Tuesday, January 18, 2022

543. நாடு விட்டு நாடு சென்று...

"குருவே, ஏன் நாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வேறு நாட்டில் சென்று குடியேறுகிறோம்?" என்று வினவினான் வினயன்

"என் குருவின் சித்தாந்தத்தை இந்த வையம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்பதை நீ அறிவாய். அதனால்தான் ஒவ்வொரு நாடாகச் சென்று அங்கு என் குருவின் சித்தாந்தத்தைப் பரப்பி, இந்தப் பணி தொடர்ந்து நடைபெற ஒவ்வொரு நாட்டிலும் சில மடங்களை உருவாக்கி, நம் சித்தாந்தத்தை ஏற்று அதை நன்கு கற்றறிந்த ஞானிகளிடம்  மடங்களை நிர்வகித்து நம் சித்தாந்தத்தைத் தொடர்ந்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்த பிறகு, இன்னொரு நாட்டுக்கு உன்னுடன் செல்கிறேன். என் ஆயுள் முடிந்த பிறகு, இந்தப் பணியை நீ தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால்தான் உன்னை என்னுடனேயே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் குரு.

"அதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது என்று நம்புகிறேன் குருவே!" என்றான் வினயன்.

"இருக்கட்டும். இப்போது இந்த மாளவி நாட்டுக்குள் நாம் நுழைந்திருக்கிறோம். நான் இந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறேன். நீ ஊருக்குள் சென்று இங்கு வேதபாடசாலைகள் எத்தனை இருக்கின்றன, அவற்றுள் ஒன்றில் நாம் தங்க முடியுமா என்று பார். அதுபோல் கல்விக் கூடங்கள் எத்தனை இருக்கின்றன, அன்னசத்திரங்கள் எத்தனை இருக்கின்றன என்று பார்த்து வா. நம் இருவருக்கும் கொஞ்சம் உணவும் சேகரித்துக் கொண்டு வா."

"கல்விக் கூடங்கள், அன்னசத்திரங்கள் எதற்கு குருவே? அங்கெல்லாம் கூடவா நாம் பிரசாரம் செய்யப் போகிறோம்?"

"நீ பார்த்து விட்டு வா. அப்புறம் சொல்கிறேன்" என்றார் குரு.

ற்று நேரம் கழித்துத் திரும்பி வந்த வினயன், "குருவே! இந்த ஊரில் ஒரு சில வேதபாடசாலைகள் இருக்கின்றன. ஆனால் அவை வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆங்காங்கே ஓரிரு மாணவர்கள் மட்டும்  அமர்ந்து குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் விசாரித்தபோது வேதங்களைக் கற்கவோ, கற்பிக்கவோ ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள். ஒரே ஒரு கல்விச்சாலை இருக்கிறது. அதுவும் இப்போது இயங்கவில்லையாம். கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. அது போல் அன்னசத்திரங்களும் இந்த ஊரில் இல்லையாம். யாரோ ஒருவர் மட்டும் தன்னால் இயன்ற அளவுக்கு வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு உணவு வழங்குவதாகச் சொன்னார்கள். அவரிடம் போய்தான் நம் இருவருக்கும் சிறிது உணவு வாங்கி வந்தேன்" என்றான்.

"நல்லது. அப்படியானால், உணவருந்தி விட்டு, சற்று நேரம் இந்த மர நிழலிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு விட்டு வேறு ஊருக்குச் சென்று பார்க்கலாம்" என்றார் குரு.

மூன்று நாட்களுக்குப் பிறகு, "இந்த நாடு நமக்கு ஏற்றதல்ல. இங்குள்ள மக்கள் எவரும் ஆன்மீகத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனநிலையில் இல்லை என்று நினைக்கிறேன். நாம் வேறொரு நாட்டுக்குச் சென்று நம் பணியைத் தொடரலாம்" என்றார் குரு.

"எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் அரசரைச் சந்திப்பீர்களே! இந்த நாட்டு அரசரைச் சந்திக்காமலேயே போகிறோமே!"

"இந்த நாட்டில் செங்கோல் ஆட்சி நடக்கவில்லை. எனவே அரசரைப் பார்ப்பதில் பயனில்லை."

"செங்கோல் ஆட்சி நடக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள் குருவே? அரசரைப் பற்றி நம்மிடம் யாரும் குறை கூறவில்லையே!"

"இந்த மூன்று நாட்களில் நாம் சென்ற எல்லா ஊர்களிலும் நாம் பார்த்தது என்ன? வேதநூல்கள் ஓதப்படுவதோ, கற்பிக்கப்படுவதோ இல்லை, கல்வி அளித்தல், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், பயணிகளுக்கும் உணவளித்தல் போன்ற அறச் செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அரசனின் செங்கோல் வளையாமல் இருந்தால்தான் அறிவு நூல்கள் கற்கப்படுவதும், அறச் செயல்கள் செய்யப்படுவதும் நடக்கும். ஆட்சி பற்றி மக்கள் யாரும் குறை கூறாததில் வியப்பில்லை.கொடுங்கோல் ஆட்சி பற்றிக் குறை கூற மக்கள் அஞ்சுவது இயல்புதானே?" என்றார் குரு.

"அதனால்தான் வழக்கமாக ஒரு நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்கும் நாம் இந்த நாட்டை விட்டு மூன்று நாட்களில் வெளியேற வேண்டி இருக்கிறது!" என்றான் வினயன்.

 பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

பொருள்:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...