிறாள்.
No comments:
Post a Comment