Monday, May 9, 2022

583. உளவுத்துறை!

ராம்சந்தர் அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சிக்குள் மற்ற தலைவர்களின் ஆதிக்கமும் வலுவாகவே இருந்தது. அதனால் அமைச்சர்களைத் தெரிவு செய்வதிலும், அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்குவதில் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன.

கட்சிக்குள்ளும், கட்சியின் மூத்த தலைவர்களிடமும் பலமுறை விவாதிக்கப்பட்ட பிறகு, ஒருவழியாக அமைச்சரவை இறுதியாக்கப்பட்டது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்த சிலருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி வழங்கப்பட்டவர்களில் சிலருக்கு அவர்கள் கேட்ட துறை கிடைக்கவில்லை. 

 ஆயினும் பதவி வேண்டுமானால் சில சமரசங்கள் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்ற புரிதலினால் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைகளை ஏற்றுக் கொண்டு பதவி ஏற்றனர்.

"பொதுவா உள்துறை இலாகாவை முதல்வர்தான் வச்சுப்பாரு. நீங்க பிடிவாதமா இருந்து உள்துறையை வாங்கிட்டீங்க! பெரிய சாதனைதான் இது!" என்றான் உள்துறை அமைச்சர் கணேஷ்பாபுவின் ஆதரவாளன் சதீஷ்.

"பின்னே? முதல்வர் பதவிக்கே நான் போட்டி போட்டிருக்கணும்? ஆனா அதுக்கு இன்னும் நேரம் வரலை. இப்போதைக்கு உள்துறையைக் கையில வச்சுக்கிட்டா நமக்கு வேண்டியதை சாதிச்சுக்கிட்டு, நம்ம எதிரிகளைக் கட்டுப்பாட்டில வச்சு நம்மை வலுப்படுத்திக்கிட்டோம்னா, காலம் வரப்ப முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறது சுலபமா இருக்கும்!" என்றார் கணேஷ்பாபு.

"உளவுத்துறை அன்றாடம் சேகரிச்ச தகவல்களை உள்துறை ஐ ஜி தினமும் உள்துறை அமைச்சர்கிட்ட வந்து சொல்லம்னு ஒரு நடைமுறை இருக்கு இல்ல?" என்றார் கணேஷ்பாபு, காவல்துறைத் தலைவரிடம்.

"ஆமாம்."

"நான் பதவி ஏற்று ஒரு வாரமாச்சு. பதவி ஏற்ற அன்னிக்கு வந்து மரியாதைக்கு என்னைப் பாத்துட்டுப் போனதோட சரி. அதுக்கப்பறம் உளவுத்துறை ஐ ஜி எங்கிட்ட ரிப்போர்ட் பண்ணவே இல்லையே!"

"தெரியாது சார்! அவர் எனக்குக் கீழே இருந்தாலும் அவர் துறை சுதந்திரமா செயல்படணுங்கறதுதான் ரொம்ப நாளா இருக்கற நடைமுறை. அதனால நான் அவரைக் கேட்க முடியாது. நீங்களே அவரைக் கூப்பிட்டுக் கேக்கறதுதான் சரியா இருக்கும்!"

தான் உளவுத்துறை ஐ ஜியை இரண்டு முறை அழைத்தும் அவர் வரவில்லை என்பதைக் காவல்துறைத் தலைவரிடம் சொல்லித் தன் அவமான உணர்வைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத கணேஷ்பாபு, "சரி. நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்" என்றார்.

"வாங்க!" என்று கணேஷ்பாபுவை வரவேற்றார் முதல்வர் ராம்சந்தர்.

"உளவுத்துறை ஐ ஜி எங்கிட்ட தினசரி அறிக்கை கொடுக்கறதே இல்லை. நான் கூப்பிட்டு அனுப்பினாலும் வரலே! நீங்க உடனே அவரை மாத்திட்டு வேற ஆளைப் போடுங்க!" என்றார் கணேஷ்பாபு கோபத்துடன்.

"வேற ஒத்தரைப் போட்டாலும் அவரும் அப்படித்தான் நடந்துப்பாரு!" என்றார் முதல்வர் சிரித்தபடி.

"என்ன சொல்றீங்க நீங்க?" 

"உளவுத்துறை ஐ ஜி எங்கிட்டதான் ரிப்போர்ட் பண்ணணும், வேற எந்த அமைச்சரோ, காவதுறைத் தலைவரோ கூப்பிட்டாலும் போகக் கூடாதுன்னு நான்தான் அவருக்கு உத்தரவு போட்டிருக்கேன்!"

"அது எப்படி? அவர் உள்துறை அமைச்சர்கிட்டத்தானே ரிப்போர்ட் பண்ணணும்?" 

"பொதுவா முதல்வர்தான் உள்துறை அமைச்சரா இருப்பாரு. அதனால அந்த வழக்கம் இருந்தது. இப்ப அவர் முதல்வர்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னு நான் நடைமுறையைக் கொஞ்சம் மாத்தி இருக்கேன். அவ்வளவுதான்!" என்றார் ராம்சந்தர்.

"அதுதான் ஏன்னு கேக்கறேன்!"

"கணேஷ்பாபு! முதல்வர் தன் விருப்பப்படிதான் தன் அமைச்சரவையை அமைக்கணும். ஆனா நம் கட்சியில இருக்கற கோஷ்டிப் பிரச்னையால என்னால அப்படி செய்ய முடியல. நிறைய சமரசம் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆனா, நாட்டில என்ன நடக்குதுன்னு உளவுத்துறை மூலமா நான் தெரிஞ்சுக்கலேன்னா என்னால ஆட்சியே நடத்த முடியாது."

"அதுக்கு என்ன? உளவுத்துறை எங்கிட்ட சொல்ற விஷயங்களை நான் உங்ககிட்ட பகிர்ந்துப்பேனே!" என்றார் கணேஷ்பாபு, சமாதானமாகப் பேசும் தொனியில்.

"நீங்க மொத்த ரிபோர்ட்டையும் கேட்டுக்கிட்டு, அதில எங்கிட்ட பகிர்ந்துக்க வேண்டிய விஷயம் என்னன்னு முடிவு பண்ணி அதை மட்டும் எங்கிட்ட பகிர்ந்துக்கறதை விட, ஒரு முதல்வரா மொத்த ரிப்போர்ட்டையும் நான் வாங்கிக்கிட்டு, அதில உங்களுக்குத் தெரிய வேண்டிய விஷயங்களை மட்டும் உங்ககிட்ட பகிர்ந்துக்கறதுதான் ஆட்சிக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்!" என்ற ராம்சந்தர், தொடர்ந்து, "எதிர்காலத்தில நீங்க முதல்வராகி - உங்களுக்குத் அந்த ஆசை இருக்கே - உள்துறை அமைச்சரா வேற ஒத்தர் இருந்தா, அப்ப இந்த யோசனை உங்களுக்குப் பயன்படும்னு நினைக்கிறேன்!" என்றார் சிரித்துக கொண்டே. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 59
ஒற்றாடல்

குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

பொருள்: 
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.
               அறத்துப்பால்                                                            காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...