Saturday, January 15, 2022

541. மாறிய தீர்ப்பு!

"அரசே! இது மிகச் சாதாரண வழக்கு. திருடியவன் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறான். வழக்கை விசாரித்து நீதிபதி தண்டனை அளித்திருக்கிறர். திருட்டுப் போன பொருளும் கிடைத்து விட்டது. இதைத் தாங்கள் மறுவிசாரணை செய்யத்தான் வேண்டுமா?" என்றார் அமைச்சர்.

"பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் அவசரத் தீர்ப்பால் அப்பாவி கோவலன் கொல்லப்பட்டு, நியாயம் கேட்ட கண்ணகியின் கோபத்தால் மதுரை நகரமே பற்றி எரிந்த வரலாறு உங்களுக்குத் தெரியாதது அல்லவே! அது போன்ற தவறு நாம் நாட்டில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மேல்முறையீடு முறையை வைத்திருக்கிறேன். பெரும்பலோர் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர்தான் மேல்முறையீடு செய்கிறார்கள். அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுப்பதில் தவறில்லையே?" என்ற அரசர், "சரி. வழக்கை விசாரித்த நீதிபதி வந்திருக்கிறார் அல்லவா?" என்றார்.

"வந்திருக்கிறார் மன்னவா!" என்ற அமைச்சர் ஒரு காவலனை அழைத்து நீதிபதியை வரச் சொன்னார்.

நீதிபதி வந்ததும் அவரை அமரச் சொன்ன அரசர், "நீங்கள் ஒரு கல்வி கற்ற அனுபவமுள்ள நீதிபதி. எனவே நன்கு விசாரித்து, நன்கு சிந்தித்துத்தான் இந்தத் தீர்ப்பை வழங்கி இருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருப்பவர் மேல்முறையீடு செய்திருப்பதால், நீங்கள், அமைச்சர், நான் மூவரும் சேர்ந்து இந்த வழக்கின் விவரங்களை மீண்டும் ஒரு முறை பார்க்கப் போகிறோம்" என்றார்

"அப்படியே ஆகட்டும் அரசே!" என்றார் நீதிபதி.

"சரி. வழக்கின் விவரங்களைச் சொல்லுங்கள்."

"காந்தாமணி என்ற பெண்மணி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெரு ஓரத்தில் எங்கோ மறைந்திருந்த ஒருவன் திடீரென்று குறுக்கே வந்து தன் கையிலிருந்த கத்தியால் அவள் கழுத்தில் அணிந்திருந்த அட்டிகையை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். அந்தப் பெண்மணி கூச்சல் போட்டதும் அக்கம்பக்கத்திலிருந்து சிலர் அந்தத் திருடனைத் துரத்தினார்கள். அதில் ஒருவர் திருடனைப் பிடித்து அவனிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கி விட்டார். அதற்குள் மற்றவர்களும் அங்கே வந்து எல்லோருமாகச் சேர்ந்து திருடனைக் காவலர்களிடம் ஓப்படைத்தார்கள்" என்றார் நீதிபதி.

"ஓ! அவ்வளவு எளிமையான வழக்கா?" என்ற அரசர் ஓரிரு நிமிடங்கள் யோசித்து விட்டு, "பிடிபட்டவன் என்ன சொல்கிறான்?" என்றார்.

"பிடிபட்டவனின் பெயர் நீலவன். அவன் தெருவோரம் வசிப்பவன். சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தான் ஓடி வந்ததாகவும், சிலர் தன்னைத் திருடன் என்று தவறாக நினைத்துப் பிடித்து விட்டாகவும்சொல்கிறான்."

"அப்படியானல், அட்டிகை அவனிடம் எப்படி வந்ததாம்?" என்றார் அ மைச்சர் எகத்தாளமாக.

"தன்னிடம் அட்டிகை இருந்ததையோ, அதைத் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள் என்பதையோ அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை."

"அவனைப் பிடித்தவர் அவனிடமிருந்து அட்டிகையைப் பிடுங்கியதை யாராவது பார்த்தார்களா?" என்றார் அரசர்.

"இல்லை. அவனைப் பிடித்ததைத்தான் பார்த்தார்கள். பின்னால் சற்றுத் தொலைவில் ஓடி வந்து கொண்டிருந்தவர்களால் திருடனிடமிருந்து அட்டிகை பிடுங்கப்பட்டதைப் பார்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்றார் நீதிபதி சற்று தயக்கத்துடன்.

"சரி. திருடனைப் பிடித்தவரின் பின்னணி என்ன?" என்றார் அரசர்.

"அவர் பெயர் சோமன். அவர் சமூகத்தில் ஒரு கண்ணியமான மனிதர். ஒரு சிறிய வியாபாரி."

"சரி. நான் ஒன்று கேட்கிறேன். ஒருவேளை பிடிபட்டவர் கண்ணியமானவராக இருந்து, பிடித்தவர் தெருவோரம் வசிப்பவராக இருந்து, பிடிபட்டவர் தான் திருடவில்லை என்று சொல்லி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றார் மன்னர்.

"அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று யோசித்திருப்பேன்!" என்றார் நீதிபதி தயக்கத்துடன்.

"பிடிபட்டவன் தெருவோரம் வசிப்பவன் என்பதால் அவன் திருடி இருப்பான் என்பதை நாம் சுலபமாக நம்பி விடுகிறோம். காவலர்களிடம் சொல்லி திருடனைப் பிடித்ததாகச் சொன்ன சோமனின் பின்னணியை விசாரிக்கச் சொல்லுங்கள், விசாரணை முடிந்ததும் என்னை வந்து பாருங்கள்" என்றார் அரசர்.

ரண்டு நாட்களுக்குப் பிறகு அரசரைச் சந்தித்த நீதிபதி, "மன்னித்து விடுங்கள் அரசே! என் தீர்ப்பு தவறுதான். தங்கள் அறிவுரைப்படி சோமனின்பின்னணியை விசாரித்ததில் அவருக்குக் கடன் தொல்லைகள் இருப்பதாகத் தெரிய வந்தது. காவலர்கள் அவரை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில் அவர்தான் அந்தப் பெண்ணின் சங்கிலியை அறுத்ததாகவும், பின்னால் பலர் துரத்திக் கொண்டு வந்ததும், தான் அகப்பட்டுக் கொள்வோம் என்ற பயத்தில் தெருவில் குறுக்கே வந்த ஒரு நபரைப் பிடித்து அவரிடமிருந்து சங்கிலியைப் பிடுங்கியதாகச் சொல்லித் தான் தப்பிக்க முயன்றதாகவும் ஒப்புக் கொண்டு விட்டார். தாங்கள் அனுமதி அளித்தால், நீலவனை விடுவித்து சோமனுக்கு தண்டனை அளித்து என் தீர்ப்பை மாற்றி எழுதி விடுகிறேன்" என்றார் பதைபதைப்புடன்.

"நல்லது. அப்படியே செய்து விடுங்கள். தவறு நேர்வது இயல்புதான். அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எந்த ஒரு நபரையும் அவருடைய பின்னணியைப் பொருட்படுத்தாமல் தீர ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதில் கவனம் செலுத்துங்கள்!" என்றார் அரசர்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 55
செங்கோன்மை

குறள் 541:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பொருள்:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடு நிலைமையில் நின்று, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்
 அறத்துப்பால்                                                            காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...