Sunday, August 28, 2022

616. ஓட்டல் வாசலில் ஒரு சந்திப்பு!

அந்த ஓட்டலுக்குள் நான் நுழைய முற்பட்டபோது, ஓட்டலிலிருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கொண்டிருந்த அந்த மனிதர் என்னை உற்றுப் பார்த்து விட்டு, "நீங்க சிவராமன் சாரோட பையன்தானே?" என்றார்.

"ஆமாம்" என்ற நான், "நீங்க யாருன்னு தெரியலியே!" என்றேன்.

"என்ன சந்திரா! என்னைத் தெரியலியா? நான் உங்க வீட்டில குடி இருந்தேனே? ஜம்பு!" என்றார் அவர்.

"ஓ, நீங்களா? அது எத்தனையோ வருஷம் முன்னால இல்ல? அதான் டக்னு நினைவுக்கு வரல. சௌக்கியம்தானே? வரேன்" என்றபடி ஓட்டலுக்குள் செல்ல முயன்றேன் நான்.

"இருப்பா! என்ன அவசரம்?" என்று என் கையைப் பிடித்துத் தடுத்த ஜம்பு, "அப்ப நீ சின்னப் பையன். ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்த. உங்க வீட்டில உங்களுக்கு பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த எங்களோட நீ அதிகம் பழகினதில்ல. ஆனா, உங்கப்பா எப்படிப்பட்ட மனுஷர்! அவரை என்னால  எப்படி மறக்க முடியும்? எப்படி இருக்காரு?"

"அப்பா காலமாகிப் பல வருஷங்கள் ஆயிடுச்சு!" 

"கடவுளே! அவருக்கு வயசு ஆகியிருக்கும். ஆனாலும் வருத்தமாத்தான் இருக்கு. அவரை மாதிரி ஆத்மாக்கள் இந்த உலகத்துக்குத் தேவை. நீ அப்ப சின்னப் பையன்கறதால உனக்குத் தெரிஞ்சிருக்காது. நான் ஒரு கம்பெனியில சேல்ஸ்மேனா இருந்தேன். குறைஞ்ச சம்பளம். ரொம்ப கஷ்டமன வேலை. டார்கெட்டை ரீச் பண்ணலேன்னா சம்பளமே கொடுக்க மாட்டாங்க.  

"குடும்பத்தைக் காப்பாத்த ரொம்ப கஷ்டப்பட்டேன். சில மாசம் வாடகை கொடுக்க ரொம்ப லேட் ஆயிடும். ஆனா உங்க அப்பா அதுக்காக கோவிச்சுக்க மாட்டாரு. 'சம்பளம் வரலேன்னா நீங்க என்ன செய்வீங்க? சம்பளம் வந்ததும் கொடுங்க'ம்பாரு. நான் விரக்தியா இருக்கறப்பல்லாம், 'நீங்க கடுமையாத்தான் உழைக்கறீங்க. மனசைத் தளர விடம முயற்சி செஞ்சுக்கிட்டே இருங்க தம்பி! முயற்சிகளுக்கு நிச்சயமாப் பலன் கிடைக்கும்!'னு அவர் சொல்றப்பல்லாம் சும்மா ஆறுதலுக்காக சொல்றாருன்னு நினைச்சுப்பேன்.

"ஆனா, தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டே இருந்ததால, அவர் சொன்னபடி பலன் கிடைச்சது. நானே சொந்தத்தில ஒரு சின்ன ஏஜன்சி எடுத்து இப்ப அது பெரிசா வளர்ந்து நல்ல வசதியா இருக்கேன். உங்கப்பாவை வந்து பாக்கணும்னு நினைச்சுப்பேன். ஆனா வர முடியாமலே போயிடுச்ச! இப்ப அவரே இல்லேங்கற. அதே வீட்டிலதானே இருக்கீங்க?" என்றார் ஜம்பு.

"இல்லை."

"ஓ, வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டிட்டீங்களா? இப்ப எல்லாரும் அப்படித்தானே செய்யறாங்க? அப்பாவோட வியபாரத்தை நீதானே பாத்துக்கற?"

இதற்கு என்ன பதில் சொல்வதென்று நான் யோசிப்பதற்கள், அவர்  தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "நான் வரேன். ஒரு இடத்துக்குப் போகணும்!" என்று சொல்லி விடைபெற்றார்.

நான் ஓட்டலுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே, கல்லாவில் அமர்ந்திருந்த முதலாளி, "ஏம்ப்பா! வேலைக்கு வந்தா நேரே உள்ள வரணும். வாசல்ல நின்னு யார்கிட்டேயோ மணிக்கணக்காப் கேசிக்கிட்டிருக்க?" என்றார் கடுமையான குரலில்.

அவருக்கு முன் மாட்டப்பட்டிருந்த சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். என் வேலை துவங்குவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. ஆனால் நான் ஓட்டல் வாசலில் யாரிடமோ நீண்ட நேரம் பேசி விட்டு தாமதமாக வேலைக்கு வந்ததைப் போல் பேசுகிறார்!

என்ன செய்வது? அவர் ஓட்டல் முதலாளி. நான் சர்வர்தானே!  அவர் கூறியது தவறு என்று நான் சுட்டிக் காட்ட முடியுமா என்ன?

என் வீட்டில் குடியிருந்த ஜம்பு என் அப்பாவின் பேச்சால் உந்தப்பட்டு முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னேறி விட்டார்.

'நல்ல நிலையில இருக்கறவங்க கூட  இன்னும் முன்னேறுவதற்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். முயற்சி இல்லாம இருந்தா அவங்க இருந்த நிலையிலேந்து கீழே போயிடுவாங்க' என்று என் அப்பா என்னிடமும் பலமுறை கூறி இருக்கிறார்.

ஆனல் அவர் அறிவுரையைக் கேட்டுச் செயல்படாத நான், மெத்தனமாக இருந்ததால், அவர் நடத்தி வந்த வியாபாரத்தைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாமல் வியாபாரத்தை இழுத்து மூடி விட்டு, வீட்டையும் இழந்து விட்டு, வருமானத்துக்கு இந்த ஓட்டலில் சர்வராகப் பணியாற்ற வேண்டி நிலைக்கு வந்திருக்கிறேன்!

முதலாளியின் பேச்சுக்கு பதில் கூறாமல் என் வேலையைத் தொடங்க ஓட்டலுக்குள் நுழைந்தேன். 

அரசியல் இயல்
அதிகாரம் 62
ஆள்வினையுடைமை (விடாமுயற்சி)

குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

பொருள்:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

      அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...