Sunday, January 16, 2022

542. வளைந்த நிழல்!

"வாருங்கள் புலவரே! நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். என் தந்தை ஆண்டபோது அடிக்கடி வந்த தாங்கள் நான் முடிசூட்டிக் கொண்டு ஒரு ஆண்டு கழித்துத்தான் வந்திருக்கிறீர்கள்" என்றான் அரசன் மகிழ்மாறன்.

"ஆம் மன்னரே! தாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது தங்களை வாழ்த்த வந்தேன். அப்புறம் வர சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை" என்றார் புலவர் செவ்வந்தி.

"சரி. நீங்கள் புனைந்த பாடலைக் கூறுங்கள். நாட்டின் தலைசிறந்த புலவர்களுள் ஒருவராக விளங்கிப் பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் உங்கள் பாடலைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்."

புலவர் செவ்வந்தி தன் பாடலைக் கூறியதும் அவையில் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

"சிறப்பான பாடல் புலவரே! ஆனால் நான் என் தந்தையைப் போல் அவ்வளவு தமிழறிவு கொண்டவனல்ல. எனவே பாடலின் பொருளை என் சிற்றறிவுக்குப் புரியும்படி விளக்கி விடுங்களேன்!" என்றான்மகிழ்மாறன் சிரித்தபடியே.

"பாடலின் பொருளை நான் விளக்குவதை விடத் தங்கள் அமைச்சர் விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அமைச்சரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறிய செவ்வந்தி, "தாங்கள் தனிமையில் ஓய்வாக இருக்கும்போது அமைச்சர் தங்களுக்கு இதை விளக்கினால் சிறப்பாக இருக்கும். இப்போது நான் விடைபெறுகிறேன்" என்றார்.

"இருங்கள். பரிசு வாங்காமல் போகிறீர்களே!"

"இருக்கட்டும் மன்னரே! அடுத்த முறை வாங்கிக் கொள்கிறேன்" என்றபடியே கைகூப்பி விடைபெற்றார் செவ்வந்தி.

மகிழ்மாறன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"சொல்லுங்கள் அமைச்சரே! புலவர் பாடிய பாடலின் பொருள் என்ன?" என்றான் மகிழ்மாறன், அமைச்சருடன் தனியே இருந்தபோது.

"மழை பெய்யாததால் வாடிக் கொண்டிருக்கும் பயிர்கள் மழை எப்போது வரும் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் வானில் தெரிபவை வெண்மேகங்கள்தான், மழை கொடுக்கும் கருமேகங்கள் அல்ல. மக்களோ, அரசரின் செங்கோலைப் பார்க்கிறார்கள். செங்கோல் நிமிர்ந்து நின்றாலும் செங்கோலின் கரிய நிழல் வளைந்து தரையில் தவழும் கருமேகம் போல் காணப்படுகிறது. இதுதான் பாடலின் பொருள்" என்றார் அமைச்சர்.

"அது எனக்குப் புரிகிறது. ஆனால் பாடலின் உட்பொருள் என்ன? நாட்டில் மழை இல்லை. பயிர்கள் மட்டுமல்ல, மக்களும் வானத்தைப் பார்த்தபடிதான் இருக்கிறார்கள். அது நான் அறிந்ததுதான். ஆனால் அரசனின் செங்கோல் இங்கே ஏன் வந்தது? செங்கோல் நேராக இருந்தாலும் அதன் நிழல் வளைந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? வெயிலின் கொடுமையைச் சொல்கிறாரா? செங்கோலின் நிழல் கார்மேகம் போல் இருக்கிறது என்றால் செங்கோலின் கருணையைக் குறிப்பிடுகிறாரா, அல்லது இதில் வஞ்சப் புகழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா? இந்தப் பொருளை உங்களிடம் நான் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதன் பொருள் என்ன?"

"அரசே! நான் கூறப் போவதை மற்றவர்கள் கேட்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் தனிமையில் கேட்கும்படி கூறி இருக்கிறார் புலவர். நாட்டில் மழை இல்லை. பயிர்கள் வானத்தைப் பார்க்கின்றன. ஆனால் நாட்டு மக்கள் எப்போதுமே பார்த்துக் கொண்டிருப்பது அரசரின் செங்கோலைத்தான். ஏனென்றால் அதுதான் தங்களை எப்போதும் காக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அப்படி  நடக்கவில்லை என்று கூறுகிறார் புலவர்!" என்று சொல்லி நிறுத்தினார் அமைச்சர்.

"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?" என்றான் மகிழ்மாறன் சற்றே அதிர்ச்சியுடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! நான் ஏற்கெனவே சில முறை இதை உங்களிடம் தெரிவிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் தங்கள் மனம் புண்படக் கூடாது என்று நான் மறைமுகமாகச் சொன்னதாலோ என்னவோ நான் சொல்ல நினைத்ததை என்னால் தங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை."

"நேரடியாகவே சொல்லுங்கள், எதுவாக இருந்தாலும். கேட்டுக் கொள்கிறேன்."

"அரசே! நீங்கள் நல்ல உள்ளம் படைத்தவர். ஆனால் தங்களைச் சுற்றியுள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அரசு அதிகாரிகளைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு சில தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாட்டில் பஞ்சம் நிலவும் இந்தச் சமயத்தில் அரசு அதிகாரிகள் கடுமையான வரி வசூலில் ஈடுபடுகிறார்கள். அரசு கஜானாவில் உள்ள செல்வத்தை அரண்மனையில் சிலர் ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்..."

"இதையெல்லாம் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?" என்றான் அரசன் கோபத்துடன்.

"மன்னிக்க வேண்டும் அரசே! தங்கள் பெயரால் செயல்கள் நடைபெறும்போது அவற்றை நான் எப்படித் தடுக்க முடியும்? தனாதிகாரியே தங்கள் உத்தரவுப்படிதான் தான் வரி வசூலிப்பதாகவும், செலவு செய்வதாகவும் என்னிடம் சொல்கிறார். தாங்கள் அப்படிச் சொல்லி இருக்க மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இப்படிச் செய்வதாக நான் தங்களிடம் சொன்னால் தாங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ!"

"ஓ! அதுதான் புலவர் செங்கோல் நேராக இருக்கிறது, அதன் நிழல் வளைந்திருக்கிறது என்று சொன்னாரோ? நிழலைக் கார்மேகத்துடன் ஒப்பிட்டது கூட நான் கருணை உள்ளவன் என்பதைக் காட்டத்தானா?"

"அப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன் அரசே!"

"நல்லது. அரண்மனையில் உள்ளவர்களைக் கண்டித்துக் கட்டுப்படுத்தி வைக்கிறேன். தனாதிகாரியிடம் சொல்லி வரி வசூலிப்பதை நிறுத்தச் சொல்கிறேன். அத்துடன் அரண்மனை தானியக் கிடங்கில் உள்ள தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுங்கள். நீங்களோ நானோ உத்தரவிட்டலொழிய அரசு அதிகாரிகள் எதையும் செய்யக் கூடாது என்று கடுமையாக எல்லா அதிகாரிகளையும் எச்சரித்து விடுகிறேன். விரைவிலேயே அரசவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் பற்றிக் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்றான் மகிழ்மாறன்.

"நன்றி அரசே! தங்கள் செங்கோல் சற்றும் வளையாதது என்பதை நிருபித்து விட்டீர்கள். தங்கள் தந்தையைப் போல் தாங்களும் மக்களால் நேசிக்கப்படும் மன்னராக விளங்குவீர்கள்!" என்றார் அமைச்சர் பெருமிதத்துடன்.

"ஆனால் எனக்கொரு ஐயம் அமைச்சரே!"

"என்ன அரசே?"

"புலவர் பாடலைத் தானே எழுதினாரா, அல்லது பாடலின் கருப்பொருள் பற்றி அவருக்கு யாராவது யோசனை கூறினார்களா?" என்றான் மகிழ்மாறன் குறும்பாகச் சிரித்தபடி.

"தாங்கள் இட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும். விடை பெறுகிறேன் அரசே!" என்று பதில் சொல்லாமல் நழுவினார் அமைச்சர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...